ADDED : பிப் 02, 2024 01:41 AM
கோவை:திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளராக பணியாற்றி வருபவர் நேச பிரபு. சட்ட விரோதமாக பார் நடத்தியது தொடர்பாக செய்தி வெளியிட்டதால், கடந்த 24ம் தேதி, மர்ம கும்பல் அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பினர். படுகாயமடைந்த நேச பிரபுவுக்கு, கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
காமநாயக்கன் பாளையம் போலீசார் வழக்கு பதிந்து, தனிப்படை அமைத்து கும்பலை தேடி வந்தனர். இச்சம்பவம் தொடர்பாக, பிரவீன், சரவணன், பாலபாரதி, ஹரிகரன், ஜெயபிரவீன், முகமது சபி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும் தொடர்புடைய சிலரை போலீசார் தேடி வந்த நிலையில், பல்லடத்தை சேர்ந்த அன்பு கிருபாகரன், 20, கோவை ஜே.எம்:7, கோர்ட்டில் நேற்று சரணடைந்தார். அவரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டதை தொடர்ந்து, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

