/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கேலோ இந்தியா கூடைப்பந்து: கோவையில் இன்று துவக்கம்
/
கேலோ இந்தியா கூடைப்பந்து: கோவையில் இன்று துவக்கம்
ADDED : ஜன 20, 2024 08:25 PM
கோவை:கேலோ இந்தியா விளையாட்டு கூடைப்பந்து போட்டியில், தங்கப்பதக்கத்தை கைப்பற்றும் முனைப்பில் தமிழக அணி களம் இறங்குகிறது.
ஆறாவது, கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் சென்னை, மதுரை, கோவை, திருச்சி ஆகிய நான்கு இடங்களில் நடக்க உள்ளன. நேற்று முன்தினம் துவங்கிய போட்டிகள், வரும், 31 வரை நடக்கின்றன. இதில், கோவை பீளமேட்டில் உள்ள பி.எஸ்.ஜி., மருத்துவக் கல்லுாரி உள்விளையாட்டு அரங்கில் இன்று முதல், 25ம் தேதி வரை தேசிய அளவிலான கேலோ இந்தியா கூடைப்பந்து, வரும் 28ம் தேதி முதல், 30 வரை தாங் டா போட்டிகளும் நடக்கின்றன.
இதில் கலந்து கொள்ள பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கோவையில் உள்ள பி.எஸ்.ஜி., மருத்துவக் கல்லுாரிக்கு வந்துள்ளனர்.
இவர்களுக்கான தங்கும் இடம், உணவு, போக்குவரத்து ஆகிய வசதிகளை மத்திய, மாநில விளையாட்டு துறை அமைப்புகள் ஏற்படுத்தியுள்ளன. கூடைப்பந்து ஆண்கள் குரூப் 'ஏ' பிரிவில், உத்திரபிரதேசம், பஞ்சாப், மத்தியபிரதேசம், மிசோரம் அணிகளும், 'பி' பிரிவில், தமிழகம், ராஜஸ்தான், கர்நாடகா, சண்டிகர் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.
பெண்கள் குரூப் 'ஏ' பிரிவில், தமிழகம், மகாராஷ்டிரா, கேரளா, சண்டிகர் அணிகளும், குரூப் 'பி' பிரிவில், சத்தீஸ்கர், பஞ்சாப், உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. போட்டிகளை காண பொதுமக்களுக்கு அனுமதி இலவசம்.
கடந்த முறை கேலோ இந்தியா கூடைப்பந்து போட்டியில், தமிழக அணி வெள்ளிப்பதக்கம் வென்றது. இதையடுத்து இம்முறை தங்கப்பதக்கம் வெல்ல தமிழக அணி தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறது.

