/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோளராம்பதி குள கரையெல்லாம் குப்பை கூளம்! அழகான அல்லிகுளம் அலங்கோலமாகும் அவலம்
/
கோளராம்பதி குள கரையெல்லாம் குப்பை கூளம்! அழகான அல்லிகுளம் அலங்கோலமாகும் அவலம்
கோளராம்பதி குள கரையெல்லாம் குப்பை கூளம்! அழகான அல்லிகுளம் அலங்கோலமாகும் அவலம்
கோளராம்பதி குள கரையெல்லாம் குப்பை கூளம்! அழகான அல்லிகுளம் அலங்கோலமாகும் அவலம்
ADDED : பிப் 02, 2024 12:13 AM

கோவை;பேரூர் அருகேயுள்ள கோளராம்பதி குளத்தின் கரையில், ஏராளமான மது பாட்டில்களும், பிளாஸ்டிக் குப்பைகளும் குவிந்து கிடப்பது, சூழல் ஆர்வலர்களை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
நொய்யல் ஆறு பாயும் குளங்களில், பேரூர்-வேடபட்டி ரோட்டில் அமைந்துள்ள கோளராம்பதி குளமும் ஒன்று. தொண்டாமுத்துார் ரோட்டிலிருந்து நாகராஜபுரம் குடியிருப்புப் பகுதி வழியாக, பேரூர் செல்வதற்கான பாதையில் இந்த குளத்தின் கரைப்பகுதி உள்ளது.
சுற்றிலும் விவசாய நிலங்கள் அமைந்துள்ள இந்த குளத்துக்கு அருகில், சமீபகாலமாக குடியிருப்புகள் அதிகமாக முளைத்து வருகின்றன.
நாட்டுக்கருவேல மரங்களுக்கு இடையில் தண்ணீர் நிற்கும் இந்த குளத்தில் தான், வேறு எந்தக் குளத்திலும் இல்லாத அளவுக்கு அல்லி மலர்கள் அதிகளவில் பூத்திருக்கும்.
இந்த குளத்தின் கரை முழுவதும் பார்த்தீனியம் உள்ளிட்ட களைச்செடிகள் ஏராளமாக முளைத்து, குளமே தெரியாத அளவுக்கு மறைத்துள்ளன. இதைப் பயன்படுத்தி, அங்கு குப்பை கொட்டுவது அதிகரித்துள்ளது.
நேற்று முன் தினம், இந்த குளத்தின் கரையில், ஏராளமான மது பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் பாட்டில்களும் ஏராளமாகக் கொட்டப்பட்டுள்ளன. குளத்துக்கு அருகில் கரையிலேயே குடித்து விட்டு எறிந்து சென்றார்களா அல்லது வேறு எங்காவது குடித்துவிட்டு, அந்தக் குப்பைகளை மொத்தமாக இங்கே வந்து கொட்டியுள்ளார்களா என்பது தெரியவில்லை.
வேடபட்டி பேரூராட்சிக்குட்பட்ட இந்த கரைப்பகுதியில் துப்புரவுப் பணி என்பது பெயரளவுக்கும் நடப்பதில்லை என்பது, அங்கு குவிந்துள்ள குப்பையிலிருந்தே தெளிவாகத் தெரிகிறது.
கோவை நகருக்குள் சாக்கடை சங்கமமாகவுள்ள பல குளங்களைத் துார் வாருவது, சுத்தம் செய்வது என பல பணிகளையும் பல்வேறு சூழல் அமைப்புகள் தொடர்ந்து செய்து வருகின்றன. ஆனால் புறநகரப் பகுதியிலுள்ள இந்த கோளராம்பதி குளத்தின் கரையை, யாருமே கண்டு கொண்டதாகத் தெரியவில்லை. இதனால் அழகான இந்த குளம், அலங்கோலமாக மாறிவருகிறது.
வேடபட்டி பேரூராட்சி நிர்வாகமும், தொண்டாமுத்துார் போலீசாரும் இணைந்து, இந்த குளப்பகுதியை சுத்தம் செய்யவும், கண்காணிப்பை தீவிரப்படுத்தி, அந்த குளத்தின் கரையில் குப்பை கொட்டுவதைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதே சூழல் ஆர்வலர்களின் கோரிக்கையாகவுள்ளது.

