/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவையில் தனியார் துணைமின் நிலையம் விரைவில் 'டெண்டர்' கோருகிறது அரசு
/
கோவையில் தனியார் துணைமின் நிலையம் விரைவில் 'டெண்டர்' கோருகிறது அரசு
கோவையில் தனியார் துணைமின் நிலையம் விரைவில் 'டெண்டர்' கோருகிறது அரசு
கோவையில் தனியார் துணைமின் நிலையம் விரைவில் 'டெண்டர்' கோருகிறது அரசு
ADDED : ஜூன் 19, 2025 11:15 PM
சென்னைமுதல் முறையாக தனியார் நிறுவனம் வாயிலாக,'கோவை 765 கிலோ வோல்ட் துணைமின் நிலையம்' அமைக்கப்பட உள்ளது. இதற்கு தகுதியான நிறுவனத்தை தேர்வு செய்ய, விரைவில் 'டெண்டர்' கோரப்பட உள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் புதிய அனல் மின் நிலையங்களை மின் வாரியம் அமைக்கிறது. தென் மாவட்டங்களில் காற்றாலை, சூரியசக்தி மின் நிலையங்களை தனியார் நிறுவனங்கள் அமைக்கின்றன.
இவற்றில் உற்பத்தியாகும் மின்சாரத்தை, மாநிலம் முழுதும் எடுத்து செல்வதற்கு, திருவள்ளூரில் வடசென்னை அனல் மின் நிலைய வளாகம், கள்ளக்குறிச்சி, அரியலுார், விருதுநகர், கோவையில் தலா, 765 கிலோ வோல்ட் திறனில் துணைமின் நிலையங்கள், அவற்றை இணைக்க அதே திறனில் மின் வழித்தடங்களை மின் வாரியம் அமைத்து வருகிறது.
கடந்த 2014 - 15ல் துவங்கப்பட்ட அரியலுார் 765 கி.வோ., துணைமின் நிலையம், 2023 டிசம்பரிலும், வடசென்னை 765 கி.வோ., துணைமின் நிலையம், 2024 பிப்ரவரியிலும் செயல்பாட்டிற்கு வந்தன.
தற்போது, விருதுநகர் துணைமின் நிலையத்தின் கட்டுமான பணிகள் முடிந்துள்ளன. 'கோவை 765 கி.வோ., துணைமின் நிலையம்' திருப்பூர் மாவட்டம், குன்னத்துார் அருகில் அமைக்கப்பட உள்ளது.
இதற்கு, 91 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்ட நிலையில், சிலரின் எதிர்ப்பால், மீதமுள்ள 31 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தும் பணியில் தாமதம் ஏற்பட்டது.
நீண்ட இழுபறிக்கு பின், நிலம் எடுப்பு பணி தற்போது துவங்கியுள்ளது. இதுவரை துணைமின் நிலையங்களை அமைக்க, மின் வாரியம் டெண்டர் கோரும். அதில் தேர்வாகும் நிறுவனத்துக்கு பணி ஆணை வழங்கப்படும். அந்நிறுவனம், துணைமின் நிலைய பணிகளை முடித்து, மின் வாரியத்திடம் ஒப்படைத்து விடும். அதை, மின் வாரியம் பராமரிக்கும்.
தமிழகத்தில் 200 கோடி ரூபாய்க்கு மேல் செலவு உடைய துணைமின் நிலையங்கள், மின் வழித்தடங்களை, தனியார் அமைத்து பராமரிக்கும் வகையில், புதிய விதிகளை, 2024ல் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டது. அதன் அடிப்படையில், கோவை துணைமின் நிலையம், 'கட்டண அடிப்படையிலான போட்டி ஏல முறை' வாயிலாக நிறுவப்பட உள்ளது.
அதன்படி, துணைமின் நிலையம் அமைக்கும் பணிக்கு, அரசு விரைவில் டெண்டர் வெளியிட உள்ளது. இதற்கான ஆலோசனைகளை, தமிழக உள்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியம் வழங்கியுள்ளது. இந்த டெண்டரில், எந்த நிறுவனம் வேண்டுமானாலும் பங்கேற்கலாம்.
குறைந்த விலை புள்ளி வழங்கும் நிறுவனத்துக்கு ஆணை வழங்கப்படும். அந்நிறுவனம் தன் செலவில் துணைமின் நிலையத்தை அமைத்து பராமரிக்க வேண்டும். அதை பயன்படுத்துவதற்கான கட்டணத்தை, மின் வாரியம் செலுத்த வேண்டும். முதல் முறையாக கோவை துணைமின் நிலையம், தனியார் வாயிலாக அமைத்து பராமரிக்கப்பட உள்ளது.