/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஜல்லிக்கட்டு காளை திமிறுகிறது! மலர் கண்காட்சியில் அத்தனையும் தத்ரூபம்
/
ஜல்லிக்கட்டு காளை திமிறுகிறது! மலர் கண்காட்சியில் அத்தனையும் தத்ரூபம்
ஜல்லிக்கட்டு காளை திமிறுகிறது! மலர் கண்காட்சியில் அத்தனையும் தத்ரூபம்
ஜல்லிக்கட்டு காளை திமிறுகிறது! மலர் கண்காட்சியில் அத்தனையும் தத்ரூபம்
ADDED : பிப் 24, 2024 12:16 AM

கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலையில், நேற்று துவங்கிய மலர் கண்காட்சியில், 3,000 'துலிப்' மலர்கள் உட்பட, 1.2 லட்சம் மலர்கள், பார்வையாளர்களை வசியப்படுத்துகின்றன.
12 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் இக்கண்காட்சியை, டில்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி கழக இணை இயக்குனர்(கல்வி) அகர்வால், வேளாண் பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி ஆகியோர் ரிப்பன் வெட்டி, துவக்கி வைத்தனர்.
காலை, 8:00 முதல் இரவு, 8:00 மணி வரை நடைபெறும் கண்காட்சிக்கு, நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.100, சிறியவர்களுக்கு ரூ.50 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கண்காட்சியில், வண்ணமயமான மலர்கள் மற்றும் சிறுதானியங்களின் கலவையிலான பல்வேறு வடிவங்கள், பார்வையாளர்களை கவர்கின்றன.
கண்காட்சி நுழைவில் மலர்களால் வடிவமைக்கப்பட்ட யானை, பெரிய மலர் கூடையில் அமர்ந்துள்ள திருவள்ளுவர், முயல் கேரட் சாப்பிடுவது, இந்தியா ஒளிரட்டும் என்பதை மையமாக கொண்டு, பெரிய அகல்விளக்கு ஆகியன அனைவரையும் ஈர்க்கின்றன.
இந்த கண்காட்சியில், வண்ண வாசனை உலர் மலர்கள், பாரம்பரிய உதிரி மலர்கள் மனதை வசீகரிப்பதுடன், நோய்களை குணப்படுத்தும் பல்வேறு மூலிகை செடிகள் அடங்கிய மூலிகைகளின் சங்கமமும் உள்ளது.
துணைவேந்தர் கீதாலட்சுமி நிருபர்களிடம் கூறுகையில், ''தமிழ்நாடு வேளாண் பல்கலையுடன் ரோட்டரி சங்கமும் இணைந்து நடத்தும், கண்காட்சியில்நெதர்லாந்து நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட, 3000 'துலிப்' மலர்கள் உட்பட, 1.2 லட்சம் மலர்கள் காண்போரை கவரும் வகையில் உள்ளன. மலர்கள், தானியங்களின் கலவையாக 'செஸ் போர்டு',வாடிவாசலில் இருந்து பாய்ந்துவரும் காளையை அடக்கும் வீரர் ஆகியன, மாணவர்களின் திறமையை வெளிப்படுத்துகிறது,'' என்றார்.
காலை 9:00 முதல் இரவு 7:00 மணி வரை நடைபெறும் இக்கண்காட்சி, நாளை மாலையுடன் நிறைவு பெறுகிறது.

