/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாசிப்பு திறனால் பாட அறிவு, உலக அறிவு வளரும்!
/
வாசிப்பு திறனால் பாட அறிவு, உலக அறிவு வளரும்!
ADDED : ஜன 24, 2024 12:06 AM
ஆனைமலை:ஆனைமலை அருகே ரெட்டியாரூர் பள்ளி மாணவரின் சிறுகதை நுால் வெளியீட்டு விழா நடந்தது.
ஆனைமலை அருகே, ரெட்டியாரூர் என்.ஜி.என்.ஜி., மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 2 மாணவன் சபரிகிரி எழுதிய 'பயணிகள் நிழற்குடை' என்னும் சிறுகதை நுால் வெளியீட்டு விழா நடந்தது. பள்ளிச் செயலர் ரங்கசாமி நுாலை வெளியீட, தலைமையாசிரியர் கிட்டுச்சாமி பெற்றுக்கொண்டார்.
தமிழாசிரியர் செந்தில்குமார், நுாலை அறிமுகம் செய்து பேசியதாவது:
மாணவர்களின் படைப்புத்திறனை வளர்க்கும் விதமாக, பள்ளியின் தமிழ் இலக்கிய மன்றம் செயல்படுகிறது. கடந்தாண்டு மாணவி ஒருவரின் கட்டுரை நுால் ஒன்று வெளியீடு செய்யப்பட்டது. இந்த ஆண்டு மாணவர் சபரிகிரியின் சிறுகதை நுால் வெளியீடு செய்யப்பட்டுள்ளது.
மாணவர்கள் பாட அறிவோடு, உலகியல் அறிவையும் தெரிந்து கொள்வதற்காக அவர்களுக்கு வாசிப்புப் பழக்கத்தை அளித்து வருகிறோம். மாணவர்கள் ஒவ்வொருவரின் தனித்திறமையை அடையாளம் கண்டு அதற்கேற்றவாறு வழிகாட்டுதல் செய்யப்படுகின்றது.
கற்பனைத்திறன் படைப்பாக்கத்திறன் எழுதுதல் திறன் போன்ற திறன்கள் வளர்க்கப்பட்டு மாணவர்களின் கற்றலில் முன்னேற்றத்தை அடைய வழிவகை காணப்படுகிறது.
பயணிகள் நிழற்குடை நுாலில், மொத்தம், 13 சிறுகதைகள் உள்ளன. அவற்றில் மாணவர் தான் கண்ட வாழ்வின் அனுபவங்களையும் சமூக செயற்பாடுகளையும் உற்று நோக்கி சிறுகதைகளைப் படைத்துள்ளார்.
மாணவர்கள் தங்கள் பார்வையில் ஒரு சூழலை எவ்வாறு அணுகுகின்றனர் என்பதும் தெரிய வருகிறது.
இவ்வாறு, அவர் கூறினார்.
வாசிப்பை நேசி
மாணவர் சபரிகிரி கூறியதாவது:
வாசிப்பு பழக்கம் பொதுவாக நாம் மொழியை கற்றுக்கொள்ளவும், சரளமாக பேச, எழுதவும் உதவியாக இருக்கிறது. பல்வேறு தகவல்களை தெரிந்து கொள்ளவும் நமக்கு வாசிப்பு தேவைப்படுகிறது.
புத்தகங்கள், செய்தித்தாள்கள், கட்டுரைகள், கதைகள் போன்றவற்றை வாசிப்பதன் வாயிலாக அறிவார்ந்த பல தவல்கள் நமக்கு கிடைக்கின்றன.
வாசிப்பினால் ஒரு சொல்லுக்கு பல பொருட்களை நம்மால் தெரிந்து வைத்துக்கொள்ள முடியும். அதன் வாயிலாக, தேவையான இடத்தில் தேவையான சொற்களை பயன்படுத்தவும் முடியும்.
வாசிப்பு என்பது நம்மை செதுக்கும் நம்மை மெருகேற்றும் ஒன்றாக உள்ளது. இன்று நாம் புத்தகங்களை தலைகுனிந்து வாசிப்பது நாளை நம்மை தலைநிமிர்ந்து நடக்க வைக்கும். அனைவரும் வாசிப்போம்; வாசிப்பை நேசிப்போம்.
இவ்வாறு, அவர் கூறினார்.

