/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி:நிவாரணம் வழங்க அரசுக்கு கோரிக்கை
/
கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி:நிவாரணம் வழங்க அரசுக்கு கோரிக்கை
கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி:நிவாரணம் வழங்க அரசுக்கு கோரிக்கை
கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி:நிவாரணம் வழங்க அரசுக்கு கோரிக்கை
ADDED : பிப் 01, 2024 10:19 PM

சோமனூர்:பாவு நுால் வழங்குவது படிப்படியாக குறைந்து வருவதால், வேலைவாய்ப்பு குறைந்துகைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி வருகிறது. வாழ்க்கைக்கு வழி காட்ட அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
சோமனூர், கருமத்தம்பட்டி, வாகராயம் பாளையம், வினோபா நகர், சுப்பராயன்புதூர், செல்லப்பம்பாளையம், குமாரபாளையம் பகுதிகளில், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைத்தறிகள் உள்ளன. இத்தொழிலை நம்பி, 7 ஆயிரத்து, 500 நெசவாளர் குடும்பங்கள் உள்ளன. பாரம்பரியமாக கைத்தறி தொழில் செய்து வரும் இவர்கள், தற்போது, வேலைவாய்ப்பு இல்லாமல், தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
பாவு நுால் வழங்குவது குறைப்பு
கைத்தறிகளில் பெரும்பாலும் பட்டு சேலைகள், காட்டன் சேலைகள் நெய்யப்படுகின்றன. அதற்கான பாவு நூல்கள் தனியார் நிறுவனங்கள், வியாபாரிகளிடம் இருந்து பெறப்பட்டு, சேலைகள் நெய்யப்பட்டு, அவர்களுக்கே திருப்பி கொடுத்து, கூலியை மட்டும் நெசவாளர்கள் பெற்று வருகின்றனர்.
ஒரு கைத்தறியில் ஒரு பட்டு அல்லது ஒரு காட்டன் சேலை நெசவு செய்ய, குறைந்தது மூன்று நாட்கள் ஆகும். ஒரு சேலை நெசவு செய்தால், 1000 ரூபாய் கூலியாக கிடைக்கும். ஜக்காடு முறையில் பட்டு நெசவு செய்ய, 2 ஆயிரம் ரூபாய் வரை கூலியாக வழங்கப்பட்டு வந்தது.
விற்பனை இல்லை
கடந்த ஒரு ஆண்டாக, கைத்தறி நெசவாளர்களுக்கு முறையாக பாவு நூல்களை வியாபாரிகள் வழங்குவது இல்லை. பட்டு சேலைகள் விற்பனை குறைந்து விட்டதாக காரணம் கூறும் வியாபாரிகள், கூலியையும் குறைத்து கொடுத்து வருவதால், நெசவாளர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். கைத்தறி சங்கங்களில் உறுப்பினராக இருக்கும் நெசவாளர்களுக்கு ஓரளவுக்கு வேலைகள் கிடைக்கின்றன. சங்கத்தில் இல்லாமல், தனியாக நெசவு செய்யும் நெசவாளிகளின் நிலை தான் மோசமாகி, வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர்.
நிறுவனங்கள் உற்பத்தியை குறைத்ததால், வேலை இழப்பை நெசவாளர்கள் சந்தித்து வருகின்றனர்.
இதுகுறித்து, தமிழ்நாடு நெசவு தறிக்காரர்கள் வாழ்வுரிமை சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் ராமசாமி கூறியதாவது: கடந்த ஒரு ஆண்டாக பட்டு நூல் விலை அதிகளவில் உயர்ந்ததாலும், சேலைகள் தேக்கமடைந்ததாலும் வியாபாரிகள் சேலைகள் தயாரிப்பை நிறுத்திவிட்டனர்.
வாரம் நான்கு சேலைகள் நெய்ய பாவு நூல் கொடுத்து வந்தவர்கள், தற்போது, வாரத்துக்கு ஒரு சேலைக்கான பாவு நூல் கூட கொடுப்பதில்லை. இதனால், மாதக்கணக்கில் வேலை இல்லாமல் தவிக்கும் நிலை உள்ளது. கைத்தறி ரகங்களை விசைத்தறியில் நெய்வதாலும் எங்களுக்கு பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
70 சதவீத நெசவாளர்கள் தனியாரை நம்பித்தான் உள்ளனர். ஆனால், அவர்களும் கையை விரித்து வருகின்றனர்.
நெசவாளர்கள் அனைவரையும் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக்கி பாவு நூல் கொடுக்க வேண்டும். நெசவாளர்களுக்கு என தனியாக வங்கி துவக்க வேண்டும். பாதிக்கப்பட்ட நெசவாளர்களுக்கு, 15 ஆயிரம் ரூபாய் நிவாரணம் கொடுக்க வேண்டும், என, முதல்வரிடம் கோரிக்கை விடுத்தோம். இதுவரை எந்த பலனும் இல்லை. அரசு எங்களுக்கு வேலை வாய்ப்பை கொடுத்து வாழ வைக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

