ADDED : செப் 17, 2025 11:41 PM
கோவை: கோவை, பாரதிபுரம், பங்காரு லே-அவுட்டை சேர்ந்தவர் விவேகன் மணி, 72; பெயின்டர். பாரதிபுரம் பகுதியில் கடை ஒன்றில் பெயின்டிங் வேலை செய்து கொண்டிருந்தார். கால் தவறி, கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அப்பகுதியினர் மீட்டு, கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சிங்காநல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
//
மனைவியை மிரட்டிய கணவர் கைது
குனியமுத்துார், குறிஞ்சி நகரை சேர்ந்தவர் சுமையா, 29. கணவர் சுரேஷை பிரிந்து பெற்றோர் வீட்டில் வசிக்கிறார். விவாகரத்து வழக்கு குடும்ப நல கோர்ட்டில் நடக்கிறது. 15ம் தேதி இவரது வீட்டுக்கு வந்த சுரேஷ், தன்னுடன் சேர்ந்து வாழ வேண்டுமென, இரும்பு ராடை காட்டி, மிரட்டினார். குனியமுத்துார் போலீசார் விசாரித்து, சுரேஷை கைது செய்தனர்.
கல்லால் தாக்கப்பட்டவர் மருத்துவமனையில் அனுமதி
கவுண்டம்பாளையம் ஹவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் ராஜசேகர், 41. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கும் தவறான பழக்கம் இருந்தது. அவரது கணவர் மணிகண்டன், 42 கண்டித்து வந்தார். இருப்பினும், இருவருக்கும் இடையே பழக்கம் தொடர்ந்தது. நேற்று முன்தினம் ராஜசேகர், ரோட்டில் நின்று கொண்டிருந்தார். அங்கு சென்ற மணிகண்டன் மற்றும் அப்பெண்ணின் தாயார் இருவரும் சேர்ந்து, ராஜசேகரை தகாத வார்த்தைகளால் திட்டி, கல்லை எடுத்து தாக்கினர். அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ரத்தினபுரி போலீசார் விசாரிக்கின்றனர்.

