/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மேய்ச்சலுக்கு விடும் கால்நடைகளை கூர்ந்து கவனியுங்க! உணவுக்கு ஏற்ப மாறுபடும் பாலின் 'சுவை'
/
மேய்ச்சலுக்கு விடும் கால்நடைகளை கூர்ந்து கவனியுங்க! உணவுக்கு ஏற்ப மாறுபடும் பாலின் 'சுவை'
மேய்ச்சலுக்கு விடும் கால்நடைகளை கூர்ந்து கவனியுங்க! உணவுக்கு ஏற்ப மாறுபடும் பாலின் 'சுவை'
மேய்ச்சலுக்கு விடும் கால்நடைகளை கூர்ந்து கவனியுங்க! உணவுக்கு ஏற்ப மாறுபடும் பாலின் 'சுவை'
ADDED : ஜூன் 24, 2025 10:19 PM

குப்பை, பிளாஸ்டிக் கழிவுகளை உண்பதுடன், கழிவுநீரை குடிக்கும் கால்நடைகள் நோய் பாதிப்புக்குள்ளாவதுடன், அதன் பாலின் சுவையும் மாறுபடும் வாய்ப்புள்ளது; எனவே, கால்நடைகளை கவனமுடன் பராமரிக்க வேண்டும்.
கோவை மாவட்டத்தில் ஆடு, மாடு, எருமை என, 1.25 லட்சத்துக்கும் மேற்பட்ட கால்நடைகளை விவசாயிகள் வளர்க்கின்னறர். புறநகரை பொறுத்தவரை மேய்ச்சல் நிலங்கள் அதிகம் இருப்பதால் தீவன தட்டுப்பாடு பிரச்னை குறைவு.
அதேசமயம், நகரில் வசிக்கும் கால்நடை விவசாயிகள், பெரும்பாலும் புறநகரங்களில் இருந்து வாகனங்களில் விற்பனைக்கு வரும் மக்காச்சோளத்தை வாங்கி உணவாக அளிக்கின்றனர். புண்ணாக்கு, தவிடு போன்ற கலப்பு தீவனங்களை வைத்தே, கால்நடைகளின் வயிற்றை நிரப்புகின்றனர்.
குளக்கரைகளை ஒட்டிய பகுதிகளில் புற்கள் அறுவடை செய்து ஆடு, மாடுகளுக்கு வழங்குகின்றனர். நகரில் எவ்வித கட்டுப்பாடும் இன்றி அவிழ்த்து விடப்படும் கால்நடைகள் குப்பையில் உணவு தேடுவதுடன், ரோட்டோரத்தில் வளர்ந்துள்ள புல், செடிகளை உணவாக உட்கொள்கின்றன.
நகரின் மையப்பகுதிகளில் மார்க்கெட், உழவர் சந்தை உள்ளிட்ட இடங்களுக்கு மாடுகளை அவிழ்த்து விடுகின்றனர். எனவே, கால்நடை விவசாயிகள் தீவனம் விஷயத்தில் கவனமுடன் இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
கோவை கால்நடை பல்கலை முன்னாள் பேராசிரியர் டாக்டர் சிவக்குமார் கூறியதாவது:
நகர்ப்புறத்தில் இருக்கும் மாடுகளுக்கு அருகே என்ன கிடைக்கிறதோ அதையே கால்நடை உணவாக தருகின்றனர். பேப்பர், பிளாஸ்டிக் உட்கொள்வதுடன், அசுத்தமான தண்ணீரையும் மாடுகள் குடிக்கின்றன. இதனால் கால்நடைகளுக்கு உபாதை ஏற்படுகிறது.
அதற்கு தொற்று, கழிச்சல் பாதிப்பு, காய்ச்சல் போன்ற நோய்கள் வருகின்றன. பிளாஸ்டிக் கழிவுகள் தங்கி அடைப்பு ஏற்பட்டு, இறப்பு கூட ஏற்படலாம். மாட்டின் உடலில் இருக்கும் சத்துக்களே பாலாக வருகிறது.
சில மாடுகள் உண்ணும் பொருட்கள் நச்சுப்பொருட்களாக இருந்தாலும், தீவனம் அல்லாத பொருளாக இருந்தாலும், ஒரு கழிவாக பாலில் வருவதற்கு வாய்ப்புள்ளது. ஆரம்ப நிலை மடி நோயின்போது பால் உப்புக்கரிக்கும். சாப்பிடும் உணவின் வாசனை பாலில் வர வாய்ப்புள்ளது. நச்சுப்பொருட்கள் என்றால் அது எடுத்துக்கொள்ளும் தீவனம் அல்லாத பொருட்களும், கழிவுகளும் பாலில் வெளியேற வாய்ப்புண்டு.
மக்காச்சோளம், சோளம் உள்ளிட்ட தீனங்களை சாப்பிடும் மாடுகளுக்கு, அதன் சுவை தன்மை பாலில் இருக்கும். மற்றபடி நகர்ப்புறத்தில் மாடு சாப்பிடும் உணவை கூர்ந்து கவனித்து, அதில் எந்த நச்சுப்பொருள் வரும் என்பதை கவனிக்க வேண்டும்.
இதனால் ஏற்படும் காய்ச்சல் உள்ளிட்ட காரணங்களால் பால் உற்பத்தி குறையும். பொருளாதார இழப்பும் ஏற்படும். எனவே, கால்நடை விவசாயிகள் கவனமாக இருக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினார்.
- நமது நிருபர் -