/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பள்ளி, கல்லுாரிகளில் பொங்கல் விழா உற்சாகம்!
/
பள்ளி, கல்லுாரிகளில் பொங்கல் விழா உற்சாகம்!
ADDED : ஜன 13, 2024 11:11 PM

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பள்ளி, கல்லுாரிகளில், நடந்த விழாவில், மாணவ, மாணவியர் ஆர்வமுடன், பாரம்பரிய உடை அணிந்து, பொங்கல் வைத்து வழிபட்டனர். பல்வேறு கலை நிகழ்ச்சிகளையும் நடத்தினர்.
கே.பி.ஆர்., கல்லுாரி
அரசூர் கே.பி.ஆர்., கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லுாரியில் நடந்த விழாவில், கே.பி.ஆர்., குழும தலைவர் ராமசாமி பேசுகையில், ''பொங்கலின் இனிமை போல, அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி நிறைந்திருக்க வேண்டும்,'' என்றார். அனந்தகிருஷ்ணன் காயத்ரி முன்னிலை வகித்தார். கல்லுாரி முதல்வர் கீதா, பேராசிரியர்கள் குமுதாதேவி, ஷர்மிளா உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர். மாணவர்கள், பேராசிரியர்களுக்கு பொங்கலிடுதல், கோலப்போட்டி, உரியடித்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடந்தன. பாரம்பரிய கலையான வள்ளிக்கும்மி, வாடிப்பட்டி மேளம், கம்பத்தாட்டம், காவடியாட்டம் உள்ளிட்டவை நடந்தன.
ரத்தினம் கல்லுாரி
ரத்தினம் கலை அறிவியல் கல்லுாரியில் மாணவர்கள், பேராசிரியர்கள், காளை மற்றும் குதிரை வண்டிகளுக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர். அவை முன்னே செல்ல பேராசிரியர்கள், மாணவர்கள், மாவிளக்கு, முளைப்பாரி மற்றும் கும்மி பாடல் இசைக்க கல்லூரி வளாகத்தில் ஊர்வலமாக சென்றனர்.
ஊர்வலத்தை, கல்லுாரி செயலாளர் மாணிக்கம் துவக்கி வைத்தார். மாணவர்கள் சமத்துவ பொங்கல் வைத்தனர். பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு, பரிசு வழங்கப்பட்டது. உடுமலைப்பேட்டை வள்ளி கும்மி பெண்கள் குழுவின் ஒயிலாட்டம், கோவை மதுரை வீரன் பறைக்குழு, ஆயுதம் கலைகளின் சங்கமக் குழுவினரின் நிகழ்ச்சிகள் நடந்தன. முதல்வர் பாலசுப்பிரமணியம், துணை முதல்வர் சுரேஷ், ஆய்வுத்துறை டீன் சபரிஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சங்கரா கல்லுாரி
சங்கரா அறிவியல் வணிகவியல் கல்லுாரியில் நடந்த பொங்கல் விழாவில், கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். இணை செயலாளர்கள் கல்யாணராமன், சந்தியா, துணை இணை செயலாளர் நித்யா, சாகித், கல்லுாரி முதல்வர் ராதிகா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மாணவ, மாணவியர் நாதஸ்வரம், மேளதாளத்துடன், விநாயகர், அம்மன், கட்டைக்கால் ஆட்டம், பொய்க்கால் மாடு, மயில், கரகாட்டக்குழுவுடன் கல்லுாரி வளாகத்தில் ஊர்வலமாக சென்றனர். பொங்கல் வைத்தல், கோலப்போட்டி, கயிறு இழுத்தல், உரியடித்தல், குழு கபடி உள்ளிட்ட பாரம்பரிய போட்டிகளுடன்,ஜமாப், மாட்டு வண்டி சவாரி, கும்மி, சிலம்பாட்டமும் நடந்தன.
சி.எம்.எஸ்., கல்லுாரியில் பொங்கல்
கோவை சி.எம்.எஸ்., பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரியில், அறுவடை திருநாளான பொங்கல் விழா கல்லுாரி வளாகத்தில்நடந்தது. முதல்வர் சுதா நிகழ்ச்சிகளை துவக்கிவைத்தார்.
இதில், ரங்கோலி கோலம், சாக்கு பந்தயம், கலாசார நடனங்கள், கயிறு இழுத்தல், உறியடித்தல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். மெக்கானிக்கல் துறைத்தலைவர் மகேந்திர பூபதி, சக ஆசிரியர்கள் அனைவரும் பங்கேற்றனர்.
கல்லுாரியில் சமத்துவ பொங்கல்
பெரியநாயக்கன்பாளையத்தில் செயல்படும், யுனைடெட் தொழில்நுட்ப கல்லுாரியில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது. மாணவர்கள் புதுப்பானையில் பொங்கலிட்டு சூரிய வழிபாடு செய்தனர். தொடர்ந்து, வள்ளி கும்மி, சிலம்பம், போன்ற கலை நிழ்வுகளில் ஆர்வமாக பங்கேற்றனர்.
இதில், மாணவர்களுக்கு கோலப்போட்டி, உறியடித்தல், இசை நாற்காலி உள்ளிட்ட போட்டிகள் நடத்தி, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை அளித்தனர். கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் சிவக்குமார், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

