/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மண் பரிசோதனை செய்தால் உரச்செலவு குறையும்
/
மண் பரிசோதனை செய்தால் உரச்செலவு குறையும்
ADDED : ஜூன் 24, 2025 10:33 PM
மேட்டுப்பாளையம்; மண் பரிசோதனை மேற்கொண்டு, அதற்கு ஏற்றவாறு பரிந்துரையின் படி பயிர்களுக்கு உரமிடுவதால் உரச் செலவை குறைக்க முடியும் என காரமடை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் பாக்கியலட்சுமி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:-
பயிரின் மகத்தான மகசூலுக்கு தேவையான முக்கியமான காரணிகளில் ஒன்று மண்ணும், அதில் இருந்து பயிருக்கு கிடைக்கக்கூடிய சத்துக்களின் அளவு ஆகும். இதனை அறிவதற்கு மண் பரிசோதனை அவசியமாகிறது.
மண் பரிசோதனையின் வாயிலாக மண்ணில் உள்ள நுண்ணூட்ட சத்துக்களின் அளவு தெரிவதுடன், மண்ணின் தரம் அறியப்படுகிறது. சோதனையின் அடிப்படையில் மண்ணுக்கு ஏற்ற உரம், அதன் அளவு பரிந்துரைக்கப்படுகிறது. இப்படி உரமிடுவதால் மகசூல் பெருகுவதோடு, மண்ணின் தரம் பாதுகாக்கப்படுகிறது.
நிலத்திற்கு நிலம் மண்ணில் உள்ள சத்துக்களின் அளவு மாறுபடுவதால், மண் பரிசோதனை உதவி கொண்டு மட்டுமே, பயிருக்குத் தேவையான சரியான உரப்பரிந்துறையை வழங்க முடியும். அதன் படி உரச் செலவை குறைக்க முடியும்.
மண் பரிசோதனைக்காக மண் மாதிரி எடுக்கும் போது, பயிர் அறுவடை முடிந்த பிறகு அடுத்த பயிருக்கு நிலத்தை தயார் செய்வதற்கு முன் மண் மாதிரி எடுக்க வேண்டும். எரு குவித்த இடங்கள், பரப்பு ஓரங்கள், மரங்களின் நிழல் படரும் பகுதிகள், நீர்க்கசிவு உள்ள இடங்கள் ஆகிய இடங்களில் மாதிரிகள் சேகரம் செய்யக்கூடாது.
விவசாயிகளின் நலனுக்காக நடமாடும் மண்பரிசோதனை நிலைய வாகனம் இயக்கப்படுகிறது. இந்த வாகனம் கிராமங்களுக்கு நேரடியாகச் சென்று விவசாயிகளிடம் இருந்து மண் மாதிரிகளை பெற்று, ஆய்வு செய்து மண் வள அட்டையை அன்றைய தினமே வழங்குகிறது. வாகனம் அடுத்த வாரம் மருதுார் வருகிறது. விவசாயிகள் இதனை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.-----