/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவில்களில் ஸ்ரீராம பஜனையுடன் சிறப்பு அபிேஷகம்
/
கோவில்களில் ஸ்ரீராம பஜனையுடன் சிறப்பு அபிேஷகம்
ADDED : ஜன 24, 2024 01:15 AM

- நிருபர் குழு -
அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிேஷகம்நடந்ததையொட்டி, கோவை புறநகர் கோவில்களில் ஸ்ரீராம பஜனையுடன் சிறப்பு அபிேஷகங்கள் நடந்தன.
அன்னுார்
அயோத்தியில் இந்துக்களின் 500 ஆண்டுகால கனவான ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதையடுத்து அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவில், குமாரபாளையம் பெருமாள் கோவில், பொகலூர் பெருமாள் கோவில், அக்கரை செங்கப்பள்ளி பெருமாள் கோவில், காட்டம்பட்டி, வரதையம்பாளையம், பெருமாள் கோவில், கரியாம்பாளையம் மாரியம்மன் கோவில், கதவகரை பகவதி அம்மன் கோவில் என 30 கோவில்களில் மதியமும், மாலையும் அபிஷேக பூஜை, அலங்கார பூஜை நடந்தது.
அன்னதானம் வழங்கப்பட்டது. பா.ஜ.,பொதுச் செயலாளர் லோகநாதன், விவசாய அணி மாவட்ட தலைவர் விஜயகுமார் உள்பட பலர் பங்கேற்றனர்.
சாலையூர் பழனி ஆண்டவர் கோவில் வளாகத்தில் காலை 11:00 மணி முதல் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. தென்சேரி மலை ஆதீனம் முத்து சிவராம சாமிகள், அவிநாசி சித்தர் பீடம் சின்னச்சாமி சாமிகள், கமிட்டி நிர்வாகிகள் நடராஜன், மூர்த்தி, திருமூர்த்தி, சுந்தரம் உள்பட 500க்கும் மேற்பட்டோர் கும்பாபிஷேகத்தை பார்த்தனர்.
சித்தர் பீட சின்னச்சாமி சாமிகள் கூறுகையில் 'அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறும் காலத்தில் வாழ்வதே பெரும் பாக்கியம். இது இந்துக்களின் 500 ஆண்டு கால கனவு. வாழ்வில் ஒரு முறையாவது அயோத்தி சென்று ராமபிரான் கோவிலில் தரிசனம் செய்து விட்டு வர வேண்டும்,' என்றார்.
அன்னூர் பாத விநாயகர் கோவிலில் பா.ஜ., சார்பில் மாநில அமைப்பு பொதுச்செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் சிறப்பு வழிபாடு நடந்தது.
தென்னம்பாளையம் ரோட்டில் பா.ஜ., முன்னாள் மாவட்ட செயலாளர் தர்மலிங்கம் தலைமையில் 200 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மேட்டுப்பாளையம்-
மேட்டுப்பாளையம் சிவன்புரத்தில் உள்ள அகஸ்தியா ஆயுர்வேதிக் ஹெல்த் ஏஜென்சீஸ் வளாகத்தில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நேரலை செய்யப்பட்டது. பஜனையும், குழந்தைகளின் கலை நிகழ்ச்சியும் நடந்தது. ஸ்ரீ ராம மந்திரம் சொல்லப்பட்டது. அன்னதானம் வழங்கப்பட்டது.
பிரகதி சேவா டிரஸ்ட் கோகுலம் குழந்தைகள் உலகம், குடும்பத்தார் இதற்கான ஏற்பாடுகளை செய்தனர். விழாவில் சேவா பாரதி அமைப்பின் மாநில பொருளாளர் சித்தரோஸ், மேட்டுப்பாளையம் அனைத்து இந்து சமுதாய நந்தவன அமைப்பு செயலாளர் சுகுமார், அப்பகுதி மக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
--காரமடை
கோவை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற வைணவ ஸ்தலமான, காரமடை அரங்கநாதர் கோவிலில், கோவை வடக்கு மாவட்ட பா.ஜ.,சார்பில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பின் கோவில் வளாகத்தில் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. பக்தர்கள் பரவசம் அடைந்தனர். மேலும் வளாகத்தில் பஜனை பாடல்கள் பாடப்பட்டன. பக்தர்களுக்கு இனிப்புகள் வழங்கி பா.ஜ.,வினர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதற்கான ஏற்பாடுகளை கோவை வடக்கு மாவட்ட பா.ஜ., துணை தலைவர் விக்னேஷ் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
அதே போல் மேட்டுப்பாளையம் காட்டூரில் உள்ள தவிட்டு மாரியம்மன் கோவிலிலும் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, சிறப்பு பூஜை செய்யப்பட்டு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவின் ஒரு பகுதியாக, அண்மையில் டெல்லியில் பொங்கல் விழாவின் போது மத்திய இணை அமைச்சர் எல். முருகன் வீட்டில், பிரதமர் மோடி முன் பாடிய, காரமடையை சேர்ந்த பள்ளி மாணவி ஸ்ரீநிதாவின் இசை நிகழ்ச்சியும் நடந்தது.
----பெ.நா.பாளையம்
துடியலூர், பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் அயோத்தி ராமர் பிராண பிரதிஷ்டை விழாவையொட்டி, கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பெரியநாயக்கன்பாளையம் அருகே கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட வஞ்சியம்மன் கோவில் அருகே உள்ள அய்யப்பன் கோவிலில் அயோத்தி ராமர் பிராண பிரதிஷ்டை விழா நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். மாலையில் ஸ்ரீராம சங்கீர்த்தன சிறப்பு பஜனை நடந்தது. தொடர்ந்து ஸ்ரீ ராம சைதன்யம் பரத நாட்டிய நிகழ்ச்சி நடந்தது. இரவு அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
துடியலூர் அருகே அசோகபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட யோகாம்பாள் கோவிலில் நடந்த சிறப்பு பூஜையில் ஸ்ரீராமர், சீதாதேவி சிலைகள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
பெண்கள் திரளாக பங்கேற்று, ஸ்ரீ ராமரை வழிபட்டனர். ரங்கம்மாள் காலனி, கருமாரியம்மன் கோவிலில் பிரம்மாண்ட திரையில் அயோத்தி ஸ்ரீ ராமர் கோவில் பிராண பிரதிஷ்டை விழா நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
மேலும், சின்மயா சரஸ்வதி கோவிலில் எல்.இ.டி., திரையில் அயோத்தி ராமர் கோவில் பிராண பிரதிஷ்டை விழா நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. மாலையில் பஜனை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
இதே போல ஆங்காங்கே உள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள், பஜனைகள் நடத்தன. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சூலுார்
சூலூர் பெருமாள் கோவிலில் நடந்த வழிபாட்டில், பாராயணம், ஜபம் செய்யப்பட்டது. ராமபிரான் புகழை போற்றும் பஜனை நடந்தது.
தொடர்ந்து, ராம நாமத்தின் மகிமை குறித்து ரவி பேசினார். கும்பாபிஷேக நிகழ்வுகள் எல்.இ.டி., திரையில் ஒளிபரப்பப்பட்டது. பூஜைக்கு பின், அனைவருக்கும் லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. அன்னதானம் நடந்தது. ஆர்.எஸ்.எஸ்., மற்றும் ஹிந்து முன்னணி, பா.ஜ., நிர்வாகிகள், பக்தர்கள் பங்கேற்றனர்.
சூலூரில் வசிக்கும் வட மாநிலத்தவர்கள் சார்பில், சிறப்பு பஜனை நிகழ்ச்சி நடந்தது. குழந்தைகளுடன் பங்கேற்ற அவர்கள், ராம பஜன் பாடி மனமுருக வழிபாடு செய்தனர்.
முத்துக்கவுண்டன்புதூர் அங்காளம்மன் கோவில், மாகாளியம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடந்தன. அன்னதானம் வழங்கப்பட்டது.
கிட்டாம்பாளையம் பழனியாண்டவர் கோவில், மாதப்பூர் பெருமாள் கோவில், ராம பக்த ஆஞ்சநேயர் கோவில், பீடம் பள்ளி பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடுகள், பஜனை நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் மற்றும் ஹிந்து இயக்கத்தினர் பங்கேற்றனர்.

