/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
ADDED : ஜன 20, 2024 08:34 PM

தைப்பூச திருவிழா
மருதமலை முருகன் கோவிலில், தைப்பூச திருவிழாவில் இன்று காலை 7:00 முதல் 9:00 மணி வரை, அபிஷேக பூஜை, தீபாராதனை நடக்கிறது. பத்மாசனத்தில் சுவாமி திருவீதி உலா நடைபெறுகிறது. காலை 10:00 முதல் 12:00 மணி வரை மற்றும் மாலை 4:30 முதல் இரவு 7:30 மணி வரை, யாகசாலை பூஜை, அபிஷேக பூஜை மற்றும் தீபாராதனை நடக்கிறது.
கும்பாபிஷேக விழா
கோட்டை பகுதியிலுள்ள சங்கமேசுவரசுவாமி கோவிலில், கும்பாபிஷேக விழா நடக்கிறது. காலை, 6:00 முதல் 9:00 மணி வரை, ஆறாம்கால யாகவேள்வி, கலசங்கள் புறப்பாடு நடக்கிறது. காலை, 10:15 முதல் 10:30 மணி வரை கும்பாபிஷேக விழா நடக்கிறது. மாலை 6:00 மணி முதல் மகா அபிஷேகம், திருக்கல்யாணம், சுவாமி திருவீதி உலா நடக்கிறது.
ஓவியக் கண்காட்சி
ஒரு நொடி ரசிப்பில், புதுமை உலகில் லயிக்க வைக்கும் ஆற்றல் கொண்டவை ஓவியங்கள். சினிமா, அவுட்டிங்கை ஒதுக்கவிட்டு ஓவிய உலகில் நீங்களும் லயிக்கலாம் வாங்க! ஆர்.எஸ்.புரம், வெங்கடச்சாமி ரோடு, ஆர்டிஸ்டிக் அரங்கத்தில் ஓவியக் கண்காட்சி நடக்கிறது. காலை 10:30 முதல் இரவு 8:00 மணி வரை கண்காட்சியை பார்வையிடலாம்.
விருது வழங்கும் விழா
கோவை நன்னெறிக் கழகம் சார்பில் விருது வழங்கும் விழா, ரேஸ்கோர்ஸ், காஸ்மோபாலிட்டன் கிளப், ஜி.வி.ஹாலில், மாலை 6:00 மணிக்கு நடக்கிறது. விஜயா பதிப்பகம் வேலாயுதம், சிதம்பரநாதன் ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்படுகிறது. எழுத்தாளர்கள் நாஞ்சில் நாடன், மரபின் மைந்தன் முத்தையா மற்றும் தொழிலதிபர் இயகோகா சுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
ரத்ததான முகாம்
சுவாமி விவேகானந்தர் பிறந்தநாளை முன்னிட்டு, சேவாபாரதி மற்றும் சுவாமி விவேகானந்தா ரத்த வங்கி இணைந்து ரத்ததான முகாமை நடத்துகின்றன. ராஜவீதி, கொச்சின் திவான் நஞ்சப்பய்யர் சத்திரத்தில், காலை, 9:00 முதல் மதியம், 2:00 மணி வரை, ரத்த தான முகாம் நடக்கிறது.
ஆசிய நகை கண்காட்சி
தென்னிந்தியாவின் பிரபலமான நகைக் கண்காட்சியான, ஆசிய நகை கண்காட்சி, ரேஸ்கோர்ஸ், தாஜ் விவாந்தா ஓட்டலில் நடக்கிறது. தங்கம், வைரம் மற்றும் பிளாட்டினம் நகைகள், பாரம்பரிய நகைகள் திருமண நகைகள், அரிதான கல் நகைகள், வெள்ளி நகைகள் இடம்பெற்றுள்ளது. காலை, 10:30 முதல் இரவு, 8:00 மணி வரை கண்காட்சியை பார்வையிடலாம்.
அமைதியின் அனுபவம்
தியானம், அன்பு பகிர்தல், இயற்கை, நேர்மறை எண்ணம் ஆகியவற்றின் மூலம் மன அமைதியை அனுபவிக்கலாம். அண்ணாசாலை எதிரில், ஓசூர் ரோட்டில் அமைந்துள்ள, ஆருத்ரா ஹாலில், இலவச வீடியோ சத்சங் நடக்கிறது. 'நம்முள் அமைதியின் அனுபவம் சாத்தியமே' என்ற தலைப்பில், காலை, 11:00 மணிக்கு, சத்சங் நடக்கிறது.
கும்பாபிஷேக விழா
ஒலம்பஸ், ராமநாதபுரம், ஸ்ரீதேவி, பூதேவி, நரசிங்கப்பெருமாள் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா, காலை, 9:00 முதல் 9:30 மணி வரை நடக்கிறது. வெள்ளலுார், ராக்கி கேஸ் குடோன் அருகே அமைந்துள்ள, காலேஸ்வரர் கோவிலில், காலை, 11:00 முதல் 12:00 மணி வரை, கும்பாபிஷேக விழா நடக்கிறது.
ராமாயணம் வாசிப்பு
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, பஞ்சாபி சங்கம் சார்பில், ராமாயணம் வாசிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இதில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், 24 மணி நேரம் இடைவிடாது ராமாயணம் வாசிக்கவுள்ளனர். தடாகம் ரோடு, கே.என்.ஜி.,புதுார் பிரிவு, பஞ்சாபி சங்கத்தில், மதியம், 12:00 மணிக்கு இந்நிகழ்வு நடக்கிறது.
காவடி முத்தரிப்பு
போத்தனுார், செட்டிபாளையம் பழநி பாதயாத்திரைக் குழுவின், 37ம் ஆண்டு, காவடி முத்தரிப்பு நடக்கிறது. செட்டிபாளையம், மாரியம்மன் கோவிலில் காலை, 7:31 மணிக்கு, காவடி முத்தரிப்பு நடக்கிறது. தொடர்ந்து, மாலை, 4:00 மணிக்கு, 500 பேர் பழநிக்கு பாதயாத்திரை செல்கின்றனர்.
சொற்பொழிவு
கோவை இயற்கை நலச்சங்கம் சார்பில், சிறப்பு சொற்பொழிவு நடக்கிறது. இதில், உனக்குள் உன்னத ஆற்றல் என்ற தலைப்பில், பேச்சாளர், மாசிலாமணி பேசுகிறார். அவிநாசி ரோடு, அண்ணாசிலை எதிரில், ஸ்ரீ சாய் காபே அரங்கத்தில், காலை, 10:30 மணிக்கு நிகழ்ச்சி நடக்கிறது.
குடிநோய் விழிப்புணர்வு முகாம்
ஆல்கஹாலிக் அனானிமஸ் சார்பில், குடிநோய் குறித்த விழிப்புணர்வு முகாம், சுண்டக்காமுத்துார், டி.எஸ்.,நர்சரி பள்ளியில், காலை, 10:30 முதல் மதியம், 12:00 மணி வரை நடக்கிறது. குனியமுத்துார், டிவைன் மேரி சர்சில், மாலை, 6:30 முதல், இரவு, 8:30 மணி வரை நடக்கிறது.
ராமனின் அருங்குணங்கள்
சுவாமி விவேகானந்தர் இளைஞர் சக்தி இயக்கம் சார்பில், 'அயோத்தி ராமனின் அருங்குணங்கள்' என்ற தலைப்பில் சிறப்புரை நடக்கிறது. முத்துக்கவுண்டன் புதுார், சுவாமி விவேகானந்தர் அரங்கில், மாலை, 5:45 மணி முதல் நிகழ்ச்சி நடக்கிறது. குழந்தைகள், பெரியவர்கள் என குடும்பமாக நிகழ்வில் கலந்துகொள்ளலாம்.
கண் பரிசோதனை இலவச முகாம்
கோவை மாவட்ட பார்வை இழப்புத் தடுப்புச் சங்கம், அனைத்து சமூக மக்களுக்கு உதவும் பேரவை மற்றும் இலவச கண் பரிசோதனை முகாம் நடக்கிறது. அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து வழங்கும் இந்த முகாம், ஆலாந்துறை, அரசு மேல்நிலைப்பள்ளியில், காலை, 8:30 முதல், மதியம், 1:30 மணி வரை நடக்கிறது.

