/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
75வது குடியரசு தின விழாவில் பங்கேற்க பழங்குடியின தம்பதி புதுடில்லி பயணம்
/
75வது குடியரசு தின விழாவில் பங்கேற்க பழங்குடியின தம்பதி புதுடில்லி பயணம்
75வது குடியரசு தின விழாவில் பங்கேற்க பழங்குடியின தம்பதி புதுடில்லி பயணம்
75வது குடியரசு தின விழாவில் பங்கேற்க பழங்குடியின தம்பதி புதுடில்லி பயணம்
ADDED : ஜன 20, 2024 10:05 PM

வால்பாறை:புதுடில்லியில் நடக்கும், குடியரசு தின விழாவில் பங்கேற்க வால்பாறையை சேர்ந்த பழங்குடியின தம்பதி நேற்று புறப்பட்டனர்.
கோவை மாவட்டம், வால்பாறை அடுத்துள்ள கல்லார்குடியை சேர்ந்தவர் ராஜலட்சுமி. இவரது கணவர் ஜெயபால். இவர்கள், ஆனைமலை தொடரில் வாழும் பழங்குடியினர் உரிமைக்காக அறவழியில் போராடி, நிலஉரிமை பெற்று தந்துள்ளனர். மலைகிராமத்தை இந்தியாவின் சிறந்த முன்மாதிரி கிராமமாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்களின் செயலை பாராட்டு விதமாக, புதுடில்லியில் நடக்கும் குடியரசு தினவிழாவில் தம்பதியர் கலந்து கொள்ள தமிழக அரசு பரிந்துரை செய்தது.
இதையடுத்து, மத்திய அரசின் அழைப்பை ஏற்று புதுடில்லியில் வரும், 26ம் தேதி நடக்கும் 75வது குடியரசு தின விழாவில் கலந்து கொள்ள தம்பதியருக்கு அழைப்பு வந்தது.
குடியரசு தின விழா நிகழ்ச்சியில் பங்கேற்க, வால்பாறையில் இருந்து தம்பதியர் நேற்று புறப்பட்டனர்.
முன்னதாக, வால்பாறை காந்திசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி அவர்களுக்கு நிதியுதவி வழங்கி பாராட்டினார்.
பழங்குடியின மக்கள்கூறுகையில், 'கல்லார்குடியில் வசிக்கும், காடர் பழங்குடி சமூகத்தை சேர்ந்த ராஜலட்சுமி- ஜெயபால் தம்பதி புதுடில்லியில் நடக்கும் குடியரசு தினவிழாவில் பங்கேற்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது,' என்றனர்.
தம்பதியை அழைத்து செல்லும் அதிகாரி கூறுகையில், 'மத்திய அரசின் அழைப்பின் பேரில் கல்லார்குடியை சேர்ந்த தம்பதியர் புதுடில்லி செல்ல வசதியாக, சென்னைக்கு அழைத்து செல்லப்படுகின்றனர். வரும், 22ம் தேதி புதுடில்லி செல்லும் அவர்கள், அங்கு நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, பிப்., 2ம் தேதி தமிழகம் திரும்புகின்றனர்,' என்றார்.

