மேட்டுப்பாளையம்: மருதுார் ஊராட்சியில், கட்டாஞ்சி மலையில் கிராம சபை கூட்டம் நடந்தது. ஊராட்சி தலைவர் பூர்ணிமா தலைமை வகித்தார்.
கூட்டத்தில், ஊராட்சிக்குட்பட்ட அரசுப் பள்ளிகளில் துாய்மை பணியாளர்களுக்கான சம்பளம், பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் வழங்கி வரும் நிலையில், ஊராட்சி சார்பாக வழங்க வேண்டும்.
'ஜல் ஜீவன்' திட்டத்தில், வீடுதோறும் குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும். பழங்குடியின மக்களுக்கு கான்கிரீட் வீடு கட்டித்தர வேண்டும். மத்திய அரசின் திட்டத்தின் கீழ், நிரந்தர வீடுஇல்லாதவர்களுக்கு வீடு கட்டி தர பயனாளிகள் தேர்வு செய்ய வேண்டும். தொழில் முனைவோர்கள் உருவாக்கப்பட வேண்டும். வறுமை இல்லாத கிராமமாக உருவாக வேண்டும். கல்வி குழு வாயிலாக பள்ளி செல்லா குழந்தைகள் கண்டறியப்பட்டு பள்ளியில் சேர்க்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஊராட்சி தலைவர் பூர்ணிமா பேசுகையில், ''பழங்குடியின மக்களுக்கு மிக விரைவில் பட்டா வாங்கி தரப்படும். பழுதான வீடுகள் சரிசெய்யப்படும். அனைவருக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்படும். பழங்குடியின மக்கள், ஆயிரம் ரூபாய் மட்டுமே செலுத்தி குடிநீர் இணைப்பு பெற்று கொள்ளலாம். 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ், நிலுவை சம்பளம் விரைவில் பெற்றுத் தரப்படும்,'' என்றார்.

