/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புதிய பயிர் ரகங்கள் வெளியீடு எப்போது? வேளாண் பல்கலை துணைவேந்தர் விளக்கம்
/
புதிய பயிர் ரகங்கள் வெளியீடு எப்போது? வேளாண் பல்கலை துணைவேந்தர் விளக்கம்
புதிய பயிர் ரகங்கள் வெளியீடு எப்போது? வேளாண் பல்கலை துணைவேந்தர் விளக்கம்
புதிய பயிர் ரகங்கள் வெளியீடு எப்போது? வேளாண் பல்கலை துணைவேந்தர் விளக்கம்
ADDED : ஜன 20, 2024 08:34 PM
கோவை;ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின் போது வெளியிடப்படும் புதிய பயிர் ரகங்கள் குறித்த அறிவிப்பு, தமிழ்நாடு வேளாண் பல்கலை தரப்பில், நடப்பாண்டில் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை.
தமிழ்நாடு வேளாண் பல்கலையை பொறுத்தவரை, கற்றல்- கற்பித்தலுக்கு இணையாக புதிய பயிர் ரகங்கள் கண்டுபிடித்து விவசாயிகளின் பயன்பாட்டுக்கு அளிக்க வேண்டியது அவசியம். ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகளை கவுரவிக்கும் வகையில் பொங்கல் பண்டிகைக்கு முன், புதிய பயிர் ரகங்கள், தொழில்நுட்பங்கள் குறித்த அறிவிப்பு வெளியிடப்படுவது வழக்கம். 2022, 2023 ஆண்டுகளில் பொங்கல் பண்டிகைக்கு பின், பிப்., மாதம் இரண்டாம் வாரத்தில் புதிய ரக வெளியீடு குறித்து அறிவிக்கப்பட்டது. அதே போன்று, நடப்பாண்டிலும் இதுகுறித்த அறிவிப்பு இதுவரை வெளியிடப்படவில்லை.
அதே சமயம், பல்கலை தரப்பில் பல புதிய பயிர் ரகங்கள், தொழில்நுட்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அதை வெளியிட்டு பயன்பாட்டுக்கு அனுமதிப்பதில் தாமதம் ஏன்? என விவசாயிகள், பல்கலை விஞ்ஞானிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். வேளாண் பல்கலையில் நடப்பாண்டில், 24 புதிய கண்டுபிடிப்புகள் இறுதி செய்வதற்காக பல்கலை நிர்வாக தரப்பில் அரசுக்கு முன்பே சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதுகுறித்து, பல்கலை விஞ்ஞானி ஒருவர் கூறுகையில், 'பல்கலையில் பாரம்பரியமாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டே புதிய பயிர் ரகங்கள் வெளியிடப்படும்.
ஆனால், தற்போது அச்சூழல் மாறியுள்ளது. பல்கலை தரப்பில் வெளியிடவேண்டிய அறிவிப்பு, அரசியல் தலைவர்களின் தேதிக்காக காத்திக்கும் சூழல் உள்ளது. வரும் ஆண்டிலாவது, வழக்கம் போல் விவசாயிகளை கவுரவிக்கும் வகையில், பொங்கல் பண்டிகைக்கு முன் வெளியிடவேண்டும்' என்றார்.
துணைவேந்தர் கீதாலட்சுமியிடம் கேட்டபோது, ''புதிய பயிர் ரகங்கள் வெளியீடு குறித்து ஆலோசனைக்காக நாளை (இன்று) சென்னை செல்கின்றேன். பயிர் ரகங்கள் வெளியிடுவதில் பல்கலை நிர்வாகம், மாநில அளவில், மத்திய அளவில் மூன்று விதமான கமிட்டிகள் கூடி முடிவெடுக்க வேண்டும். அக்கமிட்டி கூடுவதற்கு நாம் அவகாசம் அளிக்க வேண்டியது அவசியம். பொங்கலுக்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை; நடப்பாண்டில், வெள்ள பாதிப்புகள் காரணமாக கமிட்டி கூடுவதில் சிரமங்கள் இருந்தன.
''இதில், அரசியல் ரீதியாக எதையும் திணிக்க வேண்டாம்; அரசியலுக்கும், பயிர் வெளியீட்டிற்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை. விரைவில் புதிய பயிர் ரகங்கள் வெளியிடப்படும்,'' என்றார்.

