/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
யாரோ கனிம வளத்தை சுரண்டிச் சென்றதற்கு எங்களுக்கு அபராதம் ஏன்? உண்ணாவிரதம் இருக்க விவசாயிகள் முடிவு; தமிழக அரசின் கவனத்தை ஈர்க்க போராட்டம்

ADDED : ஜூலை 04, 2025 11:35 PM

தொண்டாமுத்துார்; பேரூர் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் நடந்த, கனிம வள கொள்ளை விவகாரத்தில், மண் எடுக்காதவர்களுக்கும் அபராதம் விதித்துள்ளதாக, விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர். இவ்விவகாரத்தில் மேல்முறையீடு செய்தும் கூட, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
கோவை மாவட்டம், பேரூர் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில், மலை அடிவாரத்தை ஒட்டியுள்ள அரசு மற்றும் தனியார் பட்டா நிலங்களில் அனுமதியின்றி மண் கொள்ளை அடிக்கப்பட்டது. இதுதொடர்பான வழக்கில், இவ்விவகாரம் குறித்து விசாரணை நடத்த, சென்னை உயர்நீதிமன்றம், சிறப்பு புலனாய்வு குழு அமைத்தது. அக்குழுவினர், சம்பவ இடங்களில் நேரில் விசாரணை நடத்தினர். கனிம வளக்கொள்ளை விவகாரத்தில், அரசு அதிகாரிகள் மீது நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.
கனிம வளக்கொள்ளையை தடுக்க மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்தும், கனிம வள கொள்ளை கண்காணிக்க தவறிய அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். இதன் எதிரொலியாக, வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் பலரும் இட மாற்றம் செய்யப்பட்டனர்.
மண் எடுத்ததாக, 370 விவசாயிகளுக்கு, 50 கோடி ரூபாய் வரை அபராதம் விதித்தனர். இதில், மண் எடுக்காதவர்களுக்கும், அதிகப்படியான அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக, விவசாயிகள், கலெக்டரிடம் மேல்முறையீடு செய்தனர். தற்போது வரை, இவ்விவகாரத்தில் எந்த முடிவும் எடுக்காமல் உள்ளதால், தமிழக அரசின் கவனத்தை ஈர்க்க, ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறுகையில், 'கனிம வள கொள்ளை சம்பவத்தில் உண்மையாக மண் எடுத்தவர்கள் மீது அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எந்த தவறும் செய்யாத விவசாயிகளுக்கும் கோடிக்கணக்கில் அபராதம் விதித்துள்ளனர். மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும், தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழக அரசின் கவனத்தை ஈர்க்க, தொண்டாமுத்துார் மாரியம்மன் கோவில் மைதானத்தில், 15ம் தேதி, 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஒருங்கிணைந்து, ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்' என்றனர்.