/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நீங்க எல்லோரும் என் குழந்தைகள்தான்... உருக வைத்த சாவித்திரி அம்மாள்!
/
நீங்க எல்லோரும் என் குழந்தைகள்தான்... உருக வைத்த சாவித்திரி அம்மாள்!
நீங்க எல்லோரும் என் குழந்தைகள்தான்... உருக வைத்த சாவித்திரி அம்மாள்!
நீங்க எல்லோரும் என் குழந்தைகள்தான்... உருக வைத்த சாவித்திரி அம்மாள்!
ADDED : ஜன 13, 2024 11:14 PM

வீடு, வீடாக வேலை பார்த்து சேர்த்து வைத்த பணத்தில், தென் மாவட்டத்தில் மழையால் பாதித்த மக்களுக்கு, ஐந்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை வழங்கிய 65 வயது சாவித்திரி அம்மாளுக்கு, தடாகம் ரோடு, கோவில்மேடு, அரசு உயர்நிலைப்பள்ளியில் பாராட்டு விழாவை 'செயல்' அமைப்பு செய்து இருந்தது.
விழாவில் பேசிய சாவித்திரி அம்மாள், ''இங்க இருக்கிற குழந்தைகளை பார்க்கும்போது, எனக்கு குழந்தை இல்லையே என்ற ஏக்கம் முழுவதும் போயிருச்சு. நான் நான்காம் வகுப்பு வரை தான் படிச்சிருக்கேன். குழந்தைகளாகிய நீங்க எல்லாரும், என் குழந்தைங்கதான். எல்லாரும் நல்ல உயர்ந்த நிலைக்கு வரணும்,'' என் வீட்டுக்காரர் இறந்த பிறகு, என் வாழ்க்கையில் சந்தோசம் முழுமையா போயிருச்சு. இருந்தாலும், மனசு தளராம வீடுகள்ல வீட்டு வேலை செஞ்சு, அதில கிடைக்கற பணத்தைக் கொண்டு என்னால முடிந்த உதவிகளை, மத்தவங்களுக்கு செஞ்சுட்டு வர்றேன்,''
''தினமும் பேப்பர் படிப்பேன். அதிலும் 'தினமலர்'தான் என்னோட பத்திரிகை. அதுல மத்தவங்களுக்கு பயன் தர்ற, பல்வேறு தகவல்களை படிச்சு தெரிஞ்சுக்கிட்டு, மத்தவங்களுக்கும் சொல்வேன்,''.
''இங்கே வந்திருக்கற பெரிய படிப்பு படிச்சவங்க எல்லாம், நிறைய என்னை பத்தி புகழ்ந்து பேசினாங்க. என்னால முடிஞ்சத செஞ்சேன்... இனிமேலும் செய்வேன்...,'' என்று நெகிழ்ந்து பேசினார்.
- பேச்சை சற்று நிறுத்தி விட்டு, தன் துணிப்பையில் இருந்து சிறு பொட்டலங்களை எடுத்தார். அதன் பின் அவற்றை காண்பித்து அவர் பேசுகையில், ''கவர்மென்ட் ஸ்கூல்ல படிக்கற குழந்தைகளை பார்க்க போறோம்; வெறுங்கையோட போனா நல்லா இருக்காதுன்னு சொல்லி ஸ்வீட், காரம் செஞ்சு எடுத்துட்டு வந்து இருக்கேன். அதையெல்லாம் உங்களுக்கு கொடுக்கணும்னு எனக்கு ஆசை,'' என்றார்.
பேசி முடித்ததும், நிகழ்ச்சிக்கு வந்திருந்த அரசுப்பள்ளி குழந்தைகளுக்கு அவற்றை வழங்கினார்.
தன்னை அழைத்து பாராட்டிய செயல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் நந்தகுமாருக்கு, திருக்குறள் புத்தகத்தை பரிசளித்தார். தன்னை போடிபாளையத்திலிருந்து காரில் அழைத்து வந்த நபருக்கு, புத்தர் சிலை பரிசளித்தார்.
பாராட்டு விழாவில் சாவித்திரி அம்மாளின் தோழி ஜோதிமணி, உலக தமிழ் காப்புக் கூட்டியக்கத்தின் செயலாளர் புலவர் அப்பாவு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

