/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கஞ்சா போதையில் அண்ணன், தம்பிக்கு கத்திவெட்டு: இரண்டு பேருக்கு வலை விருத்தாசலம் - திட்டக்குடி சாலையில் மறியல்

ADDED : ஜன 19, 2024 08:13 AM

பெண்ணாடம்: பெண்ணாடத்தில் கஞ்சா போதையில் சகோதர்களை கத்தியால் வெட்டியவர்களை கைது செய்யக்கோரியும், கஞ்சா விற்பனையை தடுக்கக்கோரி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
கடலுார் மாவட்டம், பெண்ணாடம் கருங்குழி தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாதுரை மனைவி தனலட்சுமி. இவர் நேற்று முன்தினம் இரவு 10:00 மணியளவில் தனது மகள், மகனுடன் அப்பகுதியில் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அதே பகுதியைச் சேர்ந்த விஜயகாந்த் மகன்கள் பிரதாப், 22, பிரதீப், 20, இருவரும் முன்விரோதம் காரணமாக தனலட்சுமியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, தாக்கினர். படுகாயமடைந்த தனலட்சுமி, இவரது மகள் ஆகியோரை மீட்டு, அரியலுார் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதையறிந்த தனலட்சுமியின் உறவினர்கள் அம்பேத்கர் நகர் சக்திவேல், சரவணன் ஆகியோர் பிரதாப், பிரதீப்பிடம் தட்டிக்கேட்டபோது, கஞ்சா போதையில் இருந்த சகோதரர்கள் சக்திவேல், சரவணனை கத்தியால் தலை, கை பகுதியில் வெட்டினர். காயமடைந்த இருவரையும் மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
புகாரின்பேரில் பெண்ணாடம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர்.
இந்நிலையில், நேற்று மாலை 5:30 மணியளவில் சக்திவேல், சரவணன் ஆகியோரை வெட்டிய பிரதாப், பிரதீப் இருவரை உடனே கைது செய்ய வேண்டும் எனவும், கஞ்சா விற்பனையை தடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் 100க்கும் மேற்பட்டோர் விருத்தாசலம் - திட்டக்குடி சாலையில் அம்பேத்கர் நகர் பஸ் நிறுத்தத்தில் மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த இன்ஸ்பெக்டர் குமார் தலைமையிலான போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தையில் நடத்தினார். அப்போது சம்பந்தப்பட்டவர்களை கைது செய்வதாக உறுதியளித்தனர். அதையேற்று, மாலை 6:15 மணியளவில் கலைந்து சென்றனர்.
இதனால் விருத்தாசலம் - திட்டக்குடி சாலையில் 45 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.
இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.