/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கொள்முதல் செய்யப்படாமல் நெல் மூட்டைகள் தேக்கம்: முறையான அறிவிப்பின்றி விவசாயிகள் பாதிப்பு
/
கொள்முதல் செய்யப்படாமல் நெல் மூட்டைகள் தேக்கம்: முறையான அறிவிப்பின்றி விவசாயிகள் பாதிப்பு
கொள்முதல் செய்யப்படாமல் நெல் மூட்டைகள் தேக்கம்: முறையான அறிவிப்பின்றி விவசாயிகள் பாதிப்பு
கொள்முதல் செய்யப்படாமல் நெல் மூட்டைகள் தேக்கம்: முறையான அறிவிப்பின்றி விவசாயிகள் பாதிப்பு
ADDED : பிப் 02, 2024 03:57 AM
விருத்தாசலம்: விருத்தாசலம் மார்க்கெட் கமிட்டியில் முறையான அறிவிப்பு இல்லாததால், நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படாமல் தேக்கமடைந்துள்ளதால் விவசாயிகள் அவதியடைந்தனர்.
விருத்தாசலம் மார்க் கெட் கமிட்டிக்கு கடலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், அரியலுார், பெரம்பலுார் மாவட்ட விவசாயிகள் தங்களின் விளைபொருட்களை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
சம்பா அறுவடை காலங்களில், நாள் ஒன்றுக்கு 1 கோடி ரூபாய்க்கு மேல் வர்த்தகம் நடக்கிறது. அந்த வகையில் தற்போது சம்பா அறுவடை பணி நடந்து வருவதால், தினசரி சராசரியாக 15 ஆயிரம் நெல் மூட்டைகள் கொண்டு வரப்படுகிறது.
ஒரே நேரத்தில் விவசாயிகள் தங்களுடைய நெல் மூட்டைகளை கொண்டு வருவதால், மார்க்கெட் கமிட்டி வளாகம் நிரம்பி வழிகிறது. தற்போதுவரை சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள், கொள்முதல் செய்யப்படாமல் தேக்கமடைந்துள்ளன.
விவசாயிகள் காத்திருப்பு
நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படாததால், விவசாயிகள் வாரக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கமிட்டியில், திறந்தவெளியில் நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளதால், மழையில் நனைந்து வீணாகும் நிலை உள்ளது.
எனவே, நெல் மூட்டைகளை உடனுக்குடன் கொள்முதல் செய்ய வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
மேலும், விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளுக்கு, பெரும்பாலான விவசாயிகளுக்கு, இதுவரை வங்கி கணக்கில் பணம் செலுத்தாததாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொள்முதல் செய்த நெல்லுக்கு, கடந்த 8 நாட்களுக்கு மேலாக பணம் வழங்காததால், விவசாயி ஒருவர் மண்ணெண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவமும் அறங்கேறியுள்ளது.
முறையான அறிவிப்பு இல்லை
மார்க்கெட் கமிட்டிக்கு அதிக அளவில் நெல் மூட்டைகள் வருவதால், கொள்முதல் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வரும் 4ம் தேதிக்கு பிறகு நெல் மூட்டைகளை கொண்டு வர, விவசாயிகளுக்கு கமிட்டி நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஆனால், இந்த அறிவிப்பு வாட்ஸ் ஆப் குழுக் களில் மட்டும் பகிரப்பட்டது. முறையான அறிவிப்பு செய்யப்படவில்லை. இதனால், நெல் மூட்டைகள் வரத்து குறையவில்லை. நேற்று அதிக அளவில் விவசாயிகள் வந்தனர்.
விவசாயிகள் வாக்குவாதம்
மார்க்கெட் கமிட்டிக்கு நேற்று வந்த நெல்லை, கமிட்டி ஊழியர்கள் திருப்பி அனுப்ப முயன்றனர். ஆனால் விவசாயிகள், நாங்கள் ஆட்கூலி வைத்து மூட்டைகளை ஏற்றி வந்துள்ளோம். அதனால், திரும்பி செல்ல முடியாது என, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த விருத்தாசலம் போலீசார் மற்றும் அதிகாரிகள் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதில், நெல்மூட்டை கொண்டுவந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்படும். அதுவரை மாற்று இடத்தில் நிறுத்தி வைக்கும்படி கேட்டுக்கொண்டனர்.
இதையேற்ற விவசாயிகள் அங்கிருந்து வாகனங்களை எடுத்து சென்று மாற்று இடத்தில் நிறுத்தினர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

