/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வீராணம் ஏரியில் நீர்மட்டம் கிடுகிடு சரிவு; சென்னைக்கு தண்ணீர் அனுப்புவதில் சிக்கல்
/
வீராணம் ஏரியில் நீர்மட்டம் கிடுகிடு சரிவு; சென்னைக்கு தண்ணீர் அனுப்புவதில் சிக்கல்
வீராணம் ஏரியில் நீர்மட்டம் கிடுகிடு சரிவு; சென்னைக்கு தண்ணீர் அனுப்புவதில் சிக்கல்
வீராணம் ஏரியில் நீர்மட்டம் கிடுகிடு சரிவு; சென்னைக்கு தண்ணீர் அனுப்புவதில் சிக்கல்
ADDED : பிப் 12, 2024 06:47 AM

கடலுார் : காட்டுமன்னார்கோவில் வீராணம் ஏரியில் நீர்மட்டம் முற்றிலும் சரிந்ததால், சென்னையின் குடிநீர் தேவைக்கு தண்ணீர் அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மேட்டூர் அணையில் திறக்கப்படும் தண்ணீர், காவிரி ஆறு வழியாக கல்லணை, கீழணைக்கு வருகிறது. அணைக்கரை கீழணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு வடவாறு வழியாக, கடலுார் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரியில் தேக்கப்படுகிறது. வீராணம் ஏரி மூலம் 45,000 ஏக்கர் டெல்டா நிலம் பாசன வசதி பெறுகிறது. மேலும், ஏரியில் இருந்து சென்னை மாநகர மக்களின் குடிநீர் தேவைக்கு தண்ணீர் அனுப்பப்படுகிறது.
இந்த ஆண்டு போதிய மழை இல்லாததால், ஜனவரி மாதம் முதல் கீழணையில் நீர்மட்டம் சரிந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் டெல்டா பாசனத்திற்கு சில நாட்கள் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால், நீர்மட்டம் குறைந்து தற்போது 2.5 அடி அளவில், குட்டை போல காட்சியளிக்கிறது.
கீழணையில் தண்ணீர் இல்லாததால் வீராணம் ஏரிக்கு நீர்வரத்து குறைந்தது. இருப்பினும், ஏரியில் இருந்து சென்னை குடிநீருக்கும், பாசனத்திற்கும் தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இதனால் ஏரியின் நீர்மட்டம் மளமளவென சரிந்தது. வீராணம் ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடி (1465 மில்லியன் கன அடி). தற்போது ஏரியில் நீர்மட்டம் 40.70 அடி குறைந்து, 147 மில்லியன் கன அடி தண்ணீர் மட்டுமே உள்ளது.
இதன் காரணமாக, சென்னை மெட்ரோ குடிநீருக்கு மிகக் குறைந்த அளவில் 54 கன அடி தண்ணீர் மட்டுமே அனுப்பப்படுகிறது. வீராணம் ஏரிக்கு நீர்வரத்து இல்லாத நிலையில், அடுத்து வரும் நாட்களில் சென்னைக்கு தண்ணீர் அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மேலும், ஏரியின் சுற்றுப்புறத்தில் உள்ள சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், சேத்தியாத்தோப்பு பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறையும் அபாயமும் ஏற்பட்டுள்ளதால், விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
கடந்த ஆண்டு இதே நாளில் (பிப்ரவரி 11ம் தேதி), 9 அடி உயரம் கொண்ட கீழணையில் 8 அடி அளவிற்கு தண்ணீர் தேக்கப்பட்டிருந்தது. வீராணம் ஏரியில் 47.50 அடி கொள்ளளவில் 47.15 அடி (1380 மில்லியன் கன அடி) தண்ணீர் இருப்பு வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத் தக்கது.

