ADDED : ஜன 21, 2024 03:17 AM
டாஸ்மாக் ஊழியர்கள் தர்ணா
தர்மபுரி மாவட்டத்தில், 64 டாஸ்மாக் கடைகளில், நேற்று முன்தினம் முதல் மது பாட்டில் திரும்ப பெறும் திட்டம் அமலானது. இதற்கு,டாஸ்மாக் ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் டாஸ்மாக் ஊழியர்கள் கடையை திறக்காமல், தடங்கத்திலுள்ள மாவட்ட டாஸ்மாக் கிடங்கு முன் குவிந்து, தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
டாஸ்மாக் ஊழியர் தினகரன் கூறுகையில், ''இத்திட்டத்தால், மது பாட்டில்களின் மீது ஸ்டிக்கர் ஒட்டி, கலர் மார்க்கரில் அடையாளமிட்டு விற்றோம். இன்று வாங்கும் மது பாட்டிலை, இன்றே கொடுத்தால் மட்டுமே,10 ரூபாய் வழங்கப்படும்.
''காலி பாட்டில்களை வாங்குவதற்கும், தேக்கி வைப்பதற்கும் இட வசதியோ, ஊழியர்களோ இல்லை. மேலும், மது பிரியர்களால் ஏற்பட்ட பிரச்னைகளால் எங்களால் நிம்மதியாக பணியாற்ற முடியவில்லை. இதனால், இத்திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தி, மாவட்டம் முழுதும், 64 டாஸ்மாக் கடை ஊழியர்கள், 336 பேர், கடையை திறக்காமல் எதிர்ப்பு தெரிவிக்கிறோம்,'' என்றார்.
தர்மபுரி டாஸ்மாக் பொதுமேலாளர் மகேஸ்வரி, ஊழியர்களிடம் பேச்சு நடத்திய பின், மதியம் 3:00 மணிக்கு கடைகள் திறக்கப்பட்டன.

