/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கூட்டுறவு வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்
/
கூட்டுறவு வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்
ADDED : ஜன 24, 2024 10:50 AM
தர்மபுரி: தர்மபுரி மாவட்ட, மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கம் சார்பில், மத்திய கூட்டுறவு வங்கி தலைமையகத்தில், ஆர்ப்பாட்டம் மற்றும் வேலை நிறுத்த போராட்டம் நேற்று தொடங்கியது.
இதில், அனைத்து மத்திய நகர கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கு, 20 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும். கேரளா மாநிலம் போல் தமிழ்நாட்டிலுள்ள, 23 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் மற்றும் தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி ஆகியவற்றை இணைத்து, தமிழ்நாடு வங்கி உருவாக்க வேண்டும். கடந்த எட்டு ஆண்டுகளாக பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கு வெளியிடாத முதுநிலை பட்டியல் வெளியிட வேண்டும். ஊழியர் கடன்களுக்கு ஏற்கனவே இருந்து வந்த வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளதை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட, 10 அம்ச கோரிக்கைகளை
வலியுறுத்தி, கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு, தர்மபுரி, கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த மாவட்டத்திலுள்ள, 43 கிளைகளை சார்ந்த வங்கி ஊழியர்கள், 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இரண்டு நாள் வேலைநிறுத்த போராட்டத்தால், தர்மபுரி மாவட்டத்திலுள்ள, 21 கிளைகளில் நாளொன்றுக்கு, 25 கோடி என, 50 கோடி ரூபாய் அளவில் வங்கி பரிவர்த்தனை பாதித்துள்ளதாக வங்கி ஊழியர்கள் தெரிவித்தனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு சங்க தலைவர் கஜேந்திரன் தலைமை வகித்தார். சங்க பொதுச்செயலாளர் சாமிக்கண்ணு, மாநில துணைத்தலைவர் அறிவழகன் உள்ளிட்ட
நிர்வாகிகள், வங்கி பணியாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

