/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பள்ளி மாணவன் கொலையில் கல்லுாரி மாணவியும் சிக்கினார்: அலட்சிய ஏட்டு ஆயுதப்படைக்கு மாற்றம்
/
பள்ளி மாணவன் கொலையில் கல்லுாரி மாணவியும் சிக்கினார்: அலட்சிய ஏட்டு ஆயுதப்படைக்கு மாற்றம்
பள்ளி மாணவன் கொலையில் கல்லுாரி மாணவியும் சிக்கினார்: அலட்சிய ஏட்டு ஆயுதப்படைக்கு மாற்றம்
பள்ளி மாணவன் கொலையில் கல்லுாரி மாணவியும் சிக்கினார்: அலட்சிய ஏட்டு ஆயுதப்படைக்கு மாற்றம்
UPDATED : ஜூலை 05, 2025 12:15 PM
ADDED : ஜூலை 05, 2025 02:31 AM

அஞ்செட்டி: பள்ளி மாணவன் கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில், கல்லுாரி மாணவிக்கு தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதால்,அவர் கைது செய்யப்பட்டார்.
மாணவனை காணவில்லை என, பெற்றோர் புகார் அளித்த போது, 'உன் மகன் கோடீஸ்வரன் வீட்டு பிள்ளையா?' என, கிண்டல் அடித்து புகாரை அலட்சியப்படுத்திய ஏட்டு ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார். கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகே மாவனட்டி கிராமத்தை சேர்ந்த தொழிலாளி சிவராஜ் மகன் ரோகித், 13, அஞ்செட்டி அரசு பள்ளியில், 8ம் வகுப்பு படித்தார்.
கொண்டை ஊசி வளைவு
கடந்த, 2ம் தேதி, ரோகித்தை காரில் கடத்திய நபர்கள், கொலை செய்து, அஞ்செட்டி - தேன்கனிக்கோட்டை சாலையில் உள்ள திருமுடுக்கு கொண்டை ஊசி வளைவு பகுதியில், 50 அடி பள்ளத்தில் சடலத்தை வீசினர். இது தொடர்பாக, மாவனட்டியை சேர்ந்த புட்டண்ணன் மகன் மாதேவன், 21, கர்நாடகா மாநிலம், ராம்நகர் மாவட்டம், கனகபுரா அருகே உன்சனஹள்ளியை சேர்ந்த மாரப்பன் மகன் மாதேவன், 21, ஆகிய நண்பர்கள் இருவரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
இந்த வழக்கில் திடீர் திருப்பமாக, கிருஷ்ணகிரி அரசு கலை கல்லுாரி விடுதியில் தங்கி படிக்கும் மாவனட்டியை சேர்ந்த, 18 வயது மாணவி நேற்று அஞ்செட்டி போலீசாரால் கைது செய்யப்பட்டார். கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில், ரோகித் சடலம் நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
கொலை குறித்து போலீசார் கூறியதாவது: புட்டண்ணன் மகன் மாதேவனும், கைதான மாணவியும் காதலித்துஉள்ளனர். கல்லுாரிக்கு செல்லாமல் விடுமுறை எடுத்த மாணவி, கடந்த, 2ம் தேதி நண்பகல், 12:00 மணிக்கு தேவன்தொட்டியில் உள்ள கோவிலுக்கு மாதேவனுடன் சென்றார். அங்கு இருவரும் தனிமையில் இருப்பதை ரோகித் பார்த்து விட்டான்.
தகாத வார்த்தை
'வெளியில் கூறி விடுவேன்' என மாணவன் கூறியதால், கிரிக்கெட் பேட், பந்து வாங்கி தருவதாக கூறி, மாணவனை காரில் ஏற்றி அஞ்செட்டிக்கு மாதேவன், அவரது நண்பரான மற்றொரு மாதேவன், மாணவி ஆகியோர் அழைத்துச் சென்றனர். அஞ்செட்டியில் கிரிக்கெட் பேட் கிடைக்காததால், பேக்கரியில் ஸ்வீட் பீர் வாங்கி கொடுத்து மாணவனை குடிக்க வைத்துள்ளனர். மாணவன் வாந்தி எடுத்துள்ளார்.
அதன் பின் தேன்கனிக்கோட்டையில் பேட், பந்து வாங்கி தருவதாக கூறி காரில் கடத்தினர். அப்போது, ரோகித், மாதேவனின் காதலியை தகாத வார்த்தையால் திட்டியுள்ளார். இதற்கு மேல் மாணவனை விட்டு வைக்கக்கூடாது என நினைத்து, சற்று மயக்க நிலையில் இருந்த ரோகித்தின் வாய், மூக்கை கையால் மூடி கொல்ல முயன்றுள்ளனர்.
அதில் மாணவன் உயிர் பிரியாததால், மாதேவன் காதலியின் துப்பட்டாவை வாங்கி, சிறுவனின் கழுத்தை நெரித்து கொலை செய்து, 50 அடி பள்ளத்தில் சடலத்தை வீசியுள்ளனர். இந்த கொலையில் தொடர்புள்ளதால், மாதேவனின் காதலியையும் கைது செய்துள்ளோம்.இவ்வாறு கூறினர்.