ADDED : ஜன 23, 2024 10:13 AM
தர்மபுரி: பழைய பென்சன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ ஜியோ சார்பில், நல்லம்பள்ளி பி.டி.ஒ., அலுவலகம் முன் பிரசார கூட்டம் நேற்று நடந்தது. வட்ட தலைவர் யாரப்பாஷா தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் பழனியம்மாள், மாவட்ட செயலாளர் சேகர், பொருளாளர் இளவேனில், நிதி காப்பாளர் புகழேந்தி மற்றும் பலர் பேசினர்.
இதில், 2003 ஏப்., 1க்கு பிறகு அரசுப்பணியில் சேர்ந்தோருக்கு தற்போது நடைமுறை படுத்தப்பட்டு வரும், பங்
களிப்புடன் கூடிய ஓய்வூதிய
திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு, உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, உடற்கல்வி இயக்குனர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு, மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்படாமல் இழைக்கப்பட்டு வரும் அநீதி களைய வேண்டும்.
சிறப்பு காலமுறை ஊதியம் பெற்றுவரும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள், ஊர்ப்புற நுாலகர்கள், கல்வித்துறையில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்கள், தொகுப்பூதியத்தில் பணியாற்றும் செவிலியர்கள், சிறப்பு ஆசிரியர்கள், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் ஆகியோருக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும்.
மேலும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறையில் பணியாற்றும் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அரசின் பல்வேறு துறைகளில், 30 விழுக்காட்டிற்கு மேலாக காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிடுவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ ஜியோ சார்பில் ஜன., 30 அன்று தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் நடக்கவுள்ள மறியல் போராட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என,
பிரசாரத்தில் வலியுறுத்தினர்.

