/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
காலி மதுபாட்டில் திட்டத்துக்கு எதிர்ப்பு கடையை திறக்காமல் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்
/
காலி மதுபாட்டில் திட்டத்துக்கு எதிர்ப்பு கடையை திறக்காமல் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்
காலி மதுபாட்டில் திட்டத்துக்கு எதிர்ப்பு கடையை திறக்காமல் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்
காலி மதுபாட்டில் திட்டத்துக்கு எதிர்ப்பு கடையை திறக்காமல் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்
ADDED : ஜன 21, 2024 12:18 PM
தர்மபுரி: டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில் வாங்கும் புதிய திட்டத்துக்கு, 10 ரூபாய் கூடுதலாக வாங்குவதால், ஏற்படும் பிரச்னைகளை தடுக்க முடியாமல், தர்மபுரியில் டாஸ்மாக் ஊழியர்கள் கடையை திறக்காமல் எதிர்ப்பு தெரிவித்தனர்.
தமிழகத்தில், திருவாரூர், நாகப்பட்டணம், கன்னியாகுமரி, தேனி, தர்மபுரி உள்ளிட்ட, 5 மாவட்டங்களில் காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்திற்காக, கடையின் எண் குறிப்பிட்ட ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு, பாட்டிலுக்கு, 10 ரூபாய் கூடுதலாக வாங்கும் திட்டம் நேற்று முன்தினம் தொடங்கப்பட்டது.
அதன்படி, தர்மபுரி மாவட்டத்தில், 64 டாஸ்மாக் கடைகளில், நேற்று முன்தினம் முதல், மது பாட்டில் வாங்கும்போது கூடுதலாக, 10 ரூபாய் கொடுத்து வாங்கி, காலி மது பாட்டில்களை கொடுத்தால், 10 ரூபாய் திரும்ப வழங்கப்படும் என அறிவித்தனர். இதற்கு, தர்மபுரி மாவட்டம் முழுவதும் மதுப்பிரியர்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இதனால், டாஸ்மாக் ஊழியர்கள் கடையை திறக்காமல், தடங்கத்திலுள்ள மாவட்ட டாஸ்மாக் கிடங்கு முன் குவிந்து, தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
இது குறித்து, டாஸ்மாக் ஊழியர் தினகரன் கூறுகையில், ''இத்திட்டத்தால், மது பாட்டில்களின் மீது ஸ்டிக்கர் ஒட்டி, கலர் மார்க்கரில் அடையாளமிட்டு விற்றோம். இன்று வாங்கும் மது பாட்டிலை, இன்றே கொடுத்தால் மட்டுமே, 10 ரூபாய் வழங்கப்படும். காலி பாட்டில்களை வாங்குவதற்கும், தேக்கி வைப்பதற்கு இடவசதியோ, ஊழியர்களோ இல்லை. மேலும், மது பிரியர்களால் ஏற்பட்ட பிரச்னைகளால் எங்களால் நிம்மதியாக பணியாற்ற முடியவில்லை. இதனால், இத்திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தி, மாவட்டம் முழுவதுமுள்ள, 64 டாஸ்மாக் கடை ஊழியர்கள், 336 பேர், கடையை திறக்காமல் எதிர்ப்பு தெரிவிக்கிறோம்,'' என்றார்.
இதனால் பகல், 12 மணியாகியும் திறக்கப்படாத டாஸ்மாக் கடைகள் முன் மதுப்பிரியர்கள் குவிந்து, போலீசாரிடம் கடையை திறக்க வலியுறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நிலைமை கட்டுக்கடங்காமல் போனதால், தர்மபுரி டாஸ்மாக் பொதுமேலாளர் மகேஸ்வரி, ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும், உடன்பாடு ஏற்படாத நிலையில், ''முதலில் கடையை திறங்கள். நான் மேலிடத்தில் பேசி முடிவு செய்கிறேன்,'' என, அவர் தெரிவித்தார். பின்னர், மதியம், 3:00 மணிக்கு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது.

