/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
டாஸ்மாக் கடை பணியாளர்கள் போராட்டம்
/
டாஸ்மாக் கடை பணியாளர்கள் போராட்டம்
ADDED : ஜன 21, 2024 12:21 PM
தர்மபுரி மாவட்டத்தில் செயல்படும் டாஸ்மாக் கடைகளில், நேற்று முன்தினம் முதல், மதுபாட்டில்களில், 'க்யூஆர்' கோடு ஸ்டிக்கர்கள் ஒட்டி மது விற்பனை செய்யப்பட்டது. மதுபிரியர்கள் மதுவை குடித்துவிட்டு, அந்த பாட்டில்களை உடைக்காமல் மீண்டும் கடைகளில் திரும்ப வழங்கினால், அந்த பாட்டிலுக்கு முன்கூட்டியே அவர்கள் வழங்கிய, 10 ரூபாய் திரும்ப வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் ஸ்டிக்கர் ஒட்டப்படும் மதுபாட்டில்களை வைக்க போதிய இடவசதி இல்லை. மேலும், மதுபாட்டில்களில், 'க்யூஆர்' கோடு ஸ்டிக்கர்கள் ஒட்டுவதால், தங்களுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்படுகிறது. எனவே, இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று, அரூரில் கடையை திறக்காமல் டாஸ்மாக் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வழக்கம் போல் மது வாங்க வந்த குடிமகன்கள், கடையின் முன் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். ஆனால், 12:00 மணியாகியும் கடை திறக்காத நிலையில் அதற்கான காரணம் குறித்து விசாரித்தபோது, டாஸ்மாக் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனால், புலம்பிய குடிமகன்கள், ஸ்டிக்கர் ஒட்டி விற்கப்படும் மதுபாட்டில்களுக்கு, முன்கூட்டியே தங்களிடமிருந்து, 10 ரூபாய் வசூல் செய்யப்படுகிறது. மது குடித்துவிட்டு, அன்றே பாட்டில் கொண்டு வந்து கொடுத்தால்தான், 10 ரூபாய் திரும்ப வழங்கப்படுகிறது. இதற்காக, பல கி.மீ., துாரத்தில் இருந்து, மீண்டும் டாஸ்மாக் கடைக்கு வரவேண்டி உள்ளதால் இத்திட்டத்தை கைவிட வேண்டும் எனக்கூறினர். பின், பணியாளர்கள் போராட்டத்தை கைவிட்டு, 1:35 மணிக்கு கடையை திறந்தனர்.
மது வாங்க முடியாமல் தவித்த குடிமகன்கள்

