ADDED : மார் 26, 2025 02:01 AM

திண்டுக்கல்:மைசூரு எக்ஸ்பிரஸ் ரயிலில் மதுரைக்கு மது பாட்டில்களை கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.
மதுரை மாவட்டம் மேலுார் கக்கன் தெருவை சேர்ந்தவர் முத்துஅமர் 23. நேற்று முன்தினம் மைசூருவிலிருந்து துாத்துக்குடி சென்ற மைசூரு எக்ஸ்பிரஸ் ரயிலில் பெங்களூருவில் ஏறினார்.
கர்நாடகாவிலிருந்து 9 மது பாட்டில்களை மதுரைக்கு கடத்தி வந்தார். முன்பதிவில்லா பெட்டியில் அமர்ந்திருந்த அவர் சக பயணிகளுடன் இயல்பாக பயணித்து கொண்டிருந்தார். ரயில் திண்டுக்கல் அருகே வந்தபோது ரயில்வே இன்ஸ்பெக்டர் துாயமணி வெள்ளைசாமி தலைமையிலான போலீசார் முத்துஅமர் உடைமைகளை சோதித்தனர்.
அதில் 9 மதுபாட்டில்கள் இருந்தன.
போலீசார் அவரை திண்டுக்கல் மது விலக்கு தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். முத்துஅமரை கைது செய்த போலீசார் மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.திண்டுக்கல் ரயில் வழித்தடத்தில் சில நாட்களாக வெளி மாநில மது பாட்டில்கள், கஞ்சா, குட்கா பொருட்கள் கடத்தும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
இதில் ஒருசிலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மற்றவர்கள் அச்சமின்றி கடத்துகின்றனர்.