மாநகராட்சி அதிகாரிகள் அன்னதானம்
திண்டுக்கல் :திண்டுக்கல் மாநகராட்சி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் நத்தம்ரோடு மாநகராட்சி விருந்தினர்மாளிகை அருகே பழநி பாதயாத்திரை பக்தர்களுக்காக அன்னதானம் வழங்கப்பட்டது. 2000 பேருக்கு நேற்று காலை முதல் உணவு தயாரிக்கப்பட்டு மாநகராட்சி அதிகாரிகள் வழங்கினார்கள். இதையடுத்து பெண்கள்,ஆண்களுக்கு தனித்தனியாக கழிப்பறை,குடிதண்ணீர் போன்ற அடிப்படை வசதிகளையும் அங்கேயே செய்து கொடுத்தனர்.
16 இடங்களில் குடி தண்ணீர்
திண்டுக்கல் : பழநி முருகன் கோயில் தைப்பூசத்தை முன்னிட்டு வெளி மாவட்ட பக்தர்கள் திண்டுக்கல் நகர் வழியாக பாதயாத்திரையாக செல்கின்றனர். இங்கு வரும் பக்தர்களுக்கு குடிதண்ணீர் வசதியில்லாமல் அல்லாடுவதாக பொது மக்கள் மாநகராட்சிக்கு கோரிக்கை வைத்தனர். கமிஷனர் ரவிச்சந்திரன் உத்தரவில் செயற்பொறியாளர் சுப்பிரமணியன் தலைமையிலான அதிகாரிகள் திண்டுக்கல் நாகல்நகர்,பழநிரோடு,மதுரை ரோடு உள்ளிட்ட மாநகராட்சி பகுதிகளில் உள்ள 16 இடங்களில் குடிதண்ணீர் தொட்டிகள் அமைத்துள்ளனர்.
அன்னதான உணவுகளில் ஆய்வு
திண்டுக்கல் : பழநி முருகன் கோயில் பாதயாத்திரை பக்தர்களுக்கு வழியெங்கும் பல்வேறு அமைப்புகள் சார்பில் அன்னதானம் வழங்கப்படுகிறது. இந்த உணவுகள் சுகாதாரமாக தயாரிக்கப்படுகிறதா என மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் கலைவாணி,பாதுகாப்பு அலுவலர் செல்வம் தலைமையிலான அதிகாரிகள் அன்னதான உணவுகளை ஆய்வு செய்தனர். உணவு தயாரிப்பவர்கள் சுகாதாரமாக உடை அணிந்திருக்க வேண்டும் என அதிகாரிகள் வலியுறுத்தினர்.
ராமர் கோயில் நிகழ்ச்சி 'லைவ்'
திண்டுக்கல் :அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதை யொட்டி திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷனில் 5 பிளாட்பாரங்களில் அமைக்கப்பட்டுள்ள எல்.இ.டி.,விளம்பர டிவிக்களில் இந்தநிகழ்ச்சி நேரடியாக ஒளிபரப்பபட்டது. இதை பயணிகள் பார்த்தனர். காலை 9:00 மணிக்கு துவங்கப்பட்ட இந்தநிகழ்ச்சி மதியம் 1:15 மணி வரை ஒளிபரப்பானது.
அரிமா சங்க பொங்கல் விழா
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் அரிமா சங்கம் சார்பில் என்.ஜி.ஓ.காலனி தனியார் மண்டபத்தில் பொங்கல் விழா முன்னாள் மாவட்ட ஆளுனர் சண்முக சுந்தரம் தலைமையில் நடந்தது. தலைவர் குப்புசாமி, கிருஷ்ணம்மாள் சண்முகசுந்தரம் முன்னிலை வகித்தனர். மத நல்லிணக்க துாதரான சமூக ஆர்வலர் காஜாமைதீன் வரவேற்றார். பொறியாளர் முகமது சுல்தான், இணைசெயலாளர் திருஞானசம்மந்தம், வெங்கடேஸ்வரன், சுப்ரமணி, குமார், சாமி, ராஜாங்கம் பங்கேற்றனர். நிர்வாகி கோபாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.
வீரர்களுக்கு அழைப்பு
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பட்டேல் ஹாக்கி அகடாமி, வி.ஜி.கல்வி அறக்கட்டளை சார்பில் தேசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்ற வீரர்கள், பயிற்சியாளர்களை கவுரவித்து விருது வழங்கும் விழா , பிப்.4ல் மலைக்கோட்டை ஹாக்கி மைதானத்தில் நடைபெற உள்ளது. சம்மந்தப்பட்ட வீரர்கள், பயிற்சியாளர்கள் ஜன.29க்குள் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்ற சான்றிதழ், ஆதார், பாஸ்போர்ட் போட்டோ 1 சமர்ப்பித்து பதிவு செய்யலாம். விபரங்களுக்கு 93842 25810 ல் தொடர்பு கொள்ளலாம் என செயலாளர் ஞானகுரு கேட்டுள்ளார்.
சிவாஜி மன்ற கூட்டம்
திண்டுக்கல்: திண்டுக்கல் கிழக்கு மாவட்ட சிவாஜி மன்றம் ஆலோசனை கூட்டம் பொறுப்பாளர் சரவணன் தலைமையில் நடந்தது. பொதுசெயலாளர் காளிதாஸ் முன்னிலை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் வரவேற்றார். கவுரவ ஆலோசகர் நவரத்தினம், முன்னாள் தலைவர் ஆனந்தன் பேசினர். நிர்வாகிகள் சுந்தரமகாலிங்கம், சிவாஜி பத்மநாபன், பழனியப்பன், நாகரத்தினபாண்டி, அழகிரி, லெட்சுமி நாராயணபெருமாள் பங்கேற்றனர். மாவட்ட பொறுப்பாளர் வைரவேல் ஏற்பாடு செய்தார். செயற்குழு உறுப்பினர் செந்தில் குமார் நன்றி கூறினார்.
கிரிக்கெட் லீக் போட்டிக்கு அழைப்பு
திண்டுக்கல் :திண்டுக்கல் மாவட்ட கிரிக்கெட் சங்கம்,என்.பி.ஆர்.கல்வி குழுமம் இணைந்து நடத்தும் கல்லுாரிகளுக்கிடையேயான லீக் கிரிக்கெட் போட்டி பிப்ரவரி முதல் வாரத்திலிருந்து நடக்கிறது. 30 ஓவர்கள் அடிப்படையில் லீக் சுற்று முறைப்படி நடக்கும். நுழைவுக்கட்டணம் கிடையாது. இணைச்செயலாளர், திண்டுக்கல் மாவட்ட கிரிக்கெட் சங்கம், C/o. 6/1B,எம்.வி.எம்.,நகர், 6வது கிராஸ், திண்டுக்கல் என்ற முகவரியில் ஜன.28ற்குள் முன் பதிவு செய்யலாம் என சங்க இணைச்செயலாளர் மகேந்திரகுமார் கேட்டுள்ளார்.மேலும் தகவலுக்கு 77275 98428ல் தொடர்பு கொள்ளலாம்.
குடிநீர் பைப்லைன் 'கட்'
திண்டுக்கல் :திண்டுக்கல் மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன் வரி செலுத்தாமலிருப்பவர்கள் வீடு குடிதண்ணீர் இணைப்புகளை துண்டிக்க உத்தரவிட்டார். இதையடுத்து நேற்று திண்டுக்கல் நகர் 4 மண்டல பகுதிகளில் வருவாய் ஆய்வாளர்கள் ஆய்வு செய்தனர். வரி செலுத்தாத 16 பேரின் வீட்டு குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டது.
அரசு ஊழியர்கள் சங்க கூட்டம்
திண்டுக்கல்: தமிழ்நாடு அனைத்து அரசு அலுவலர்கள் ஆசிரியர்கள் ,உள்ளாட்சிப் பணியாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் திண்டுக்கல் மாவட்டம் மைய நிர்வாகிகள் கூட்டம் , அரசு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பார்த்தசாரதி, சலேத் ராஜா தலைமையில் நடந்தது. நிதி காப்பாளர் துரைராஜ், தேசிய ஆசிரியர் சங்க மாநிலத் துணைத் தலைவர் விஜய், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜானகிராமன், தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகி பாலமுருகன், அனைத்து துறை ஊர்தி ஓட்டுநர் சங்க மாநில துணை பொதுச்செயலாளர் கண்ணதாசன், மாவட்ட தணிக்கையாளர் சக்திவேல் பங்கேற்றனர்.
நிறுவனங்களுக்கு கூடுதல் மானியம்
திண்டுக்கல்:ஜவுளித் துறையை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களின் மூலம் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசின் திருத்தப்பட்ட தொழில்நுட்ப மேம்படுத்துதல் நிதித் திட்டத்தின்கீழ் 10 சதவீத மானியம் பெற்ற நிறுவனங்களுக்கு மாநில அரசு சார்பிலும் 10 சதவீத கூடுதல் மானியம் வழங்கப்படுகிறது. அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த இரு நிறுவனங்களுக்கு ரூ.54.97 லட்சம், ரூ.4.63 லட்சம் என ரூ.59.61 லட்சம் கூடுதல் மானியமாக வழங்கப்பட்டது .
பணியாளர்களுக்கு பயிற்சி
சின்னாளபட்டி:காந்திகிராம அறக்கட்டளை சார்பில் இந்திய எழுத்தறிவு திட்டம் மூலம் அங்கன்வாடி பணியாளர்களுக்கு பயிற்சி முகாம் நடந்தது. ஆத்துார் ஊராட்சி ஒன்றிய தலைவர் மகேஸ்வரி முருகேசன் தலைமை வகித்தார். மாவட்ட குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் பூங்கொடி, காந்திகிராம அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் சிவக்குமார், சோட்டா சீனிவாசன் ,நிறுவன நிர்வாகி ராமானுஜம் முன்னிலை வகித்தனர். இந்திய எழுத்தறிவு திட்ட தேசிய மேலாளர் ரங்கராஜன் வரவேற்றார். அங்கன்வாடி மைய ஊழியர்களுக்கான கல்வி பணி குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது. இந்திய எழுத்தறிவு திட்ட சென்னை ஒருங்கிணைப்பாளர் ஹேமலதா, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாப்பு, புரவலர் முருகேசன், ஊராட்சி தலைவர்கள் பிள்ளையார்நத்தம் உலகநாதன், தொப்பம்பட்டி கருப்பையா, ஆலமரத்துப்பட்டி ஆறுமுகம், என்.பஞ்சம்பட்டி பாப்பாத்தி பங்கேற்றனர்.
விவசாயிகள் உண்ணாவிரதம்
கள்ளிமந்தையம்: தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தின் விருதுநகர் முதல் திருப்பூர் வரையிலான 765 கிலோ வாட் உயர் மின் கோபுரம் திட்டத்தால் பாதிக்கப்பட்ட ஒட்டன்சத்திரம் வட்டார விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க கோரி கள்ளிமந்தையம் அருகே தும்மிச்சிபாளையத்தில் தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் விவசாயிகள் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டனர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வடிவேல் தலைமை வகித்தார்.

