/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தண்டவாளத்தில் விரிசல்: தப்பியது செந்துார் ரயில்
/
தண்டவாளத்தில் விரிசல்: தப்பியது செந்துார் ரயில்
ADDED : ஜன 19, 2024 02:09 AM

ஒட்டன்சத்திரம்:கேரள மாநிலம், பாலக்காட்டில் இருந்து நேற்று காலை பொள்ளாச்சி, உடுமலை, பழனி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல் வழியாக திருச்செந்துார் செல்லும் பயணியர் விரைவு ரயில் வந்து கொண்டிருந்தது.
ஒட்டன்சத்திரம் ரயில்வே ஸ்டேஷன் வந்த ரயில், அங்கிருந்து காலை, 9:20 மணிக்கு திண்டுக்கல்லுக்கு புறப்பட்டது.
அந்த ரயிலில், 500க்கும் மேற்பட்ட பயணியர் இருந்தனர். ஒட்டன்சத்திரம், அக்கரைப்பட்டி ரயில்வே ஸ்டேஷன்கள் இடையே காமாட்சிபுரம் அருகே ரயில் சென்ற போது, தண்டவாளத்தில் இருந்து வந்த வழக்கத்திற்கு மாறான ஒலியை கேட்ட டிரைவர் உடனடியாக ரயிலை நிறுத்தினார்.
ரயில்வே பணியாளருக்கு தகவல் தரப்பட்டு, சோதனை செய்யப்பட்டது. அப்போது, தண்டவாளத்தில் பெரிய விரிசல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த விரிசல் தற்காலிகமாக சரி செய்யப்பட்டு 30 நிமிட தாமதத்திற்கு பின் ரயில் புறப்பட்டு சென்றது.
உரிய நேரத்தில் விரிசல் கண்டுபிடிக்கப்பட்டதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.

