/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஊருக்கு கொண்டாட்டம்; ஊழியர்கள் திண்டாட்டம்
/
ஊருக்கு கொண்டாட்டம்; ஊழியர்கள் திண்டாட்டம்
ADDED : ஜன 14, 2024 11:32 AM
பொங்கல் திருவிழா நிகழ்ச்சிகள் மூன்று நாள் நடைபெறும் நிலையில், மாநகராட்சி ஊழியர்கள் விடுப்பு இன்றியும், பொங்கல் பண்டிகை கொண்டாட செல்ல முடியாமலும் அதிருப்தியில் உள்ளனர்.
திருப்பூர் மாநகராட்சியுடன் இணைந்து தன்னார்வ அமைப்புகள் நடத்தும் பொங்கல் திருவிழா வரும் 15 முதல் 17 வரை மூன்று நாள் நடக்கிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த மூன்று நாட்களும் அரசு விடுமுறையாக உள்ளது. முந்தைய 13 மற்றும் 14 ஆகியன வார விடுமுறை நாட்கள்.
இந்நிலையில், பள்ளி, கல்லுாரி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் பொங்கல் பண்டிகைக்காக விடுமுறை விடப்பட்டுள்ளன. அரசு துறைகளில் மின்சாரம், குடிநீர் வினியோகம் உள்ளிட்டவை அத்தியாவசிய பணிகள் என்ற அடிப்படையில் விடுப்பின்றி பணியாற்ற வேண்டும். அதே போல் போக்குவரத்து துறையினர், பாதுகாப்பு பணியில் உள்ள போலீசாரும் பண்டிகை நாட்கள் என்றாலும் விடுப்பின்றி பணியாற்ற வேண்டியுள்ளது. அவ்வகையில், மாநகராட்சி சார்பில் 3 நாள் நடக்கவுள்ள பொங்கல் திருவிழா நிகழ்ச்சிகளுக்கு துாய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு அலுவலர்கள் பணியாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பிரிவு வாரியாக அலுவலர்களுக்கு இந்த நிகழ்ச்சிக்கு பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது. இதனால், பொங்கல் பண்டிகை விடுமுறையின்றி இவர்கள் பணியாற்ற வேண்டியுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி ஊழியர்கள் கூறியதாவது:
பொங்கல் விடுமுறையை கணக்கிட்டு அலுவலர்கள் பல்வேறு பணிகளை திட்டமிட்டிருந்தனர். மேலும், வெளியூரைச் சேர்ந்தவர்கள் தொடர் விடுமுறையில் சொந்த ஊர் செல்வது, குடும்பத்தினருடன் பண்டிகை கொண்டாடுவது என எதிர்பார்த்திருந்தனர்.
ஆனால், பொங்கல் திருவிழா நிகழ்ச்சியில் பணியாற்ற வேண்டிய கட்டாயத்தில் இது முற்றிலும் கை விட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அரசு வழங்கும் விடுமுறையைக் கூட அனுபவிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்தாண்டும் இது போல் 3 நாள் விடுமுறையிலும் பணியாற்ற வேண்டியிருந்தது._நாங்கள் ஆண்டுதோறும் இது போல் பண்டிகை விடுமுறையை இழந்தும், குடும்பத்தாருடன் பண்டிகை கொண்டாடும் வாய்ப்பையும் பறி கொடுக்க வேண்டியுள்ளது. சுழற்சி முறையில் விடுப்பு அல்லது மாற்று நாளில் விடுப்பும் வழங்குவதில்லை. ஊழியர்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

