/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
'நாட்டின் வளர்ச்சியை வெளிப்படுத்திய பட்ஜெட்'
/
'நாட்டின் வளர்ச்சியை வெளிப்படுத்திய பட்ஜெட்'
ADDED : பிப் 02, 2024 10:18 AM
மத்திய அரசு நேற்று தாக்கல் செய்துள்ள பட்ஜெட் என்பது, கடந்த, 10 ஆண்டுகளில் நாட்டின் வளர்ச்சி என்ன என்ற தகவல்களாக தெரிவிக்கிறது. புதிய வரி விதிப்பு, அறிவிப்புகள் இல்லாதது வரவேற்புடையது என, பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச் செயலர் பி.ரவிசந்திரன்: மத்திய அரசு இடைக்கால பட்ஜெட் என்பதால் பெரிய மற்றும் புதிய அறிவிப்புகளை தெரிவிக்கவில்லை. இருந்த போதிலும் தேசிய அளவில் புதிதாக, 2 கோடி வீடுகள் கட்டித்தரப்படும் என்பதும், 1 கோடி வீடுகளுக்கு சோலார் வசதிக்கான வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும் என்ற அறிவிப்பும் வரவேற்புக்கு உரியது. குறிப்பிட்டபடி தொழில் வளர்ச்சி சார்ந்து அறிவிப்பு ஏதுமில்லை.
ஈடிசியா உடனடி முன்னாள் தலைவர் பி.திருமூர்த்தி: கடந்த, 10 ஆண்டில், 30 கோடி பெண்களுக்கு தொழில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது வரவேற்கதக்கது. ரயில் சேவையால் செலவு குறையும். சிறு, குறு தொழிலுக்கு வரி, ஜி.எஸ்.டி.,யில் வரி குறைப்பு, உணவு பொருள் பதப்படுத்துதலில், 12 சதவீதத்தில் இருந்து, 5 சதவீதமாக ஜி.எஸ்.டி., குறைப்பை எதிர்பார்த் தோம். அறிவிப்பு இல்லை. வரும் பட்ஜெட்டில் எதிர்பார்க்கிறோம்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் செ.நல்லசாமி: கடந்த, 10 ஆண்டுகளில் அவர்களது அரசு என்னென்ன செய்தது என்பதை படம் பிடித்து காட்டி உள்ளனர். இருந்தாலும், வருமான வரியில் மாற்றம் செய்யவில்லை. வரி இன வருவாய், 2.4 மடங்கு அதிகரித்துள்ளது, வரி செலுத்துவோர் எண்ணிக்கை, 2 மடங்காகி உள்ளது, விமான சேவை, 2 மடங்கு அதிகரித்துள்ளது என்ற புள்ளி விபரங்கள், நாட்டின் வளர்ச்சியை காட்டி உள்ளது.
தமிழ்நாடு சிறு மற்றும் குறு விவசாயிகள் சங்க மாநில தலைவர் கே.ஆர்.சுதந்திரராசு: இடைக்கால பட்ஜெட் என்ற போதிலும், விளை பொருளுக்கு விலை நிர்ணயம், குறைந்தபட்ச ஆதார விலையில் அந்தந்த பகுதியில் விளையும் பொருட்களை வாங்கும் திட்டம் இல்லை. பி.எம்.கிசான் திட்ட ஊக்கத்தொகை ஆண்டுக்கு, 6,000 ரூபாயில் இருந்து உயர்த்தப்படவில்லை. விவசாயத்துக்கு என தனி மானிய அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம் தருகிறது.
ஈரோடு மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு மைய இணை செயலர் ஆ.ராஜா: முத்ரா திட்டத்தில், 30 கோடி முறை, பெண் தொழில் முனைவோருக்கு வங்கி கடன் வழங்கப்பட்டதும், 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டதும், கர்ப்பப்பை வாய் புற்றுநோயை தடுக்க, 9 முதல், 18 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கு இலவச தடுப்பூசி திட்டம் வரவேற்புக்குரியது. வீட்டு மொட்டை மாடியில் சோலார் அமைத்தால், இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் வளர்ச்சியை தரும்.

