ADDED : ஜன 14, 2024 11:31 AM
பாலியல் வன்முறை
குறித்து கருத்தரங்கு
ஈரோடு மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு, மாவட்ட போலீஸ் இணைந்து, குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை என்ற தலைப்பில் கருத்தரங்கை ஈரோட்டில் நடத்தின. மகிளா நீதிமன்ற நீதிபதி மாலதி தலைமை வகித்தார். மாவட்ட முதன்மை நீதிபதியும், மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு தலைவருமான முருகேசன் முன்னிலை வகித்தார். இதில் தலைமை குற்றவியல் நடுவர் சரவணன், முதன்மை சார்பு நீதிபதி சண்முகபிரியா பேசினர். வக்கீல்கள், பெற்றோர், போலீசார் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை குறித்த விழிப்புணர்வு நாடகமும் நடத்தப்பட்டது.
பொங்கலால் விலை எகிறியது
மல்லிகை ஒரு கிலோ ரூ.3,320
புன்செய்புளியம்பட்டி பூ மார்க்கெட்டுக்கு, தற்போது பனிப்பொழிவால், பூக்கள் வரத்து குறைந்து விட்டது. குறிப்பாக முல்லை, மல்லிகை பூக்கள், 60 சதவீதம் நின்று விட்டது. இந்நிலையில் பொங்கல் பண்டிகையால் முல்லை மற்றும் மல்லிகை பூக்களுக்கு நேற்று தேவை அதிகரித்தது. இதனால் ஒரு கிலோ, 3,320 ரூபாயாக உயர்ந்தது. முல்லை, 2,100 ரூபாய்; சம்பங்கி, 140 ரூபாய்; அரளி, 220, ஜாதிமல்லி, 1,600 ரூபாய்க்கும் விற்றது.
ரத்த காயத்துடன் வந்தவாலிபரால் பரபரப்பு
ஈரோடு காந்திஜி சாலையில் உள்ள எஸ்.பி., அலுவலகத்துக்கு நேற்று காலை, 8:45 மணியளவில், 35 வயது மதிக்கதக்க வட மாநில வாலிபர், கை, தலையில் ரத்தம் வழிந்தபடி வந்தார். பீஹாரில் இருந்து ரயிலில் நண்பர்களுடன் வந்ததாகவும், ஈரோட்டில் அனைவரும் இறங்கிய பின், நண்பர் ஒருவர் மரக்கட்டையால் தன்னை தாக்கியதாக தெரிவித்தார். ரத்தம் சொட்ட சொட்ட வந்தவரால் போலீசார் பதற்றம் அடைந்தனர். ஆம்புலன்சை வரவழைத்து ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
விபத்தில் விவசாயி சாவுஅத்தாணி அருகே செம்புளிச்சாம்பாளையத்தை சேர்ந்தவர் பழனிசாமி, 71; சத்தி-பவானி சாலையில் செம்புளிச்சாம்பாளையம் பிரிவில், எக்ஸல் மொபட்டில் சென்றார். அப்போது ஸ்பிளெண்டர் பைக்கில் வந்த, குப்பாண்டபாளையத்தை சேர்ந்த ஜீவா மோதியதில் இருவரும் தடுமாறி விழுந்தனர். இதில் பலத்த காயமடைந்த பழனிசாமி, அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியில் இறந்தார். இதுகுறித்து ஆப்பக்கூடல் போலீசார் விசாரிக்கின்றனர்.
பி.எஸ்.என்.எல்., குழு உறுப்பினர்கள் நியமனம்
பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தின் ஈரோடு மாவட்ட தொலை தொடர்பு ஆலோசனை குழு உறுப்பினர்களாக பா.ஜ., மாவட்ட தலைவர் வேதானந்தம், பட்டியலின அணி மாவட்ட தலைவர் சக்திவேல் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாநகராட்சி அலுவலகத்தில்சமத்துவ பொங்கல் விழா
ஈரோடு மாநகராட்சி அலுவலக வளாகத்தில், சமத்துவ பொங்கல் விழா நேற்று நடந்தது. மேயர் நாகரத்தினம் தலைமையில், துணை மேயர் செல்வராஜ், கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி முன்னிலையில் கவுன்சிலர்கள் பொங்கல் வைத்தனர். தொடர்ந்து மேயர் நாகரத்தினம், பெண் கவுன்சிலர்கள், பொங்கல் பானையை சுற்றி கும்மியடித்து பாடல் பாடினர். நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள், மாநகராட்சி பொறியாளர் விஜயகுமார், உதவி செயற்பொறியாளர் பாஸ்கர் மற்றும் துாய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
தர்மர் பட்டாபிஷேக விழாஅம்மாபேட்டையை அடுத்த இலிப்பிலி அருகே, ஆணைக்கவுண்டனுாரில் வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. பழமை வாய்ந்த இக்கோவிலில் மார்கழி மாதம், 2ம் தேதி முதல் நாள் தோறும் காலை, 11:௦௦ மணி முதல் இரவு, 11:௦௦ மணி வரை மகாபாரதம் படிக்கப்பட்டது.
நேற்று முன்தினம் இரவு யாக வேள்வி நடந்தது. இறுதி நிகழ்வாக தர்மர் பட்டாபிஷேகம் சூடும் விழா நேற்று காலை நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் நடந்தது. இதில் அம்மாபேட்டை சுற்று வட்டாரத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மின்சாரம் தாக்கி மயில் பலி
ஈரோடு, சாஸ்திரி நகர், வாய்க்கால் மேட்டில் டிரான்ஸ்பார்மர் உள்ளது. நேற்று மாலை, 6:00 மணியளவில் எங்கிருந்தோ பறந்து வந்த ஒரு பெண் மயில், டிரான்ஸ்பார்மர் மீது அமர்ந்து விட்டது. இதில் மின்சாரம் தாக்கி பலியாகி கீழே விழுந்தது. சாஸ்திரி நகர் குடியிருப்போர் நல சங்கத்தினர், சூரம்பட்டி போலீஸ் மற்றும் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர் இறந்த மயிலை எடுத்து சென்றனர்.
வாழைத்தார், தேங்காய்
ரூ.14.41 லட்சத்துக்கு ஏலம்
கோபி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், வாழைத்தார் மற்றும் தேங்காய் ஏலம் நேற்று நடந்தது. கதளி ஒரு கிலோ, 33 ரூபாய், நேந்திரன், 23 ரூபாய்க்கும் விற்றது. பூவன் தார், 900 ரூபாய்க்கும், தேன்வாழை, 510, செவ்வாழை, 760, ரஸ்த்தாளி, 580, பச்சைநாடான், 340, ரொபஸ்டா மற்றும் மொந்தன், தலா 310 ரூபாய்க்கு விற்பனையானது. வரத்தான, 6,210 வாழைத்தார்களும், 12.90 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது. தேங்காய் ஏலத்தில் ஒரு காய் ஏழு ரூபாய் முதல், 16 ரூபாய் வரை விற்றது. வரத்தான, 13,764 தேங்காய்களும், 1.51 லட்சம் ரூபாய்க்கு விற்றது.
பொதுமக்கள்-போலீஸ்
நல்லுறவு விளையாட்டு
ஆண்டுதோறும் பொங்கல் விழாவை முன்னிட்டு, பொதுமக்கள்-போலீஸ் நல்லுறவு விளையாட்டு போட்டி, ஈரோடு மாவட்டத்தில் போலீஸ் சார்பில் நடத்தப்படுகிறது. இந்தாண்டு ஈரோடு, பெருந்துறை, பவானி, சத்தி, கோபி சப்-டிவிசன்களில் நடத்த, எஸ்.பி., அறிவுறுத்தினார்.
இதன்படி ஆணைக்கல்பாளையம் ஆயுதப்படை வளாகத்தில் பெண்கள், குழந்தைகள், ஆண்களுக்கு என தனித்தனியே வாலிபால், இசை நாற்காலி, பாட்டில் நிரப்புதல், லக்கி கார்னர், கயிறு இழுத்தல், பானை உடைத்தல், மெதுவாக சைக்கிள் ஓட்டுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டி நேற்று நடத்தப்பட்டது. போட்டிகளில் வெற்றி பெறுவோருக்கு தை பொங்கல் அல்லது அதன் பிறகு வரும் நாட்களில் பரிசு வழங்கப்படும்.
புது பஸ் ஸ்டாண்ட் பணி
90 சதவீதம் நிறைவு
ஈரோடு அருகே சோலாரில் கட்டப்பட்டு வரும் பஸ் ஸ்டாண்டை கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில், வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி, எம்.பி., அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
பின், அமைச்சர் கூறியதாவது: புது பஸ் ஸ்டாண்ட், 63.50 கோடி ரூபாயில் கட்டப்படுகிறது. இங்கிருந்து கரூர், திருச்சி, மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி மார்க்கமாக செல்லும் பஸ்கள் இயக்கப்பட உள்ளது. கட்டுமான பணி, 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது. இங்கிருந்து மத்திய பேருந்து நிலையத்துக்கு செல்ல டவுன் பஸ் வசதி செய்து தரப்படும். வணிக வளாகமும் அமைக்கப்படுகிறது. விரைவில் பணி முடிந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர, அதிகாரிகளிடம் அறிவுறுத்தி உள்ளேன். இவ்வாறு அமைச்சர் கூறினார்.
பழநி கோவில் நிர்வாகம்
ரூ.1.18 கோடிக்கு
சர்க்கரை கொள்முதல்
கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நாட்டு சர்க்கரை ஏலம் நேற்று நடந்தது. முதல் தரம் (திடம்), 60 கிலோ மூட்டை, 2,850 ரூபாய் முதல், 2,900 ரூபாய் வரை ஏலம் போனது. இரண்டாம் தரம் (மீடியம்), 2,780 ரூபாய் முதல், 2,810 ரூபாய் வரை ஏலம் போனது. வரத்தான, 4,199 நாட்டு சர்க்கரை மூட்டைகளை, பழநி தண்டாயுதபாணி சுவாமி கோவில் தேவஸ்தான நிர்வாகம், 1.18 கோடி ரூபாய்க்கு கொள்முதல் செய்ததாக, விற்பனைக்கூட அதிகாரிகள் தெரிவித்தனர்.
யாசகர் காப்பகத்தில்
பொங்கல் விழா
ஈரோடு, சோலாரில் உள்ள அட்சயம் அறக்கட்டளை யாசகர்களுக்கான மறுவாழ்வு மையத்தில் நடந்த பொங்கல் விழாவில் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில், வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி பங்கேற்றார். அங்குள்ளவர்களுக்கு பொங்கல் மற்றும் இனிப்பு, நலத்திட்ட உதவி வழங்கினார். முதியவர்களிடம் குறை மற்றும் தேவை குறித்து கேட்டறிந்தார். அறக்கட்டளை தலைவர் நவீன்குமார் அமைச்சர் மற்றும் அதிகாரிகளை வரவேற்றார்.
போலீசார் கொண்டாடிய
வன பொங்கல் விழா
சத்தியமங்கலம் போலீசார், கோவை நிழல் மையத்துடன் இணைந்து, மலைவாழ் மக்களுடன் வனப்பொங்கல் விழாவை, சிக்கரசம்பாளையம் ஊராட்சி மலை கிராமத்தில் கொண்டாடினர். இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற சத்தியமங்கலம் டி.எஸ்.பி., சரவணன், 42 குடும்பங்களை சேர்ந்த, 120 பேருக்கு, புத்தாடை, தலா 5 கிலோ அரிசி, துவரம் பருப்பு, கடலை, சமையல் எண்ணெய் உள்ளிட்ட மளிகை பொருள் தொகுப்பை வழங்கினார். பின் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கினர்.
கீழ்பவானி பாசன பகுதியில்
நெல் அறுவடை பணி தீவிரம்
பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி பாசன வாய்க்காலில் திறக்கப்பட்ட தண்ணீர் மூலம், 1 லட்சத்து, 3,500 ஏக்கர் பரப்பில் முதல் போக நெல் சாகுபடி கடந்த ஆக.,ல் துவங்கியது. தற்போது அறுவடை நடந்து வருகிறது. இதனால் ஈரோடு மாவட்டத்தில் ஆறு இடங்களில், அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்து வருகின்றனர்.
சில நாட்களுக்கு முன் மழை, கடும் பனிப்பொழிவால் அறுவடை, நெல்லை உலர்த்தும் பணி பாதித்தது.
தற்போது மழை நின்று, இரவில் பனி இருந்தாலும் பகலில் வெயில் வாட்டுவதால் இயந்திரம் மூலம் அறுவடை நடந்து வருகிறது. குறிப்பாக நசியனுார், பெருந்துறை சாலை காரைவாய்க்கால் உள்ளிட்ட பகுதிகளில் முழு வீச்சில் அறுவடை நடந்து வருகிறது.
கீழ்பவானியில் தண்ணீர் திறப்பு
2000 கன அடியாக அதிகரிப்பு
பவானிசாகர் அணையில் இருந்து, இரண்டாம் போக புன்செய் பாசனத்துக்கு, கடந்த, 7ம் தேதி முதல் கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, 500 கன அடி நீர் திறக்கப்பட்டது. படிப்படியாக அதிகரிக்கப்பட்டு, 1,800 கன அடி திறக்கப்பட்டது.
இந்நிலையில் பாசன பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால், சில நாட்களாக, 1000 கன அடி தண்ணீர் மட்டும் வெளியேற்றப்பட்டது. நேற்று முதல், 2,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில்லாமல் அணையில் இருந்து அரக்கன் கோட்டை-தடப்பள்ளி பாசனத்திற்கு, பவானி ஆற்றில், 700 கன அடி நீர், குடிநீர் தேவைக்காக, 100 கன அடி நீர் என, 2800 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நேற்று மாலை நிலவரப்படி, பவானிசாகர் அணை நீர்மட்டம், 82.32 அடி; நீர் இருப்பு 16.9 டி.எம்.சி.,யாக இருந்தது. அணை நீர்வரத்து, 849 கன அடியாக இருந்தது.
பள்ளி மாணவி மாயம்
பவானி அருகே ஜம்பை, தளவாய்பேட்டையை சேர்ந்தவர் வசந்தி, 44; கற்பூர வியாபாரி. இவரின், 15 வயது மகள் அரசுப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கிறார். நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்ற மாணவி, மாலையில் வீடு திரும்பவில்லை. உறவினர் வீடுகளில் தேடியும் கிடைக்காததால், மகளை காணவில்லை என்று, பவானி போலீஸ் ஸ்டேஷனில், வசந்தி புகார் கொடுத்துள்ளார். இதன்படி போலீசார் வழக்குப்பதிந்து, மாணவியை தேடி வருகின்றனர்.
வேட்டி சேலை இல்லையா?
பொது மக்கள் வாக்குவாதம்
தாராபுரம் நகராட்சியில், 17 ரேஷன் கடைகள் உள்ளன. இவற்றில் கடந்த, 10ம் தேதி முதல், பொங்கல் பரிசுத் தொகுப்பு, ௧,௦௦௦ ரூபாய் ரொக்கம் வழங்கப்பட்டது. அத்துடன் இலவச வேட்டி, சேலையும் வழங்கினர். இந்நிலையில் நேற்று பல ரேஷன் கடைகளிலும், வேட்டி-சேலை தீர்ந்து விட்டதாக விற்பனையாளர்கள் கூறியதால், மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் அவர்களுடன் சிலர் வாக்குவாதம் செய்தனர்.
இதுகுறித்து தாராபுரம் தாசில்தார் கோவிந்தசாமி கூறியதாவது: அரிசி கார்டுகளுக்கு மட்டுமே பொங்கல் பரிசு என்ற அடிப்படையில், வேட்டி, சேலை வந்தது. பிறகு அனைத்து கார்டுகளுக்கும் என்றதால் பற்றாக்குறை நிலவுகிறது. இது விரைவில் சரி செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
கொடுமுடி பேரூராட்சியில்
சமத்துவ பொங்கல் விழா
கொடுமுடி பேரூராட்சி அலுவலகத்தில், சமத்துவ பொங்கல் விழா நேற்று கொண்டாடப்பட்டது. மன்ற தலைவர் திலகவதி தலைமை வகித்தார். அலுவலக வளாகத்தில் அனைத்து தரப்பு மக்களும் பங்கேற்க, பொங்கலிட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது. இதில் பேரூராட்சி துணை தலைவர் ராஜாகமால்ஹசன், உறுப்பினர்கள், அலுவலக பணியாளர், சுகாதார மேற்பார்வையாளர், துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
பஸ் ஸ்டாண்டில்
போலீசார் சோதனைகுடியரசு தினத்துக்கு முன்னதாக, அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும், 22ம் தேதி நடக்கிறது. இதனால் நேற்று முன்தினம் முதல் தீவிர கண்காணிப்பு, ரோந்து பணிகளில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.இதன்படி ஈரோடு பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன் உள்பட மக்கள் அதிகம் கூடும் இடங்களில், வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழக்க வைக்கும் பிரிவை சேர்ந்த போலீசார், மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் நேற்று தீவிர சோதனை நடத்தினர். பயணிகளின் உடைமைகளை பரிசோதனை செய்தனர். ஈரோடு பஸ் ஸ்டாண்டில் மட்டும், 16 போலீசார் கண்காணிப்பு, பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். பொங்கல் பண்டிகை நாட்களில் கோவில்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்படும் என்று, போலீசார் தெரிவித்தனர்.
கூட்டம் கூடும் இடங்களில்
'ரெடிமேட்' கழிப்பறை
ஈரோடு மாநகராட்சியில் மக்கள் அதிகம் கூடும் இடம், முக்கிய சாலை, பஸ் நிறுத்த பகுதிகளில் கழிப்பறை அமைக்க, மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில் மாநகராட்சி பொது நிதியில் இருந்து முதற்கட்டமாக, 4 ரெடிமேட் கழிப்பறை கொள்முதல் செய்யப்பட்டு, மாநகராட்சி அலுவலகத்துக்கு நேற்று வந்தது. காளைமாட்டு சிலை, எஸ்.பி., அலுவலகம் அருகே உள்ள பஸ் நிறுத்தம், ஈரோடு தலைமை அரசு மருத்துவமனை பகுதி, மீனாட்சி சுந்தரனார் சாலை என நான்கு இடங்களில் வைக்கப்படவுள்ளது. இதற்கான பணிகளை பொறியாளர் பிரிவு அலுவலர்கள் செய்து வருவதாக, மாநகராட்சி நகர் நல அலுவலர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
நொய்யல் ஆற்றங்கரையில்
பொங்கல் விழா ஏற்பாடு
திருப்பூர் மாநகராட்சி சார்பில், நொய்யல் பண்பாட்டு கழகத்துடன் இணைந்து 15, 16 தேதிகளிலும், ஜீவநதி நொய்யல் சங்கத்துடன் இணைந்து, 17ம் தேதியும் மூன்று நாள் பொங்கல் விழா, நொய்யல் ஆற்றின் கரையோரம் நடக்கவுள்ளது.
வளர்மதி பாலம் முதல் யுனிவர்சல் தியேட்டர் ரோடு வழியாகவும், கஜலட்சுமி தியேட்டர் ரோடு வழியாகவும், ஈஸ்வரன் கோவில் பாலம் வரை உள்ள ரோட்டில், நொய்யலின் இரு கரையிலும் நிகழ்ச்சி நடக்கவுள்ளது. இந்த இரு ரோடுகளிலும், யுனிவர்சல் தியேட்டர் ரோடு பகுதியிலும், குண்டும்குழியுமாக உள்ள ரோடு, பேட்ச் ஒர்க் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. போக்குவரத்து ரவுண்டானா துாய்மைப்படுத்தும் பணி நடக்கிறது.
நொய்யல் கரையை ஒட்டி, விழா மேடை அமையவுள்ள இடத்தில், ரோட்டின் ஓரப் பகுதி முழுவதும் சிதிலமடைந்துள்ளது. இதனால் அப்பகுதியில் தார்ச்சாலை அமைக்கப்பட்டுள்ளது.
தேசிய இளைஞர் தின விழா
திருப்பூர் மாணவர் பங்கேற்பு
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில், தேசிய இளைஞர் திருவிழா நடக்கிறது. மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சகம் நடத்தும் இவ்விழாவில் தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து, என்.எஸ்.எஸ்., மாணவ, மாணவியர் ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.கோவை பாரதியார் பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளில் இருந்து, பத்து பேர் தேர்வாகியுள்ளனர். இதில் திருப்பூர், சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி வரலாற்று துறை மாணவர் தினேஷ் கண்ணன் பங்கேற்றுள்ளார்.
'போதைக்கு' அடிமை
௨ பேர் விபரீத முடிவு
காங்கேயம் அருகே சிவன்மலை, வேலன் நகரை சேர்ந்தவர் ரங்கநாதன், 36; கைத்தறி நெசவு தொழிலாளி. திருமணமான இவர், சில ஆண்டுகளாக குடிப்பழக்கத்துக்கு அடிமையானார். இதனால் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. ஆனால், குடிப்பழக்கத்தை விட முடியாமல் தவித்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் துாக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதேபோல் காங்கேயம் அருகே வரதப்பம்பாளையத்தை சேர்ந்த விவசாயி மயில்சாமி, 44; திருமணம் ஆகாதவர்; மணமாகாத விரக்தியில் குடிப்பழக்கத்துக்கு அடிமையானார். நேற்று முன்தினம் மாலை வீட்டில் பூச்சி மருந்தை குடித்து விட்டார். மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இதுகுறித்து காங்கேயம் போலீசார் விசாரிக்கின்றனர்.
தெருநாய்கள் கடித்து
நான்கு ஆடுகள் பலி
வெள்ளகோவில், உப்பு பாளையம் ரோடு, சக்தி நகரை சேர்ந்தவர் தண்டபாணி, 62; வீட்டருகே காலியிடத்தில் பட்டி அமைதத்து, ஆடுகள் மற்றும் மாடு வளர்த்து வருகிறார்.
நேற்று அதிகாலை ஆடுகளின் சத்தம் கேட்கவே, தண்டபாணி சென்று பார்த்தார். நான்கு ஆடுகள் கடிபட்டு இறந்து கிடந்தன. மூன்று ஆடுகள் பலத்த காயமடைந்திருந்தன. தெருநாய்களால் ஆடுகள் பலியானது தெரிய வந்தது.
அரசு பள்ளியில் ஆண்டு விழா
காங்கேயம் அருகே பொத்திபாளையம் ஊராட்சி பெரிய இல்லியம் கிராமத்தில் அரசுப்பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. காங்கேயம் யூனியன் சேர்மன் மகேஷ்குமார் தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர்கள் தனபாக்கியம், ஈஸ்வரி வரவேற்றனர். பள்ளி மற்றும் மாவட்ட அளவில் கலை, இலக்கியம் மற்றும் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கினர். மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது.

