ADDED : ஜன 19, 2024 11:50 AM
யானை தாக்கியதில்
தொழிலாளி படுகாயம்
ஆசனுார் அருகே இட்டரை மலை கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ், 50, கூலி தொழிலாளி. நேற்று முன் தினம் இரவு சத்தி சென்று விட்டு அரசு பஸ்சில் ஊருக்கு வந்தார். பெஜலட்டியில் இறங்கி இட்டரைக்கு நடந்து சென்றார். அப்போது வனப்பகுதியிலிருந்து வெளியேறிய யானை நாகராஜை துாக்கி வீசியது. இதில் படுகாயமடைந்த நிலையில், சத்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். முதலுதவி சிகிச்சைக்கு பின் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அரசு பள்ளியில்பொங்கல் விழா
ஈரோடு ரயில்வே காலனி மாநகராட்சி நடுநிலை பள்ளியில், நேற்று பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. பள்ளி மேலாண்மை குழுவினர் பங்கேற்றனர். பள்ளி மாணவ, மாணவியர் வண்ண ஆடைகளில் வந்திருந்தனர். பள்ளி வளாகத்தில் கோலமிட்டும், பொங்கல் வைக்க தேவையான பணிகளையும் ஆர்வத்துடன் செய்தனர். ஏற்பாடுகளை தலைமை ஆசிரியை ஜெயா, ஆசிரியைகள் செய்தனர்.
ரயில் மோதி மூதாட்டி பலிபெருந்துறை, சென்னிமலை சாலை, இ.எம்.எம்., மெயின் வீதி பழனிச்சாமி மனைவி துளசியம்மாள், 65; சில ஆண்டுகளாக இவருக்கு சரி வர காது கேட்பதில்லை. கடந்த, 17ம் தேதி அதிகாலை, அப்பகுதியில் தண்டவாளத்தை கடந்தபோது, திருப்பூரில் இருந்து ஈரோடு நோக்கி வந்த ரயில் மோதியதில் பலியானார். ஈரோடு ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
ரயில் டிரைவர்கள் தர்ணாஅகில இந்திய ரயில்வே ஓடும் தொழிலாளர் (லோகோ பைலட்) சங்கத்தினர், ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் முன்புறம், நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். கோட்ட தலைவர் அருண்குமார் தலைமை வகித்தார். தென் மண்டல துணை தலைவர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக அகில இந்திய துணை செயலாளர் சுனிஸ் பங்கேற்றார்.
வேலை நேரத்தை, 10 மணி நேரமாக குறைக்க வேண்டும். வார ஓய்வை, 40 மணி நேரமாக வழங்க வேண்டும். தொடர் இரவு பணியை இரண்டாக குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கிளை துணை செயலாளர் சினோஜ், கிளை தலைவர் அருண் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
உதயகிரி வேலாயுதசுவாமிகோவிலில் தைப்பூச விழா
நம்பியூரை அடுத்த மலையப்பாளையம், உதயகிரி முத்து வேலாயுத சுவாமி கோவிலில், தைப்பூச விழா கொடியேற்றத்துடன் நாளை துவங்குகிறது. இதை தொடர்ந்து, 24-ம் தேதி வரை தினமும் சுவாமி கிரிவல நிகழ்ச்சி நடக்கிறது. 25ம் தேதி சுவாமி திருக்கல்யாண உற்சவம், 26ம் தேதி தைப்பூச தேரோட்டம் நடக்கிறது. பிப்.,1ம் தேதி மகா தரிசனம், பிப்., 2ம் தேதி மஞ்சள் நீர் உற்சவம், மயில் வாகனத்தில் சுவாமி திருவீதியுலாவும் நடக்கிறது.
டோல்கேட் அருகே விபத்துதனியார் மேனேஜர் பலி
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், காந்தி நகரை சேர்ந்தவர் சங்கர், 35; திருப்பூரில் ஒரு தனியார் கம்பெனியில் மேனேஜராக வேலை செய்தார். நேற்று முன்தினம் மாலை, ஈரோட்டுக்கு பைக்கில் வந்தார். விஜயமங்கலம் டோல்கேட் அருகில், பின்னால் வந்த லாரி மோதியதில் சம்பவ இடத்தில் பலியானார். இதுகுறித்து பெருந்துறை போலீசார் விசாரிக்கின்றனர்.
கல்லுாரி ஊழியர் வீட்டில்
14 பவுன் நகை திருட்டு
ஈரோட்டில் கல்லுாரி ஊழியரின் வீட்டில், 14 பவுன் நகை திருட்டு போனது.
ஈரோடு, வேப்பம்பாளையம், நஞ்சனாபுரம் ரோட்டை சேர்ந்தவர் பிரகாஷ், 45, நந்தா கல்லுாரி ஊழியர். திருமணமாகி, ௧௨ வயதில் மகன் உள்ளார். பொங்கல் விடுமுறைக்காக குடும்பத்துடன் வெளியூர் சென்றவர், நேற்று முன்தினம் மாலை வீடு திரும்பினார்.
வீட்டு முதல் மாடியில் உள்ள முன்பக்க கதவு, படுக்கையறை கதவு பூட்டு உடைக்கப்பட்டு, பொருட்கள் கலைந்து கிடந்தன. அதிர்ச்சி அடைந்த பிரகாஷ், ஈரோடு தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சோதனையில், தங்கக்காசு, நகை என, 14 பவுன் திருட்டு போனது உறுதியானது.
வீட்டில் 'சிசிடிவி' கேமரா பொருத்தியுள்ளார். ஆனால், காட்சிகளை பதிவு செய்யும் 'டி.வி.ஆர்.,' பாக்சையும் களவாணிகள் திருடி சென்று விட்டனர். இதனால் பிற பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில், கைவரிசை காட்டிய ஆசாமிகளை, போலீசார் தேடி வருகின்றனர்.
ரயில்வே ஸ்டேஷனில்
போர்டிகோ விரிவாக்கம்
ஈரோடு ரயில்வே ஸ்டேஷனுக்கு தினமும், 60க்கும் மேற்பட்ட அதி விரைவு ரயில்கள், எக்ஸ்பிரஸ், பாசஞ்சர் ரயில்கள் வருகின்றன. ஆயிரக்கணக்கான பயணிகள் ஈரோடு வந்து செல்கின்றனர். இந்நிலையில் ரயில்வே ஸ்டேஷன் முன்புற போர்டிகோ சிறியதாக இருந்தது. இதனால் ரயிலுக்காக காத்திருக்கும் பயணிகள் போர்டிகோவுக்கு வெளியே வெயில், மழையில் நனைய வேண்டிய நிலை இருந்தது. இந்நிலையை போக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி போர்டிகோ விரிவாக்கப்பணி, 20 நாட்களுக்கு முன் துவங்கியுள்ளது. மூன்று மாதங்களுக்குள் பணி முடியும் எனத் தெரிகிறது. இதனால் மழை நீர் ரயில்வே ஸ்டேஷன் முகப்பு பகுதிக்குள் வெள்ளமாக பெருக்கெடுப்பது தவிர்க்கப்படும் என்றும், ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
விடுமுறைக்கு பிறகு மஞ்சள் ஏலம்;
விற்பனை சரிவு
ஈரோடு பகுதியில், ஈரோடு மற்றும் பெருந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூடங்கள், ஈரோடு மற்றும் கோபி சொசைட்டி என நான்கு இடங்களில், திங்கள் முதல் வெள்ளி வரை மஞ்சள் ஏலம் நடக்கிறது. பொங்கல் பண்டிகைக்காக கடந்த, 13ம் தேதி முதல் 17ம் தேதி வரை ஐந்து நாட்கள் மஞ்சள் ஏலத்துக்கு விடுமுறை விடுக்கப்பட்ட நிலையில், வழக்கமான ஏலம் நேற்று நடந்தது.
இதில் ஈரோடு ஒழுங்கு முறை விற்பனை கூடம், கோபி சொசைட்டியில் ஒரு மாதிரி கூட வைக்கப்படாததால் ஏலம் நடக்கவில்லை. பெருந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், 2 மஞ்சள் மாதிரி வைக்கப்பட்டு, 26 மூட்டை மட்டும் விற்பனையானது. ஈரோடு சொசைட்டியில், 24 மாதிரி வைக்கப்பட்டு, 323 மூட்டை விற்பனையானது.
பொங்கல் பண்டிகைக்காக வியாபாரிகள், விவசாயிகள் வெளியூர் சென்றது உட்பட பல்வேறு காரணத்தால் மஞ்சள் குறைவாகவே விற்பனையானது.
தளவாய்பட்டினத்தில்
மஞ்சுவிரட்டு ஜோர்
தாராபுரத்தை அடுத்த தளவாய்பட்டினத்தில், பொங்கல் பண்டிகையை ஒட்டி, மஞ்சு விரட்டு நேற்று நடந்தது. ஒட்டன்சத்திரம், பழநி, திண்டுக்கல், உடுமலை உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் இருந்து, நுாற்றுக்கும் மேற்பட்ட காளைகள் கொண்டு வரப்பட்டன. திரளான இளைஞர்கள் பங்கேற்று காளைகளை உற்சாகத்துடன் விரட்டினர். தளவாய்பட்டினம் மட்டுமின்றி தாராபுரம் சுற்று வட்டார பகுதி மக்கள் கண்டு ரசித்தனர்.
மாடியில் இருந்துவிழுந்தவர் பலி
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம், ஒட்டமெத்தை, செக்குமேட்டை சேர்ந்தவர் ரவிச்சந்திரன், 59; வில்லரசம்பட்டி-திண்டல் சாலையில் ஒரு அபார்மெண்ட்டில், சலவை மற்றும் அயர்னிங் தொழிலாளியாக பணியாற்றினார். ஒரு மாதமாக அங்கேயே தங்கி வேலை செய்தார். மது பழக்கத்துக்கு அடிமையானவர். நேற்று முன்தினம் காலை, மாடியில் இருந்து விழுந்தவர் பலத்த காயமடைந்தார். ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
மாற்றுத்திறனாளிகளுக்குஅட்டை வழங்கும் முகாம்
ஈரோடு மாவட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம், மாற்றுத்திறனாளி அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம், தாலுகா வாரியாக அவ்வப்போது நடந்து வருகிறது. இதன்படி வரும், 23ம் தேதி, சிவகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் சிறப்பு முகாம் நடக்கிறது. முகாமுக்கு வரும் மாற்றுத்திறனாளிகள் மூன்று புகைப்படம், ஆதார் அட்டை அசல் மற்றும் நகல் எடுத்து செல்ல வேண்டும்.
மர்ம விலங்கு கடித்துநான்கு ஆடுகள் பலி
சத்தியமங்கலம் அடுத்த தாசரிபாளையத்தை சேர்ந்தவர் தங்கவேல். தோட்டத்தில் பட்டி அமைத்து ஐந்து ஆடுகள் வளர்த்து வந்தார். நேற்று மதியம் பட்டிக்கு சென்று பார்த்தபோது, நான்கு ஆடுகள் கடித்து குதறப்பட்டு இறந்து கிடந்தன. சிறுத்தை கடித்திருக்கலாம் என்ற அச்சத்தில், சத்தி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
வனத்துறையினர் ஆய்வில் எந்த தடயமும் பதிவாகவில்லை. அதேசமயம் மர்ம விலங்கை கண்டறிய மூன்று இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தினர். ஆடுகளை கடித்த விலங்கு எதுவென்று தெரியாத நிலையில், அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சம் அதிகரித்துள்ளது.
லாரி மோதி உடைந்த கம்பம்சென்னிமலையில் மின் தடை
கோழித்தீவனம் ஏற்றிய ஒரு லாரி சென்னிமலைக்கு நேற்று காலை வந்தது. பஸ் ஸ்டாண்ட் அருகில் காட்டூர் ரோட்டில், காலை, ௯:௨௦ மணிக்கு லாரியை டிரைவர் திருப்பினார்.
அப்போது பின்பக்க டயர் பஞ்சரானதால் நிலை தடுமாறிய லாரி, அருகிலிருந்த மின் கம்பத்தில் உரசி நின்றது. இரும்பாலான மின் கம்பம், லேசாக உடைந்தது. மின்வாரிய ஊழியர்கள் டிரான்ஸ்பார்மரை ஆப் செய்து, மின் வினியோகத்தை தடை செய்தனர். பின் வெல்டிங் வைத்து மின் கம்பத்தை சரி செய்தனர்.
இரும்பு கம்பமாக இருந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. அதேசமயம் விபத்தால், சென்னிமலை பஸ் ஸ்டாண்ட் மற்றும் சுற்றியுள்ள பகுதியில் ஒரு மணி நேரம் மின் வினியோகம் தடைபட்டது.
ரயிலில் ஐ-போன் திருடிய வாலிபர் கைது
கொச்சுவேலியில் இருந்து பெங்களூரு செல்லும் ரயில், நேற்று அதிகாலை, 2:30 மணிக்கு, ஈரோடு வந்தது. அப்போது ஏ.சி., பெட்டியில் ஏறிய, 30 வயது மதிக்கதக்க வாலிபர், சார்ஜரில் இருந்த ஐ-போன் மொபைல்போனை திருடிக்கொண்டு ரயிலில் இருந்து இறங்கி சென்றார்.
ரோந்து பணியில் இருந்த எஸ்.ஐ., முருகானந்தன், எஸ்.எஸ்.ஐ., அல்லிமுத்து, ஏட்டு ஜோசப் ஆகியோர், வாலிபரை நிறுத்தி சோதனை செய்தனர். அவரிடம் ஐ-போன் இருந்ததால் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் ஐ-போனை திருடியதை ஒப்பு கொண்டார். அரியலுாரை சேர்ந்த கருப்பைய்யா மகன் ராஜா, 29, குன்னத்துாரில் புரோட்டா மாஸ்டராக பணியாற்றுவதும் தெரிந்தது. அவரை கைது செய்தனர். விசாரணக்குப் பின் பெங்களூரை சேர்ந்த பயணியிடம், போனை ஒப்படைத்தனர்.
நாளை
10 இடங்களில்
குறைதீர் கூட்டம்
ஈரோடு மாவட்டத்தில் பொது வினியோக திட்ட குறைதீர் கூட்டம், 10 தாலுகாவிலும் தலா ஒரு ரேஷன் கடையில் நாளை நடக்கிறது.
இதில் புதிய ரேஷன் கார்டுக்கு மனு வழங்குதல், நகல் ரேஷன் கார்டு, பெயர் சேர்த்தல், நீக்குதல், கைபேசி எண் மாற்றம் செய்தல் போன்ற கோரிக்கைகளுக்கு மனு வழங்கி தீர்வு பெறலாம்.
ஈரோடு தாலுகா - வேப்பம்பாளையம் ரேஷன் கடை, பெருந்துறை - பணிக்கம்பாளையம்-2, மொடக்குறிச்சி-விளக்கேத்தி, கொடுமுடி - கணபதிபாளையம், கோபி - காசியூர், நம்பியூர் - வேமாண்டம்பாளையம், பவானி - சூரியம்பாளையம், அந்தியூர் - பட்லுார், சத்தியமங்கலம் - மாக்கினாங்கோம்பை, தாளவாடி - கும்டாபுரம் ரேஷன் கடையில் நடக்கிறது.
ஈரோடு சந்தைக்கு கால்நடை வரத்து சரிவு
கருங்கல்பாளையம் மாட்டு சந்தைக்கு, கால்நடைகளின் வரத்து வெகுவாக குறைந்தது.
ஈரோடு, கருங்கல்பாளையம் மாட்டு சந்தை நேற்று கூடியது. தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து மாடுகளை, விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். 5,000 ரூபாய் முதல், 25,000 ரூபாய் மதிப்பில், 50 கன்று; 25,000 ரூபாய் முதல், 70,000 ரூபாய் மதிப்பில், 250 எருமை; 25,000 ரூபாய் முதல், 80,000 ரூபாய் மதிப்பில், 250 பசு மாடுகள், 50க்கும் மேற்பட்ட கலப்பின மாடுகள் விற்பனைக்க வந்தன.
பொங்கல் விடுமுறையாக உள்ளதாலும், பொங்கல் பண்டிகையின்போது மாடுகளை விவசாயிகள், வியாபாரிகள் வாங்கி சென்றதாலும் நேற்றைய சந்தைக்கு மாடுகளின் வரத்து, வியாபாரிகள் வரத்தும் குறைந்து காணப்பட்டது. வரத்தான மாடுகளில், 80 சதவீதம் மட்டுமே விற்பனையானது.
ஆர்.டி., இன்டர்நேஷனல் பள்ளி ஆண்டு விழா
ஈரோடு, கேட்டுபுதுாரில் உள்ள ஆர்.டி., இன்டர்நேஷனல் பள்ளி ஆண்டு விழா நடந்தது. பள்ளி தலைவர் ராகுல் தலைமை வகித்தார். செயலாளர் ராதா, பள்ளி முதன்மை கல்வி அலுவலர் கீர்த்தனா ஆகியோர், விழாவை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர். சிறப்பு அழைப்பாளராக ஆர்.டி.பள்ளி நிறுவனர் செந்தில்குமார் பங்கேற்றார். விழாவில் பள்ளி மாணவ - -மாணவியரின் கலை நிகழ்ச்சி நடந்தது. விழா ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் சங்கர் செய்திருந்தார்.
கர்நாடகாவில் லாரி ஸ்டிரைக்கால்
பண்ணாரியில் வாகனங்கள் நிறுத்தம்
கர்நாடகா மாநில லாரி டிரைவர்கள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அம்மாநிலத்தில் நேற்று ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தமிழகத்தில் இருந்து சத்தியமங்கலம் அருகேயுள்ள பண்ணாரி சோதனைச்சாவடி வழியாக, கர்நாடகா செல்லும் லாரிகள் நேற்று அனுமதிக்கப்படவில்லை. கார், பஸ் மற்றும் பொது போக்குவரத்து வாகனங்களை மட்டும், சத்தியமங்கலம் போலீசார் அனுமதித்தனர். இதனால் பண்ணாரி செக்போஸ்டில் சரக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. மாலை, ௬:௦௦ மணிக்கு ஸ்டிரைக் முடிந்தது. அதன் பிறகு சரக்கு வாகனங்களை அனுமதித்தனர்.
அந்தியூர் தொழிலாளி பலி
கோபி அருகே பாரியூர் பஸ் ஸ்டாப் பகுதியில் கொப்பு வாய்க்காலில், ஆண் சடலம் நேற்று முன்தினம் மிதந்தது. கோபி போலீசார் உடலை மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். விசாரணையில், அந்தியூரை சேர்ந்த சமையல் தொழிலாளி ஜெயக்குமார், 31, என தெரிந்தது. அவரின் தந்தை சிவசக்தி புகாரின்படி, கோபி போலீசார் விசாரிக்கின்றனர்.
நிலை தடுமாறிய பைக்
தவறி விழுந்தவர் சாவு
பவானி, ஜன, 19-
அம்மாபேட்டை அருகே பட்லுார், கெம்மியம்பட்டியை சேர்ந்தவர் தாமரைகண்ணன், 26; கூலி தொழிலாளி. இவரின் நண்பர் ராஜேந்திரன். இருவரும் நேற்று காலை, மேட்டூர்-அந்தியூர் ரோட்டில் பைக்கில் சென்றனர். பட்டஞ்சாவடி அருகே சென்றபோது, பைக் தடுமாறியதில் இருவரும் விழுந்து படுகாயம் அடைந்தனர். அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால், செல்லும் வழியிலேயே தாமரைகண்ணன் இறந்து விட்டார். ராஜேந்திரன் சிகிச்சை பெற்று வருகிறார். அம்மாபேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
போலீஸ் ஸ்டேஷனை
மக்கள் முற்றுகை
தாராபுரத்தில் வள்ளுவர் தெரு பகுதியில், பொங்கல் விளையாட்டுப் போட்டியை, ஒரு தரப்பினர் போலீஸ் அனுமதி பெற்று கடந்த, ௧௬ம் தேதி நடத்தினர். இரண்டாவது நாளாக நேற்று முன்தினம், அனுமதியின்றி விளையாட்டு போட்டி நடக்கவே, போலீசார் அங்கு சென்றனர். விளையாட்டு போட்டிகளை நடத்தக்கூடாது என்று கூறவே, 50க்கும் மேற்பட்டோர், இரவு, 11:00 மணியளவில் தாராபுரம் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டு, ஸ்டேஷன் முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தைக்குப் பிறகு விளையாட்டு போட்டி நடத்த அனுமதி அளிக்கவே, கலைந்து சென்றனர்.
நகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து
காங்கேயம் நகராட்சி குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீயை, காங்கேயம் தீயணைப்பு நிலைய வீரர்கள் அணைத்தனர்.
காங்கேயம் நகராட்சியில் உள்ள, 18 வார்டுகளில் சேகரமாகும் குப்பை, சென்னிமலை சாலையில் உள்ள, 5 ஏக்கர் பரப்பிலான கிடங்கில் கொட்டப்படுகிறது. அங்கு தரம் பிரித்து மறுசூழற்சி செய்யப்படுகிறது. நேற்று காலை, 11:00 மணியளவில் கிடங்கில் கொட்டப்பட்டிருந்த குப்பையில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. காங்கேயம் தீயணைப்பு நிலைய அலுவலர் மணிகண்டன் தலைமையிலான வீரர்கள், 45 நிமிடம் போராடி தீயை அணைத்தனர்.

