ADDED : ஜன 21, 2024 12:32 PM
பவளமலையில் நாளை
தைப்பூச விழா துவக்கம்
கோபி அருகே பவளமலை முத்துக்குமாரசாமி கோவிலில், தைப்பூச தேர்த்திருவிழா, நாளை இரவு 9:00 மணிக்கு, கிராம சாந்தியுடன் துவங்குகிறது.
23ம் தேதி காலை 10:00 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது. 24ம் தேதி காலை அபிஷேகம், யாகசாலை பூஜை, திரவ்ய ேஹாமம், பூர்ணாகுதி, ஆட்டுக்கிடாய் வாகனத்தில் கிரிவீதி உலா நடக்கிறது. 25ம் தேதி காலை மகன்யாச அபிஷேகம், யாகசாலை பூஜை, திருக்கல்யாண உற்சவம், மாலை, 4:30 மணிக்கு, திருத்தேர் வடம்பிடித்தல் நடக்கிறது. 26ல் சிவப்பு சாற்றி அலங்காரம் நடக்கிறது. இதேபோல் பச்சமலை முருகன் கோவிலில், தைப்பூச விழா, 25ம் தேதி மகன்யாச அபிஷேகத்துடன் துவங்கி, 26ல் திருக்கல்யாண உற்சவத்துடன் நிறைவு பெறுகிறது.
இலவச கண் சிகிச்சை முகாம்
ஈரோடு மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம் சார்பில், இன்று காலை, 8:00 மணி முதல் மதியம், 1:00 மணி வரை, ஈரோடு தில்லை நகர் செங்குந்தர் பள்ளியில், இலவச கண் சிகிச்சை முகாம் நடக்கிறது. உணவு, மருந்து இலவசம். முகாமில் பங்கேற்று பயன் பெற, மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
26ல் கிராமசபை கூட்டம்ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து பஞ்சாயத்துக்களிலும் வரும், 26ம் தேதி காலை, 11:00 மணிக்கு குடியரசு தினத்தை முன்னிட்டு கிராமசபை கூட்டம் நடக்கவுள்ளது. இதில் பஞ்., நிர்வாகம், பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், தணிக்கை அறிக்கை பார்வைக்கு வைத்தல், டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை, துாய்மை பாரத இயக்க அறிவிப்பு செய்தல் நடத்தப்படும். கிராமசபை கூட்டங்களை, அந்தந்த பகுதி வட்டார அளவில் உதவி இயக்குனர் நிலை பற்றாளர்கள் கண்காணிப்பர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மகள் மாயம்; தந்தை புகார்நம்பியூர், நாடார் வீதியை சேர்ந்த பெயிண்டர் மகேஸ்வரன். இவருக்கு, ௧௫ மற்றும் ௧௦ வயதில் இரு மகள்கள் உள்ளனர். இதில், ௧௫ வயது மகள், அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கிறார். சில தினங்களாக வயிற்று வலியால் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். நேற்று முன்தினம் இரவு சிறுமியை காணவில்லை. மகேஸ்வரன் புகாரின்படி நம்பியூர் போலீசார், சிறுமியை தேடி வருகின்றனர்.
ஐக்கிய விவசாயிகள் முன்னணி ஆலோசனை
அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு, ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் மாவட்ட அளவிலான ஆலோசனை கூட்டம் ஈரோட்டில் நடந்தது. ஐக்கிய விவசாயிகள் முன்னணி ஒருங்கிணைப்பாளர் முனுசாமி, ஏ.ஐ.டி.யு.சி., சின்னசாமி, சி.ஐ.டி.யு., சுப்பிரமணியன், ஸ்ரீராம், எல்.பி.எ., கோபால் உட்பட பலர் பேசினர்.
விளைபொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதார விலையை நிர்ணயிக்கும் சட்டத்தை மத்திய அரசு இயற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, குடியரசு தினமான, 26ம் தேதி மாலை, வில்லரசம்பட்டி நாலு ரோட்டில் இருந்து ரயில்வே ஸ்டேஷன் வரை டிராக்டர், வாகன பேரணி நடத்த முடிவு செய்தனர்.
ரூ.1.88 கோடிக்குகொப்பரை ஏலம்
பெருந்துறை வேளாண்மை பொருள் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், கொப்பரை ஏலம் நேற்று நடந்தது. ஏலத்துக்கு, 4,823 மூட்டைகளில், 2.30 லட்சம் கிலோ கொப்பரை வரத்தானது. முதல் தரம் ஒரு கிலோ, 76.36 ரூபாய் முதல் 87.70 ரூபாய் வரை விலை போனது. இரண்டாம் தரம் கிலோ, 30 ரூபாய் முதல் 8௪ ரூபாய் வரை ஏலம் போனது. மொத்தம், 1.88 கோடி ரூபாய்க்கு கொப்பரை வர்த்தகம் நடந்தது.
இலங்கை களவாணி மீதுபாய்ந்தது குண்டர் சட்டம்
இலங்கை, மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்தவர் தர்மகுமார், 45; திருப்பூர் மாவட்டம் அவிநாசி, கைகாட்டி புதுார் பகுதியில் வசித்தார்.
சில தினங்களுக்கு முன் மொடக்குறிச்சி போலீஸ் எல்லை பகுதியில் வீட்டில் ஒன்பது பவுன் நகையை திருடிய வழக்கில், போலீசார் கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
தர்மகுமார் மீது கவுந்தப்பாடி, அவிநாசி உள்ளிட்ட பல்வேறு ஸ்டேஷன்களில் திருட்டு வழக்கு உள்ளதால், குண்டர் தடுப்பு காவலில் கைது செய்ய, எஸ்.பி., ஜவகர் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதை கலெக்டர் ஏற்கவே, தர்மகுமார் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இதற்கான நகல், சிறையில் அவரிடம் வழங்கப்பட்டது.
ராமர் கோவிலில்
துாய்மை பணி
தாராபுரம், அனுமந்தாபுரத்தில் உள்ள கல்யாணராமர் கோவில் வளாகத்தில், பா.ஜ., சார்பில் நேற்று மாலை துாய்மைப்பணி நடந்தது. நகர தலைவர் சதீஷ் தலைமையில் அக்கட்சியினர் பணியில் ஈடுபட்டனர்.
உள்புற பிரகாரம் மற்றும் கோவில் வளாகப் பகுதிகளில் பெருக்கி சுத்தம் செய்தனர். அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடப்பதை ஒட்டி துாய்மை பணியில் ஈடுபட்டதாக தெரிவித்தனர்.
பவானியிலிருந்து பழநிக்கு
பக்தர்கள் பாத யாத்திரை
பவானி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள், தைப்பூசத்தை முன்னிட்டு, பழநி மலை முருகனுக்கு மாலை அணிந்து விரதமிருந்தனர். இந்நிலையில் பவானி பழனி ஆண்டவர் கோவிலில் நேற்று மாலை வழிபாடு செய்து, பாதயாத்திரையாக கிளம்பினர்.
முன்னதாக சரக்கு வாகனங்களில் தங்களுக்கு தேவையான பொருட்களை ஏற்றிக் கொண்டனர். பல பக்தர்கள் வேல்களை ஏந்தியும், காவடி சுமந்தபடியும் அணிவகுத்து சென்றனர். ஒரே நேரத்தில் ஏராளமான பக்தர்கள் சென்றதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பக்தர்களுக்கு இரவில் ஒளிரும் பட்டைகளை, நகர்மன்ற தலைவர் சிந்துாரி வழங்கினார்.
கவுந்தப்பாடியில் ரூ.1 கோடிக்கு
சர்க்கரை, வெல்லம் விற்பனை
கவுந்தப்பாடியில் ஒரு கோடி ரூபாய்க்கு, நாட்டு சர்க்கரை மற்றும் உருண்டை வெல்லத்தை, பழநி கோவில் தேவஸ்தான நிர்வாகம் கொள்முதல் செய்தது.
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி, ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நாட்டு சர்க்கரை மற்றும் உருண்டை வெல்ல ஏலம் நேற்று நடந்தது. நாட்டு சர்க்கரை முதல் தரம் (திடம்), 60 கிலோ மூட்டை, 2,850 ரூபாய் முதல், 2,880 ரூபாய் வரை விற்றது. இரண்டாம் தரம் (மீடியம்), 2,780 ரூபாய் முதல், 2,820 ரூபாய் வரை ஏலம்போனது. வரத்தான, 3,696 மூட்டைகளும், 1.03 கோடி ரூபாய்க்கு விற்பனையானது. உருண்டை வெல்லம், 68 மூட்டை (30 கிலோ) வரத்தாகி, ஒரு மூட்டை, 1,560 ரூபாய் என, 1.06 லட்சம் ரூபாய்க்கு விற்றது. பழநி தண்டாயுதபாணி சுவாமி கோவில் தேவஸ்தான நிர்வாகம், 1.04 கோடி ரூபாய்க்கு கொள்முதல் செய்ததாக, விற்பனைக்கூட அதிகாரிகள் தெரிவித்தனர்.
பைக் திருடியவர் கைது
ஈரோடு, மூலப்பாளையம், என்.ஜி.ஜி.ஓ., நகரை சேர்ந்தவர் சிலம்பரசன், 32; வங்கி மேலாளர். கடந்த, 19ம் தேதி இவர் வீட்டு முன் நிறுத்தியிருந்த ஹோண்டா ட்ரீம் பைக்கை காணவில்லை. வீரப்பன்சத்திரம் போலீசில் புகாரளித்தார்.
இந்நிலையில் ஈரோடு அரசு மருத்துவமனை ரவுண்டானா அருகே, நேற்று சந்தேகப்படும்படியாக வந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரித்தனர். திருப்பூர், வள்ளிபுரம், குருவாயூரப்பன் நகரை சேர்ந்த சம்பத் மகன் ரமேஷ்குமார், 31, என்பதும், அவர் ஓட்டி வந்தது சிலம்பரசனின் பைக் என்பதும் தெரிந்தது. ரமேஷ்குமாரை கைது செய்து, பைக்கை பறிமுதல் செய்தனர்.
மொபட்டில் சென்றவர்சைக்கிளில் மோதி பலி
காங்கேயத்தை அடுத்த திட்டுப்பாறையை சேர்ந்த விவசாயி தங்கமுத்து, 52; மொபட்டில் நேற்று முன்தினம் இரவு திட்டுப்பாறை அருகே பாரவலசு பிரிவு பகுதியில் சென்றார். அந்த இடத்தில் சைக்கிளில் சாலையை கடக்க முயன்ற பழனிச்சாமி, 60, மீது மொபட் மோதியது. இதில் இருவரும் பலத்த காயமடைந்தனர். காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், தங்கமுத்து வரும் வழியிலேயே இறந்து விட்டது தெரிந்தது. மேல் சிகிச்சைக்காக ஈரோடு தனியார் மருத்துவமனைக்கு பழனிச்சாமி அனுப்பி வைக்கப்பட்டார். விபத்து குறித்து காங்கேயம் போலீசார் விசாரிக்கின்றனர்.
இளம்பெண் விபரீத முடிவுஈரோடு, திண்டல், காரப்பாறை, வன்னியர் காலனியை சேர்ந்த தர்மன் மகள் குமுதவள்ளி, 26; இவருக்கு ஒன்பது ஆண்டுகளுக்கு முன் திருமணமானது. எட்டு வயதில் மகன் உள்ளார். கருத்து வேறுபாட்டால் கணவனை பிரிந்து மூன்றாண்டாக பெற்றோருடன் வசித்தார். நேற்று வீட்டில் மின் கம்பியால் துாக்கிட்டு கொண்டார். அவரது மகன் கூச்சலிடவே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர்கள் பரிசோதனையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. தர்மன் புகாரின்படி ஈரோடு தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
எட்டு கட்ட போராட்டம் நடத்தியும் எட்டாத கோரிக்கை
தமிழக அரசு, கடந்த ஆண்டு மின் கட்டணத்தை உயர்த்தியதுடன், பீக் ஹவர் கட்டணம், சோலார் மின் கட்டணம், டிமாண்ட் சார்ஜ் உள்ளிட்டவற்றை கொண்டு வந்தது. இவற்றால், தொழில் துறையினர் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
தமிழகம் முழுவதும் உள்ள குறு சிறு தொழில் துறையினர் இணைந்து, தமிழ்நாடு தொழில் துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பை ஏற்படுத்தி, தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இது தொடர்பாக நடந்த உண்ணாவிரத போராட்டத்தில், தமிழகம் முழுவதும் உள்ள குறு சிறு நடுத்தர பல்வேறு தொழில் துறையினர் பங்கேற்றனர்.
தொடர்ந்து முதல்வருக்கு கோரிக்கைகளை அனுப்பி வைத்தனர்.இறுதியாக, தமிழகம் முழுவதும், மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கோவிந்தராஜ் கூறியதாவது:
மீட்டர் பொருத்தும் வரை தற்காலிகமாக பீக் ஹவர் கட்டணம் ரத்து செய்யப்படும் என்றும், சோலாருக்கு, 1.53 ரூபாய் கட்டணம் என்றும் அரசு அறிவித்தை வரவேற்கிறோம். ஆனால், 430 சதவீதம் உயர்த்தப்பட்ட டிமாண்ட் கட்டணத்தை முற்றிலும் திரும்ப பெற வேண்டும்.
சொந்த முதலீட்டில் நிறுவப்பட்டு உற்பத்தி செய்யப்படும் சோலார் மின்சாரத்துக்கு விதிக்கப்படும் கட்டணத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்ற பிரதான கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு வருகின்றன. இதற்காக எட்டு கட்ட போராட்டங்கள் நடத்தியும் அரசு செவி சாய்க்கவில்லை. அண்டை மாநிலங்கள் போட்டி போட்டு சலுகைகளை வழங்குவதால், அம்மாநிலங்களுடன் போட்டி போட இயலாத நிலை உள்ளது. இதனால், முதலீட்டையும் இழந்து விடுவோமா என்ற அச்சம் எழுந்துள்ளது. தமிழக அரசு கோரிக்கையை ஏற்றால் மட்டுமே தொழிலை தக்க வைக்க முடியும். அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ள ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
சிவன்மலையில் தைப்பூச
திருவிழா கொடியேற்றம்
காங்கேயத்தை அடுத்த சிவன்மலை சுப்ரமணியசுவாமி கோவிலில் நடப்பாண்டு தைப்பூச திருவிழா, கடந்த, 17ம் தேதி அடிவாரத்தில் உள்ள வீரகாளியம்மன் கோவிலில் துவங்கியது. இந்நிலையில் நேற்று காலை வீரகாளியம்மன் மலைக்கோயிலுக்கு எழுந்தருளினார். பின் சிறப்பு பூஜை, மயில் வாகன உலா, விநாயகர் வழிபாட்டை தொடர்ந்து, கோவில் சன்னதி முன்புள்ள கொடிமரத்தில், 12:57 மணியளவில் கொடியேற்றப்பட்டது. இதையொட்டி சுப்ரமணிய சுவாமி வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் சப்பரத்தில் மலையை வலம் வந்தார்.
மதியம், 2:20 மணிக்கு சுவாமி மலை அடிவாரத்தில் உள்ள நஞ்சுண்டேஸ்வரர் கோவிலுக்கு எழுந்தருளினார். இங்கு தினமும் காலையில் பல்வேறு சமூக மக்களின் சார்பில் மண்டப கட்டளை நடக்கும். தேரோட்டம், 26ம் தேதி நடக்கிறது.
ஸ்ரீராமர் கோவில் கும்பாபிேஷகம்
அகல் விளக்கு, தட்டு வினியோகம்
அயோத்தி ஸ்ரீராமர் கோவில் கும்பாபிேஷக நாளில், விளக்கு ஏற்றி வைத்து வழிபட ஏதுவாக, அகல் விளக்குகள் மற்றும் எவர்சில்வர் தட்டு வழங்கப்பட்டது.
அயோத்தியில், ஸ்ரீராமர் கோவில் கும்பாபிேஷகம் நாளை நடக்கவுள்ளதால், அன்றயை தினம், தீபம் ஏற்றி வைத்து, ராமரை வழிபட வேண்டுமென அறிவுறுத்தி வருகின்றனர். அதற்காக ஊத்துக்குளி பகுதியை சேர்ந்த ஆர்.எஸ்.எஸ்., மற்றும் பா.ஜ., நிர்வாகிகள், வீடு வீடாக சென்று, ராமர் கோவில் படம் மற்றும் அட்சதை வழங்கி வருகின்றனர்.
ஸ்ரீராமர் கோவில் கும்பாபிேஷகம் தொடர்பான முத்திரை பதிக்கப்பட்ட, சிறிய எவர்சில்வர் தட்டு, ஐந்து மண் அகல் விளக்கு, திரி பாக்கெட், சிறிய நல்லெண்ணெய் பாட்டில் மற்றும் அயோத்தி ஸ்ரீராமர் கோவில் படம் சிறிய நோட்டீசுடன் வழங்கப்பட்டு வருகிறது. இதேபோல திருப்பூர் ஒன்றியம் மங்கலம் ஊராட்சி பகுதிகளில், ஆன்மிக குழுவினர், வீடு வீடாக சென்று, அட்சதை மற்றும் ராமர் படம் வழங்கினர்.

