ADDED : ஜன 23, 2024 10:03 AM
கீழ்பவானி பாசனத்தில்
முதல் சுற்று நீர் நிறுத்தம்
பவானிசாகர் அணையில் இருந்து, இரண்டாம் போக புன்செய் பாசனத்துக்கு கடந்த, 7ம் தேதி முதல் கீழ்பவானி வாய்க்காலில் சுழற்சி முறையில் தண்ணீர் திறந்து, மே, 1ம் தேதி வரை ஐந்து சுற்றுக்களாக தண்ணீர் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதன்படி கீழ்பவானி வாய்க்காலில், 2,300 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இந்நிலையில் முதலாம் சுற்று தண்ணீர், நேற்று காலை முதல் நிறுத்தப்பட்டது. பத்து நாட்கள் இடைவெளி விட்டு இரண்டாம் சுற்று தண்ணீர் திறக்கப்படுமென, நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அதேசமயம் அரக்கன்கோட்டை-தடப்பள்ளி பாசனத்துக்கு, 700 கன அடி தண்ணீர்; குடிநீருக்காக, 100 கன அடி தண்ணீர் என, 800 கன அடி தண்ணீர் பவானி ஆற்றில் திறக்கப்பட்டது. நேற்று மாலை நிலவரப்படி அணைக்கு, 1,789 கன அடி நீர் வரத்தானது. அதேசமயம் அணை நீர்மட்டம், 79.81 அடி; நீர் இருப்பு, 15.5 டி.எம்.சி., யாக இருந்தது.
பகுதி நேர ரேஷன் கடை
அமைக்க வலியுறுத்தல்
மொடக்குறிச்சி தாலுகா, அட்டவணை அனுமன்பள்ளி பஞ்., வார்டு உறுப்பினர் விஜய்ஆனந்த் உள்ளிட்ட மக்கள், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், நேற்று வழங்கிய மனுவில் கூறியதாவது:
அட்டவணை அனுமன்பள்ளியில் சக்தி நகர், நாகமலைபுதுார், அரச்சாலை அம்மன் நகர், சங்கரன்காடு போன்ற கிராமங்கள் உள்ளன. இவற்றில், 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். அங்கு, 200க்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுகள் உள்ளன.
ஆனால் ரேஷனில் பொருட்கள் வாங்க, 3 கி.மீ., துாரம் சென்று குடுமியான்பாளையம் கூட்டுறவு அங்காடிக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதுபற்றி மனு கொடுத்தபோது, இலவச மின்சாரத்துடன், இலவச கட்டடம் வழங்கினால் கடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக பதில் தெரிவித்தனர். கேசவன் என்பவர் தனது கட்டடத்தை இலவசமாக வழங்க முன்வந்துள்ளார். எனவே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.
இன்று மகா மாரியம்மன்
கோவிலில் பூச்சாட்டுதல்
ஈரோடு, பெரியசேமூரில் பிரசித்தி பெற்ற மகா மாரியம்மன் கோவிலில் நடப்பாண்டு விழா, பூச்சாட்டுதலுடன் இன்று தொடங்குகிறது. இன்றே கம்பம் நடும் விழாவும் நடக்கிறது. 30ம் தேதி காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டு அபிஷேகம் நடக்கிறது. முக்கிய நிகழ்வான பொங்கல் வைபவம், 31ம் தேதி அதிகாலை முதல் நடக்கிறது. அன்று காலை, ௮:௦௦ மணிக்கு அலகு குத்தியும், அக்னி சட்டி எடுத்தும் பக்தர்கள் ஊர்வலமாக வருகின்றனர். மாலையில் மாவிளக்கு ஊர்வலம் நடக்கிறது.
கல்லுாரி மாணவி மாயம்
திருப்பூர் மாவட்டம் மூலனுார், சாங்கரையை சேர்ந்தவர் முனுசாமி. இவர் மனைவி நல்லமணி. இவர்களின் மகள் திவ்யா, 21; ஈரோட்டில் தனியார் பொறியியல் கல்லுாரியில் படித்து வருகிறார். கடந்த, 12ல் பொங்கல் பண்டிகைக்காக வீட்டுக்கு சென்றார். விடுமுறை முடிந்து, 18ம் தேதி காலை தாயுடன் கல்லுாரிக்கு சென்றார். நுழைவு வாயிலில் மகளை விட்டு சென்றுள்ளார். ஆனால், கல்லுாரிக்குள் செல்லாமல், மாயமாகி விட்டார். இதுகுறித்து நல்லமணி புகாரின்படி, ஈரோடு தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
219 டூ வீலர்கள் ஏலம்ஈரோடு மாவட்டத்தில் பொது இடங்களில் கேட்பாரின்றி நிறுத்தப்பட்டிருந்த, 219 டூவீலர்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அந்தந்த பகுதி தாசில்தார் மூலம் அறிவித்தும், வாகனங்களை உரிமை கோர யாரும் வராத நிலையில், ஆணைக்கல்பாளையம் ஆயுதப்படை வளாகத்தில் நேற்று ஏலம் விடப்பட்டது. மதுவிலக்கு அமலாக்க பிரிவு டி.எஸ்.பி., பவித்ரா தலைமையில் ஏலம் நடந்தது. அனைத்து டூவீலர்களும், 5.26 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனதாக, போலீசார் தெரிவித்தனர்.
பாம்பு கடிபட்ட விவசாயி சாவுகோபி அருகே உக்கரத்தை சேர்ந்த விவசாயி சிரஞ்சீவி, 31; கடந்த, 12ம் தேதி மாலை தோட்டத்துக்கு சென்றபோது, கட்டு விரியன் பாம்பு கடித்து விட்டது. கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிரஞ்சீவி நேற்று இறந்தார். அவரின் மனைவி வினோதா புகாரின்படி, கடத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.
கோவில் பிரச்னைக்கு தீர்வு காண முறையீடு
பவானி தாலுகா ஒலகடம் கிராமத்தை சேர்ந்தவர்கள், ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கராவிடம், நேற்று வழங்கிய மனுவில் கூறியதாவது: ஒலகடம் கிராமம், வெடிக்காரன்பாளையம், நத்தக்காடு, பெரியதோட்டத்தில் அய்யனாரப்பன் கோவில் அமைந்துள்ளது. வன்னியர் சமூகத்தினரின் குலதெய்வமாகும். இக்கோவிலை வழிபடுவோரில் ஒரு பிரிவினர், மற்றவர்கள் வழிபாடு செய்ய தடுக்கின்றனர். மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, இருதரப்பினரிடமும் பேசி வழிபாடு, பூஜை செய்ய வழி செய்துதர வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.
குறைதீர் கூட்டத்தில் 265 மனுக்கள் ஏற்பு
ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. வேலைவாய்ப்பு, உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி என, 265 மனுக்கள் பெறப்பட்டு, உரிய துறை விசாரணைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் மனு அளித்த ஒரு மாற்றுத்திறனாளிக்கு, 13,340 ரூபாய் மதிப்பில் தக்க செயலியுடன் கூடிய கைபேசி வழங்கப்பட்டது.
இரவில் கல் வீசியதில் பஸ் கண்ணாடி 'டமார்'
சிவகிரி, தாண்டாம்பாளையத்தில் இருந்து ஈரோட்டுக்கு, நேற்று முன்தினம் இரவு அரசு டவுன் பஸ் நெ.45 சென்றது. ஈரோட்டில் காளை மாட்டு சிலை நிறுத்தத்தில், 9:30 மணியளவில் பஸ் நிற்க, பயணிகள் இறங்கி கொண்டிருந்தனர். அப்போது பஸ்சின் பின்பக்க கண்ணாடி நொறுங்கும் சத்தம் கேட்கவே, கண்டக்டர் அலெக்ஸ், டிரைவர் முருகேசன் சென்று பார்த்தபோது கல் வீச்சில் நொறுங்கியது தெரியவந்தது. உடனடியாக பஸ்சுக்கு வெளியே பார்த்தபோது யாருமில்லை. சூரம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
சிப்காட் முற்றுகை ஒத்திவைப்பு
பெருந்துறை சிப்காட்டுக்கு நிலம் வழங்கியவர்களுக்கு, உரிய இழப்பீடு கோரி, சிப்காட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் நலச்சங்கம் சார்பில், 23ம் தேதி சிப்காட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதாக அறிவித்தனர். இது தொடர்பாக ஈரோடு ஆர்.டி.ஓ., சதீஷ்குமார் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் மாவட்ட நிர்வாகம் மூலம் சிப்காட் நிறுவனத்திடம் பேசி முடிவு அறிவிப்பதாக கூறியதால், இன்று நடப்பதாக இருந்த போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.
காங்., ஆர்ப்பாட்டம்
ஈரோடு மாநகர் மாவட்ட காங்., சார்பில், சூரம்பட்டி நாலு ரோட்டில், ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட பொறுப்பாளர் திருச்செல்வம் தலைமை வகித்தார்.
அசாம் மாநிலத்தில் மக்கள் ஒற்றுமை பயணத்தை மேற்கொண்டு வரும் காங்., எம்.பி., ராகுல், யாத்திரையில் அராஜகம் செய்ததாக கூறி, பா.ஜ., அரசை கண்டித்து கோஷமிட்டனர்.
ராமர் ஆலய பிரவேசம்: தாராபுரத்தில் அன்னதானம்
உ.பி., மாநிலம் அயோத்தியில், ராமர் ஆலயம் கட்டப்பட்டு குழந்தை ராமர் சிலை, நேற்று பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதை கொண்டாடும் வகையில், தாராபுரம், தென்தாரை, சின்ன காளியம்மன் கோவிலில், பா.ஜ., மாவட்ட துணைத்தலைவர் ராஜா கோவிந்தசாமி தலைமையில், மாநில செய்தி தொடர்பாளர் கார்வேந்தன், மாவட்டத் தலைவர் மங்களம் ரவி ஆகியோர் முன்னிலையில், ராமர் படத்துக்கு சிறப்பு பூஜை, ஆராதனை நடந்தது.
இதை தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில், 28வது வார்டு பா.ஜ., கவுன்சிலர் மீனாட்சி கோவிந்தசாமி, அன்னதானத்தை துவக்கி வைத்தார். பா.ஜ., மாவட்ட பொருளாளர் சிவசுப்பிரமணியம் மற்றும் இந்து அமைப்பு நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.

