ADDED : ஜன 24, 2024 10:06 AM
மஞ்சள் மார்க்கெட்டுக்கு
2 நாட்கள் விடுமுறை
ஈரோட்டில் ஈரோடு மற்றும் பெருந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூடம், ஈரோடு மற்றும் கோபி சொசைட்டி என நான்கு இடங்களில், திங்கள் முதல் வெள்ளி வரை மஞ்சள் ஏலம் நடக்கிறது. நாளை தைப்பூசம், 26ம் தேதி குடியரசு தினவிழா கொண்டாடப்படுகிறது. இதனால் இரு நாட்களும் மஞ்சள் ஏலத்துக்கு விடுமுறை அளிக்கப்பட்டுளளது. வழக்கம்போல், ௨௯ம் தேதி மஞ்சள் ஏலம் நடக்கும்.
கோவில் உண்டியலில்
ரூ.3.12 லட்சம் காணிக்கை
ஈரோடு வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோவிலில், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை உண்டியல் காணிக்கை எண்ணப்படுவது வழக்கம். அந்த வகையில் உண்டியல் எண்ணும் பணி, கோவில் வளாகத்தில் நேற்று நடந்தது. இதில், 3.12 லட்சம் ரூபாய், 24 கிராம் தங்கம், 110 கிராம் வெள்ளி காணிக்கையாக கிடைத்தது. தக்கார் (கூடுதல் பொறுப்பு) சுகுமார், சரக ஆய்வாளர் தினேஷ் முன்னிலையில் அறநிலையத்துறை ஊழியர், பக்தர்கள், உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.
கீழ்பவானி வாய்க்காலில்குளித்த தொழிலாளி பலி
திங்களூர் அருகே வேட்டையன் கிணறு பகுதியை சேர்ந்தவர் முருகேசன், 54, கூலி தொழிலாளி; இவரின் மனைவி சாந்தி, 49; ஒரு மகன், மகள் உள்ளனர். கடந்த, 21ம் தேதி மாலை பாலக்கரை என்ற இடத்தில் கீழ்பவானி வாய்க்காலில் குளித்தபோது தண்ணீரில் மூழ்கினார். நேற்று முன்தினம் மாலை ரைஸ்மில் புதுார் என்ற இடத்தில் மிதந்த முருகேசன் உடலை, திங்களூர் போலீசார் மற்றும் பெருந்துறை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். மனைவி சாந்தி புகாரின்படி, திங்களூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
தடப்பள்ளி வாய்க்காலில்பெண்ணின் உடல் மீட்பு
கோபி அருகே தடப்பள்ளி வாய்க்காலில், அழுகிய நிலையில், 60 வயது மதிக்கத்தக்க, அடையாளம் தெரியாத, பெண் உடல் நேற்று மிதந்து வந்தது. கோபி போலீசார் உடலை மீட்டு, கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். செய்யாம்பாளையம் வி.ஏ.ஓ., அனுசியா புகாரின்படி, அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்று விசாரிக்கின்றனர்.
ரூ.32 லட்சம் மதிப்பில்திட்டப்பணி துவக்கம்
அந்தியூர் அருகே வேம்பத்தி பஞ்., சொக்கநாச்சியம்மன் கோவில் பஸ் ஸ்டாப்பில், 7.5 லட்சம் ரூபாய் மதிப்பில் நிழற்கூடம்; வெள்ளாளபாளையம் காலனியில், 17 லட்சம் ரூபாய் மதிப்பில், குடிநீர் மேல்நிலைத்தொட்டி; அத்தாணி - ஆப்பக்கூடல் சாலை நாச்சிமுத்துபுரத்தில், சக்தி மேல்நிலைப்பள்ளி பஸ் ஸ்டாப்பில், 7.5 லட்சம் ரூபாய் மதிப்பில் நிழற்கூடம் அமைக்கும் பணிகளை, அந்தியூர் எம்.எல்.ஏ., வெங்கடாச்சலம் நேற்று தொடங்கி வைத்தார். திட்டப்பணிகள் அனைத்தும் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் நடக்கிறது.
ஆம்புலன்ஸில் 'குவா குவா'பர்கூர் மலை, கல்வாரையை சேர்ந்த விவசாயி தனபால், 23; இவரின் மனைவி அன்னக்கொடி, 19; நிறைமாத கர்ப்பணியான இவருக்கு, நேற்று பிரசவ வலி ஏற்பட்டது. ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு பர்கூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அன்னக்கொடி கொண்டு செல்லப்பட்டார். ஆனால், செல்லும் வழியில், தேவர்மலை என்ற இடத்தில் பிரசவ வலி அதிகமானது. இதனால் வாகனம் ஓரம் கட்டப்பட்டு, மருத்துவ பணியாளர்கள் பிரசவம் பார்த்தனர்.
இதில் பெண் குழந்தை பிறந்தது. தாயும், சேயும் பர்கூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டனர்.
30ல் குறைதீர் கூட்டம்ஈரோடு மாவட்ட வேளாண் குறைதீர் கூட்டம் வரும், 30ம் தேதி காலை, 10:00 மணிக்கு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் நடக்க உள்ளது. காலை, 10:00 மணி முதல், 11:30 மணி வரை விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் மனு வழங்கலாம். 11:30 மணி முதல், 12:30 மணி வரை விவசாய சங்க பிரதிநிதிகள் பிரச்னை தொடர்பாக பேசலாம். 12:30 மணி முதல், 1:30 மணி வரை அலுவலர்கள் விளக்கம் அளிப்பர்.
அ.தி.மு.க., கட்சியில்பா.ஜ.,வினர் ஐக்கியம்
ஈரோடு மாநகர் மாவட்ட அ.தி.மு.க., அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் ராமலிங்கம் முன்னிலையில், பா.ஜ., கிழக்கு மண்டல பொருளாளர் வசந்தகுமார், ஐ.டி., விங் மண்டல தலைவர் மணி, கிளை தலைவர் மோகேஷ் உட்பட சிலர் அக்கட்சியில் இருந்து விலகி, அ.தி.மு.க.,வில் இணைந்தனர். முன்னாள் எம்.எல்.ஏ., தென்னரசு உட்பட பலர் உடனிருந்தனர்.
விஜயகாந்த் சிலைக்கு
அனுமதி கோரி மனு
மறைந்த தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த்துக்கு, ஈரோடு மாநகராட்சி பகுதியில், ஏதாவது ஓரிடத்தில் சிலை அமைக்க அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தியிடம், தே.மு.தி.க., மாவட்ட தலைவர் ஆனந்த் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: மறைந்த தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் உருவச்சிலை அமைத்து மரியாதை செலுத்த, மாநகர பகுதியில் பன்னீர்செல்வம் பார்க், அரசு ஆஸ்பத்திரி ரவுண்டானா, காளைமாடு சிலை (ரயில் நிலையம் அருகில்) ஆகிய இடங்களில், ஏதாவது ஒரு இடத்தில் அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.
அம்மா உணவகத்தில்
திறந்த வெளியில்
சாப்பிடும் அவலம்
ஈரோட்டில் காந்திஜி ரோட்டில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. ஆறு மாதங்களுக்கு மேலாக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், காந்திஜி சாலை விரிவாக்கப்பணி நடந்து வருகிறது. இதற்காக அம்மா உணவகம் முன் குழி தோண்டி, மந்த கதியில் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் உணவு சாப்பிட வரும் மக்கள், உள்ளே செல்ல முடியாமல், சமையல் கூடம் பக்கம் சென்று உணவு பெறுகின்றனர். உள்ளே செல்ல முடியாததால், திறந்த வெளியில் அமர்ந்து சாப்பிட்டு வருகின்றனர். பெரும்பாலும் அம்மா உணவகத்துக்கு வயதானவர்களே வருகின்றனர். வெயிலில் காய்ந்தபடி சாப்பிட்டு செல்கின்றனர். மாநகராட்சி நிர்வாகம் அம்மா உணவகத்துக்குள் செல்லும் வகையில், அப்பகுதியிலாவது பணியை விரைந்து முடிக்க வேண்டும்.
தகைசால் அரசு பள்ளியில்
மேம்பாட்டு பணி தீவிரம்
ஈரோடு ப.செ.பார்க்கில் உள்ள அரசு மகளிர் மேல்நிலை பள்ளி, மாவட்டத்தின் முதல் மாதிரி பள்ளியாக தேர்வு செய்யப்பட்டது.
இங்கு ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை மாணவியர் படிக்கின்றனர். அதே சமயம் எட்டாம் வகுப்பு வரை மாணவர்களும் பயில்கின்றனர். தகைசால் பள்ளியாக அறிவிக்கபட்டதால், 5 கோடி ரூபாய் மதிப்பில் மேம்பாட்டு பணி நடந்து வருகிறது.
பள்ளி மைதானம் (பிரேயர் ஹால்) மண் தரையாக இருந்தது. மழை காலத்தில் தண்ணீர் தேங்கி வந்தது.
இந்நிலையை போக்கவும், மழை நீர் தேங்காமல் வழிந்தோட வகை செய்யும் விதமாக, தற்போது பேவர் பிளாக் கற்கள் பதிக்கும் பணி நடக்கிறது. வகுப்பறை, பள்ளி வளாகம் முழுமையாக வர்ணம் பூசப்படுகிறது.
ரூ.22.43 லட்சத்துக்கு
கொப்பரை விற்பனை
கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் தேங்காய் மற்றும் கொப்பரை தேங்காய் ஏலம் நேற்று நடந்தது. ஏலத்துக்கு, 10,902 தேங்காய் வரத்தானது. ஒரு கிலோ, 20.90 ரூபாய் முதல், 25.65 ரூபாய் வரை ஏலம் போனது. கொப்பரை தேங்காய், 587 மூட்டைகள் வரத்தாகின. முதல் தரம் கிலோ, 79.79 ரூபாய் முதல் 88.16 ரூபாய் வரை விற்றது. இரண்டாம் தரம் குறைந்த பட்சம் கிலோ, 60.35 ரூபாய், அதிகபட்சம், 85.29 ரூபாய் என, 22.43 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.
போதையில் வெறிச்செயல்
ஈரோட்டில் பெயின்டர் கைது
ஈரோடு, பி.பெ.அக்ரஹாரம், பூம்புகார் நகரில் ஒரு வீட்டில், நேற்று முன்தினம் மாலை, இறந்தவருக்கான ஈமச்சடங்கு காரியம் நடந்தது.
அந்த இடத்தின் அருகில் அதே பகுதியை சேர்ந்த பெயின்டர் காஜா மைதீன், 28, அவரது நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவர்களிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில், நண்பர்களை கற்கள், கட்டையாலும், ஈமச்சடங்கு வீட்டில் போட்டிருந்த சேர்களை எடுத்தும் சரமாரியாக தாக்கினார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஈமச்சடங்கு வீட்டில் இருந்தவர்கள், காஜா மைதீனை தடுக்க முயன்றனர். இதனால் அவர்களையும் அவர் தாக்கினார். இதில் பெண்கள் உள்பட ஏழு பேர் காயமடைந்தனர். அதேசமயம் மறைத்து வைத்திருந்த கத்தியால் காஜா மைதீன் வெட்டியதில், அப்துல் ரகுமான், 34, என்பவருக்கு வெட்டுக்காயம் விழுந்தது. மேலும் அவர் தாக்குதலில் நண்பர்கள் இருவர் காயமடைந்தனர்.
இது தொடர்பாக கருங்கல்பாளையம் போலீசார் விசாரணை நடத்தினர். இதை தொடர்ந்து நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிந்து, காஜா மைதீனை நேற்று கைது செய்தனர். காஜா மைதீன் மீது ஏற்கனவே ஒரு திருட்டு வழக்கு நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
ஏலச்சீட்டு நடத்தி ரூ.23.80 லட்சம் மோசடி
10க்கும் மேற்பட்ட பெண்கள் புகார்
ஈரோட்டில் ஏலச்சீட்டு நடத்தி, 23.80 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக, பாதிக்கப்பட்ட பெண்கள், எஸ்.பி., அலுவலகத்தில் மனு அளித்தனர்.
ஈரோடு, காசிபாளையம், மலைக்கோயில் காந்திஜி சாலையை சேர்ந்த செல்வம் மனைவி கிருஷ்ணவேணி தலைமையில், ௧0க்கும் மேற்பட்ட பெண்கள், ஈரோடு எஸ்.பி., அலுவலகத்தில், நேற்று அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
எங்கள் பகுதியில் குணசேகரன் மனைவி ஸ்ரீதேவி, மாதாந்திர ஏலச்சீட்டு மற்றும் தீபாவளி சீட்டு நடத்தினார். நானும், எங்கள் பகுதியை சேர்ந்த ஜெயந்தி, லட்சுமி, ராஜேஸ்வரி, கவிதா, சிந்தாமணி, அமுதா, அலமேலு, விஜயலட்சுமி, தீபா, ஜோதி என, 10 பேரும் ஏலச்சீட்டில் சேர்ந்தோம். இதில் நான் ஒரு லட்சம் ரூபாய் சீட்டில் பணம் செலுத்தி வந்தேன்.
அப்போது ஸ்ரீதேவி என்னிடம், பணம் கொடுத்தால், அதிக வட்டி தருவதாக கூறினார். இதை நம்பி நிலத்தை அடமானம் வைத்து, கடந்தாண்டு, 4.80 லட்சம் ரூபாய் கொடுத்தேன். ஆனால் இதுவரை வட்டி, அசல் வழங்கவில்லை. இந்நிலையில் ஏலச்சீட்டு, தீபாவளி சீட்டு நடத்தியதில் பணம் வழங்காமல், 10 பேரிடம், 19 லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளார்.
மொத்தம், ௨௩.௮௦ லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளார். குணசேகரன், ஸ்ரீ தேவி மீது நடவடிக்கை எடுத்து, பணத்தை மீட்டு தர வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.
டவுன் பஞ்., சார்பில்
ஆக்கிரமிப்பு அகற்றம்
கோபி அருகே கண்ணாங்காட்டுப்பாளையத்தில், அதே பகுதியை சேர்ந்த ஒரு தனிநபர், எலத்துார் டவுன் பஞ்சாயத்துக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து, வீதியை மறைத்து காம்பவுன்ட் சுவர் கட்டுவதாக புகார் எழுந்தது. இதனால் அங்கு இடம் அளவீடு செய்யப்பட்டு, ஆக்கிரமிப்புகளை அகற்ற நோட்டீஸ் அனுப்பியும், சம்பந்தப்பட்ட நபர் ஆக்கிரமிப்பை அகற்றவில்லை. இதனால் கடத்துார் போலீசார் பாதுகாப்புடன், டவுன் பஞ்., நிர்வாகம் சார்பில், பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு நேற்று மாலை இடித்து அகற்றப்பட்டது.
விவசாய தொழிலாளர்கண்டன ஆர்ப்பாட்டம்
தற்போதுள்ள உழவர் பாதுகாப்பு திட்டத்தை ரத்து செய்து, விவசாய தொழிலாளர் நல வாரியத்தை அமைக்க வேண்டும். மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டத்தில், தொழிலாளர்களுக்கு நிலுவை கூலியை வழங்க வலியுறுத்தியும், விவசாய தொழிலாளர் சங்கத்தினர், தாராபுரம் பழைய நகராட்சி அலுவலகம் அருகே, நேற்று காலை ஆர்ப்பாட்டத்ல் ஈடுபட்டனர். விவசாய தொழிலாளர் சங்க நிர்வாகி பெரியசாமி தலைமை வகித்தார். சங்க நிர்வாகிகள் ரகுபதி, லட்சுமணன் உள்பட, 30-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
பாதயாத்திரை பக்தர்களுக்குஅ.தி.மு.க.,வினர் அன்னதானம்
தாராபுரம் வழியாக பழநி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு, பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு, அ.தி.மு.க. தொழிற்சங்கம் சார்பில், நேற்று அன்னதானம் வழங்கப்பட்டது.
தாராபுரம் பி.எஸ்.கார்னர் பகுதியில் நேற்றிரவு நடந்த நிகழ்ச்சியில், அ.தி.மு.க., நிர்வாகிகள் மற்றும் அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள், 200க்கும் மேற்பட்ட முருக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.
டூவீலரில் குட்கா கடத்திய 2 பேர் கைது
சத்தியமங்கலம் போலீசார் வரதம்பாளையம் பகுதியில் நேற்று மாலை ரோந்து சென்றனர். அப்போது டூவீலரில் வந்த இருவரை நிறுத்தி விசாரித்தனர். சத்தி, அக்ரஹாரத்தை சேர்ந்த முகமது யூசப், 24; சத்யா தியேட்டர் ரோடு பரத்குமார், 19, என தெரிந்தது. டூவீலரில் குட்கா பொருட்களை விற்பனைக்காக கொண்டு செல்வது தெரிந்தது. அவர்களிடம், 25 ஆயிரம் ரூபாய் மதிப்பில், 24.750 கிலோ குட்கா, பல்சர் பைக்கை பறிமுதல் செய்தனர்.
நீட்டிக்கப்பட்ட ரயில் சேவை
மத்திய அமைச்சர் பங்கேற்பு
ஈரோட்டில் இருந்து நீட்டிக்கப்பட்ட பாசஞ்சர் ரயில் சேவையை, மத்திய அமைச்சர் முருகன், இன்று துவக்கி வைக்க உள்ளார்.
ஈரோட்டில் இருந்து தினமும் மதியம் திருநெல்வேலிக்கு பாசஞ்சர் ரயில் இயக்கப்படுகிறது. தென் மாவட்ட மக்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக அமைந்துள்ளது.
குறைந்த கட்டணத்தில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலை செங்கோட்டை வரை நீட்டிக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்த சேவையை மத்திய அமைச்சர் முருகன், இன்று மதியம் ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் கொடியசைத்து துவக்கி வைக்கிறார்.
காலிங்கராயன்பாளையத்தில்
அடுத்தடுத்த வீடுகளில் திருட்டு
பவானி, காலிங்கராயன்பாளையம், காமதேனு நகர் முதல் வீதியில், நேற்று முன்தினம் நள்ளிரவில் புகுந்த மர்ம நபர்கள், அருகிலுள்ள வீடுகளை வெளியே பூட்டிவிட்டு, ஆளில்லாத வீடுகளின் பூட்டை உடைத்து திருட்டு முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இப்பகுதியில் ஒன்பது வீடுகள் கொண்ட குடியிருப்பில் புகுந்த ஆசாமிகள், ஆட்கள் இருந்த வீடுகளின் கதவுகளை தாழிட்டு விட்டு, ஆளில்லா வீட்டின் பூட்டை உடைத்து கைவரிசை காட்டியுள்ளனர்.
குடியிருப்பு வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த பைக்குகளை திருடி சென்றுள்ளனர். இப்பகுதியில் திருட்டு போன பொருட்கள் குறித்த விபரம் தெரியவில்லை.
பின் அதே பகுதியில் அங்கன்வாடி மையத்தில் புகுந்து, உணவுப்பொருள், காய்கறிகளை சேதப்படுத்தி சென்றுள்ளனர்.
அதே பகுதியில் லைன் வீடுகளுக்குள் புகுந்த நபர்கள், பீரோவில் இருந்த பணத்தை திருடிச் சென்றுள்ளதாக தெரிகிறது. சித்தோடு போலீசார், சம்பவ இடங்களில் நேற்று ஆய்வில் ஈடுபட்டு, கைரேகைகளை பதிவு செய்தனர். ஆளில்லாத வீடுகளில் நடந்த திருட்டு, அப்பகுதி மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
டி.என்.பாளையம் யூனியன் முடக்கம்: எம்.எல்.ஏ., காட்டம்
''தி.மு.க., ஆளும் கட்சியாக இருந்தும், டி.என்.பாளையம் யூனியன் முடங்கி கிடப்பது வெட்க கேடானது,'' என கோபி எம்.எல்.ஏ., செங்கோட்டையன் பேசினார்.
எம்.ஜி.ஆரின், 107வது பிறந்த நாளை முன்னிட்டு, டி.என்.பாளையம் அ.தி.மு.க., கிழக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட கள்ளிபட்டியில், நேற்றிரவு பொதுக்கூட்டம் நடந்தது.
இதில் தலைமை வகித்து, கோபி எம்.எல்.ஏ., செங்கோட்டையன் பேசியதாவது: டி.என்.பாளையம் யூனியன், தி.மு.க., கவுன்சிலர்கள், சேர்மேன் இடையிலான கருத்து வேறுபாடு காரணமாக ஒரு வருடமாக முடங்கி கிடக்கிறது. ஆளுங்கட்சியாக தி.மு.க., இருந்தும் எந்த செயல்பாடும் இல்லாமல் தி.மு.க., யூனியன் முடங்கி கிடப்பது வெட்கக்கேடானது.
டி.என்.பாளையம் யூனியனுக்கு உட்பட்ட பகுதிகளில் இருக்கும் குறைகளை தீர்க்க, அ.தி.மு.க., துணை நிற்கும். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுச்சாமி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை டி.என்.பாளையம் கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க., செயலாளர் ஹரிபாஸ்கர் செய்தார்.
கம்யூ., கட்சி
காங்கேயத்தில்
ஆர்ப்பாட்டம்
இந்திய கம்யூ., கட்சி, தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில், காங்கேயம் பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய தலைவர் செல்லமுத்து தலைமை வகித்தார்.
தற்போதுள்ள உழவர் பாதுகாப்பு திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். தி.மு.க., ஆட்சியில் கொண்டு வந்த விவசாயத் தொழிலாளர் நல வாரியத்தை அமைக்க வேண்டும்.
நுாறு நாள் வேலை திட்டத்தில், தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள கூலியை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
சி.பி.ஐ., ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் நதியா உள்ளிட்ட, 50-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
ஆயுதப்படை வளாகத்தில் அணிவகுப்பு ஒத்திகை
ஈரோடு மாவட்ட குடியரசு தினவிழா, நாளை மறுதினம் மாவட்ட நிர்வாகம் சார்பில், ஆணைக்கல்பாளையம் ஆயுதப்படை வளாகத்தில் கொண்டாடப்படுகிறது. விழாவில் தேசிய கொடியேற்றி தியாகிகள் கவுரவிக்கப்படுகின்றனர்.
அணிவகுப்பு மரியாதை, சிறப்பாக பணியாற்றிய போலீசார், அரசு துறை அலுவலர்களுக்கு பதக்கம், சான்றிதழ் வழங்கப்படுகிறது. பள்ளி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகளும் நடக்கவுள்ளது. இந்நிலையில் ஆயுதப்படை வளாகத்தில் கூடுதல் எஸ்.பி., (பயிற்சி) சிருஷ்டி சிங் தலைமையில், ஆயுதப்படை ஆண், பெண் போலீசார், அணிவகுப்பு ஒத்திகையில் நேற்று ஈடுபட்டனர்.
நெல் தரிசில் பயறுவகை சாகுபடி குறித்து முகாம்
காங்கேயம் வட்டாரம் நத்தக்காடையூர் பழையகோட்டை கிராமத்தில், நெல் தரிசில் பயறு வகை சாகுபடி செய்வது குறித்து முகாம் நடந்தது.
காங்கேயம் வேளாண்மை உதவி இயக்குனர் வசந்தாமணி தலைமை வகித்தார். திருப்பூர் மாவட்ட தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து திட்ட மாவட்ட ஆலோசகர்
அரசப்பன் பேசியதாவது:
காங்கேயம் வட்டாரத்தில் தற்போது சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல், அறுவடைக்கு தயாராக உள்ளது. அறுவடை முடிந்த பின் பூமி தரிசாக உள்ளதற்கு பதிலாக, பயிர்களை சாகுபடி செய்வதால் கூடுதல் மகசூல் பெறலாம். இதில் சாகுபடி செய்ய வம்பன் 8, 10 போன்ற மஞ்சள், தேமல் நோய் தாக்காத புதிய ரகங்கள், 70 நாளில் மகசூல் கொடுக்கும். இதனால் நிலத்தில் தழைச்சத்து கிரகிக்கப்பட்டு மண்வளம் மேம்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
இதில் வேளாண்மை அலுவலர் சத்யா, துணை வேளாண்மை அலுவலர் ரமேஷ், உதவி வேளாண்மை அலுவலர் ஜோதிஸ்வரன் உட்பட விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
வேளாளர் மெட்ரிக் பள்ளியில்
44வது விளையாட்டு விழா
திண்டல், வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், 44-வது விளையாட்டு விழா நடந்தது. பள்ளி தாளாளர் சந்திரசேகர் வரவேற்றார். வேளாளர் கல்வி நிறுவனங்களின் தலைவர் ஜெயக்குமார் தலைமை வகித்தார். முதல்வர் லதா ஆண்டறிக்கை வாசித்தார். சிறப்பு விருந்தினராக பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் கலந்து கொண்டார்.
மாணவியர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு, ஒலிம்பிக் ஜோதி மற்றும் தேசியக் கொடியை ஏற்றி வைத்து பேசினார். நிர்வாக மேலாளர் சென்னியப்பன், ஒருங்கிணைப்பாளர் சித்ரா, பள்ளி ஆசிரியைகள், பெற்றோர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
மாணவியரின் கராத்தே, ஸ்கேட்டிங், யோகா பயிற்சிகள் மற்றும் நிகழ்விடப் போட்டிகள் நடந்தன. விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவியருக்கு, இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் சான்றிதழ், பரிசுக் கோப்பை வழங்கினார்.

