ADDED : பிப் 12, 2024 11:01 AM
சிப்காட் ஆலையில் துர்நாற்றம்
எம்.எல்.ஏ., நள்ளிரவில் ஆய்வு
பெருந்துறையில் சிப்காட்டில் செயல்படும் தொழிற்சாலைகளில் இருந்து, நள்ளிரவில் அதிக கரும்புகை, துர்நாற்றம் வருவதாக மக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு, ௧:௦௦ மணியளவில் பெருந்துறை எம்.எல்.ஏ., ஜெயகுமார் தலைமையில், 15க்கும் மேற்பட்டோர் ஆய்வில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து எம்.எல்.ஏ., கூறுகையில், 'இனி, 24 மணி நேரமும் பல்வேறு கண்காணிப்பு குழு மூலம் கரும்புகை, காற்று மாசு, துர்நாற்றம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும். இதில் விதி மீறி செயல்படும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
இரவில் ஆடல் பாடலுடன்
மாவட்ட போலீசார் உற்சாகம்
ஈரோடு மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் ஆண்டுதோறும், நினைவூட்டல் பயிற்சி, (மொபிலைசேஷன் பரேடு) 15 நாட்கள் நடக்கும். இதில் ஆயுதப்படை, சட்டம் ஒழுங்கு போலீசார் பங்கேற்பர். நடப்பாண்டு பயிற்சி நேற்று முன்தினம் நிறைவு பெற்றது. இதையொட்டி போலீசார், அவரது குடும்பத்தினர் பங்கேற்ற இரவு விருந்து, ஆணைக்கல்பாளையம் ஆயுதப்படை வளாகத்தில் நடந்தது. இதில் அசைவ விருந்து அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் டி.ஐ.ஜி., சரவண சுந்தர், எஸ்.பி., ஜவகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். போலீசாரின் குடும்பத்தினர் மட்டுமே ஆடல் பாடல் நிகழ்ச்சியில் பங்கேற்று ஆடி, பாடி மகிழ்ந்தனர். போலீசாரும் சினிமா பாடல்களுக்கு ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.
துப்பாக்கி சுடுதல் பயிற்சிமையத்துக்கு அடிக்கல்
நம்பியூர் அருகே கோசணத்தில், கோபி ரைபிள் கிளப் சார்பில், துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் அமைக்கும் பணி நேற்று நடந்தது. ரைபிள் கிளப் செயலாளர் டாக்டர் பிரபு தலைமை வகித்தார். சங்க தலைவர் பெருமாள்சாமி துணை தலைவர்கள் அனுப், விஜய் மகேந்திரன், பொருளாளர் சதீஷ்குமார் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற கோபி எம்.எல்.ஏ., செங்கோட்டையன், பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து ரைபிள் கிளப் செயலாளர் பிரபு கூறியதாவது: அனைத்து பயிற்சி மையங்களும் நகரத்திலேயே உள்ளது. இதை மாற்றும் வகையில் கிராம பகுதியில், இந்த மையத்தை அமைக்கிறோம். முதற்கட்டமாக பள்ளி, அரசு கல்லுாரி மாணவர்களை தேர்வு செய்து, சிறந்த பயிற்சி அளித்து மாநில மற்றும் தேசிய போட்டிகளுக்கு தயார்படுத்த முடிவு செய்துள்ளோம். இவ்வாறு கூறினார்.
ரேஷன் கடைகளுக்கு வந்த2,600 டன் புழுங்கல் அரிசி
தமிழகத்தில் பொது வினியோக திட்டத்தில், ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு அரிசி வினியோகம் செய்யப்படுகிறது. இதில் ஈரோடு மாவட்ட மக்களுக்கு வினியோகிக்க, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில், தெலுங்கானா மாநிலம் நாகிரெட்டி பள்ளியில் இருந்து, புழுங்கல் அரிசி கொள்முதல் செய்யப்பட்டது. மொத்தம், 2,600 டன் புழுங்கல் அரிசி, தனி சரக்கு ரயிலில் ஈரோடு ரயில்வே கூட்ஸ் செட்டுக்கு நேற்று வந்தது. சுமை துாக்கும் தொழிலாளர்கள் நுாற்றுக்கணக்கான லாரிகளில் ஏற்றி, ஈரோட்டில் உள்ள நுகர்பொருள் வாணிப கழக கிடங்குகளுக்கு அனுப்பினர்.
பாழடைந்த வீட்டில் ஆண் சடலம் மீட்பு
ஈரோடு, கருங்கல்பாளையம், கமலா நகரில் பழைய மாட்டு சந்தை பகுதியில், பாழடைந்த வீட்டில் இருந்து கடும் துர்நாற்றம் வீசியது. அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்தபோது உடல் அழுகிய நிலையில் ஆண் சடலம் கிடந்தது.
இதையறிந்த கருங்கல்பாளையம் போலீசார் சென்றனர். இறந்த நபருக்கு, 50 வயது இருக்கும். உடல் முழுவதும் அழுகியதால் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. சந்தன நிற சட்டை, கருப்பு வெள்ளை நீல நிற கட்டம் போட்ட லுங்கி அணிந்திருந்தார். கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு
செய்துள்ளனர்.
கல்லுாரி மாணவி மாயம்ஈரோடு, முனிசிபல் காலனி, கொங்கு நகர் ஆர்.கே.அபார்மெண்ட்டை சேர்ந்தவர் ராஜரத்தினம். இவரின் மகள் மரிய ஜோஸ்பின், 19; கோவையில் தனியார் கல்லுாரியில், ஹாஸ்டலில் தங்கி கம்ப்யூட்டர் சயின்ஸ் முதலாமாண்டு படித்து வருகிறார். சென்னையை சேர்ந்த ஒரு வாலிபருடன் பழகினார்.
இதை பெற்றோர் கண்டித்தனர். இந்நிலையில் முதலாமாண்டு பருவத்தேர்வு முடிந்து, கடந்த, 7ம் தேதி வீட்டுக்கு வந்தவர், 10ம் தேதி மாயமானார். ராஜரத்தினம் புகாரின்படி, வீரப்பன்சத்திரம் போலீசார், மாணவியை தேடி
வருகின்றனர்.
டெய்லர் வீட்டில் திருட்டு
கோபி அருகே கடத்துாரை சேர்ந்தவர் முருகேசன், 44, டெய்லர்; நேற்று முன்தினம் இரவு அருகேயுள்ள மற்றொரு வீட்டில், குடும்பத்துடன் உறங்கினார். நேற்று காலை மீண்டும் வீட்டுக்கு சென்றபோது, கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.
பீரோவில் இருந்த பொருட்கள் கலைந்து கிடந்தன. அவர் புகாரின்படி கடத்துார் போலீசார் சென்று விசாரித்து, ஆய்வு மேற்கொண்டனர். இதில், 20 ஆயிரம் ரூபாய், வெள்ளி, பித்தளை பொருட்கள் மற்றும் உண்டியல் களவு போனது தெரிய வந்தது. கைவரிசை காட்டிய ஆசாமியை தேடி வருகின்றனர்.
திட்டப்பணிகளுக்காக தோண்டிய
குழிகளால் மாநகரில் அபாயம்
ஈரோடு மாநகராட்சி பகுதியில் அனைத்து வார்டுகளிலும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சாலை சீரமைப்பு, மழைநீர் வடிகால் கால்வாய், கழிவுநீர் கால்வாய், குடிநீர் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு பணி நடந்து வருகிறது.
குறிப்பாக காந்திஜி சாலை, பெருந்துறை சாலை, பவானி சாலை, சத்தி சாலை, கருங்கல்பாளையம், நேரு வீதி, ஈஸ்வரன் கோவில் வீதி உள்ளிட்ட பகுதிகளில் நடந்து வருகிறது. இப்பகுதிகளில் சாலை, மழைநீர் வடிகாலுக்கு தோண்டிய குழிகளை முறையாக மூடாததுடன், பணிகளும் மந்தமாக நடக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் மக்களுக்கு பாதிப்பு
ஏற்பட்டுள்ளது.
எனவே சாலை சீரமைப்பு மற்றும் குடிநீர் இணைப்பு பணிகளை துரிதப்படுத்தவும், திட்டப்பணி முடிந்த இடங்களில், குழிகளை உடனடியாக மூடவும், மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அந்தியூரில் தே.மு.தி.க., ஆலோசனை
தே.மு.தி.க., சார்பில், பாராளுமன்ற தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம், அந்தியூரில் நேற்று நடந்தது. அந்தியூர் ஒன்றிய பேச்சாளர் கொடிமோகன் வரவேற்றார். ஒன்றிய அவைத் தலைவர் ரமேஷ், மாவட்ட கேப்டன் மன்ற செயலாளர் பழனிச்சாமி, மாவட்ட தொழிற்சங்க தலைவர் சிவக்குமார் முன்னிலை வகித்தனர். அந்தியூர் ஒன்றிய செயலாளர் சுதாகர் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் மாவட்ட துணை செயலாளர் அன்பரசு பங்கேற்றார்.
வரும் பாராளுமன்ற தேர்தலில் கட்சி தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட்டு பணியாற்றுவது குறித்து ஆலோசித்தனர். மறைந்த கேப்டன் விஜயகாந்துக்கு, அந்தியூரில் வெண்கல சிலை வைக்க தீர்மானம் நிறைவேற்றினர்.
கூட்டத்தில் ஒன்றிய கேப்டன் மன்ற செயலாளர் பழனிச்சாமி, அத்தாணி நகர செயலாளர் விஜயகுமார், முன்னாள் கேப்டன் மன்ற ஒன்றிய செயலாளர் மலைச்சாமி, இளைஞரணி செயலாளர் முருகன், ஊராட்சி செயலாளர்கள் தங்கவேல், ராஜன், பழனி, ஜெயராஜ், அண்ணாதுரை, அப்புச்சாமி மற்றும் மகளிரணியினர், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
பெண் குழந்தை சாவு
வெள்ளித்திருப்பூர் அருகே சொக்கநாதமலையூரை சேர்ந்த தம்பதி மணிவேல், 24; சுமித்ரா, 22; இவர்களுக்கு கடந்தாண்டு டிசம்பர், 25ம் தேதி, ஈரோடு அரசு மருத்துவமனையில் இரட்டை பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் ஒரு குழந்தைக்கு, வயிறு உப்புசம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு, பெருந்துறை அரசு மருத்துவமனை மருத்துவ கல்லுாரிக்கு கொண்டு சென்றனர். டாக்டர்கள் பரிசோதனையில் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது.
காங்கேயம் இன மாடுகள்
ரூ.11 லட்சத்துக்கு விற்பனை
காங்கேயம், நத்தக்காடையூர் அருகே, பழையகோட்டை மாட்டுத்தாவணியில் காங்கேயம் இன மாடுகளுக்கான சந்தை நேற்று நடந்தது. திருப்பூர் மட்டுமின்றி கோவை, ஈரோடு, கரூர், திண்டுக்கல், நாமக்கல், திருச்சி, சேலம் மாவட்ட விவசாயிகளும், மாடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். தமிழகத்தின் பல்வேறு பகுதி விவசாயிகள் வருகின்றனர். இடைத்தரகர் யாருமின்றி மாடுகளை நேரடியாக விலை பேசி வாங்கி செல்கின்றனர். நேற்றைய சந்தைக்கு மாடுகள், காளைகள், கிடாரி மற்றும் காளை கன்றுகள் என, 61 கால்நடைகள் வரத்தாகின. மாடுகள், 20 ஆயிரம் ரூபாய் முதல், 59 ஆயிரம் ரூபாய் வரை விற்றன. கிடாரி கன்று, 12 ஆயிரம் முதல், 40 ஆயிரம் வரை விற்றது. மொத்தம், 30 கால்நடைகள், 11 லட்சம் ரூபாய்க்கு விற்றதாக, சந்தை பொறுப்பாளர் தெரிவித்தார்.
முருங்கை 10 டன் வரத்து
கிலோ ரூ.40 க்கு விற்பனை
தமிழகத்தில் கொடி முருங்கை, செடி முருங்கை, மரமுருங்கை, செம்முருங்கை என நான்கு வகை முருங்கைகள் உள்ளன.
இவற்றில் திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில், முத்துார், காங்கேயம், புதுப்பை பகுதிகளில் செடி முருங்கை, மரமுருங்கை அதிகம் சாகுபடி செய்யப்படுகின்றன. வெள்ளகோவிலில் இயங்கும் முருங்கைக்காய் கொள்முதல் நிலையத்துக்கு, விவசாயிகள் கொண்டு வருகின்றனர். நேற்று, 10 டன் வரத்தானது. இதில் மர முருங்கை கிலோ, 20 ரூபாய்; செடி முருங்கை, 25 ரூபாய்; கரும்பு முருங்கை, 40 ரூபாய்க்கும் விற்பனையானது.
கோழி பண்ணையில் கஞ்சா
செடி வளர்த்த 2 பேர் கைது
தாராபுரத்தை அடுத்த குண்டடம் பகுதியில், கஞ்சா செடி வளர்க்கப்படுவதாக தாராபுரம் மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் இன்ஸ்பெக்டர் கோவர்தனாம்பிகை தலைமையில் மதுவிலக்கு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
தொட்டியந்துறை கிராமத்தில் கோழிப்பண்ணை ஒன்றில் தங்கி வேலை பார்த்த தொழிலாளர்கள், கஞ்சா செடி வளர்த்து வந்தது தெரிந்தது. இது தொடர்பாக மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த தாரிக் முண்டால், 33, அனுப் சர்தார், 22, ஆகியோரை கைது செய்தனர். அவர்கள் வளர்த்த ஒரு கிலோ, 800 கிராம் எடையுள்ள மூன்று கஞ்சா செடிகளை பறிமுதல் செய்தனர். தாராபுரம் குற்றவியல் நடுவர் முன் ஆஜர்படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
பா.ஜ., மூத்த தலைவர்
தீனதயாள் நினைவு தினம்
பாரதிய ஜனதா மூத்த தலைவரான தீனதயாள் உபாத்யாயா நினைவு தினம், தாராபுரம் பா.ஜ., அலுவலகத்தில் நேற்று அனுசரிக்கப்பட்டது. நகர தலைவர் சதீஷ் தலைமையில், அவரது உருவப்படத்துக்கு, நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மலர் துாவி மரியாதை செய்தனர். நகர பொதுச்செயலாளர்கள் செல்வன், விவேக் உள்பட பலர் பங்கேற்றனர்.
சேவல் சூதாட்டம்
மூன்று பேர் கைது
தாராபுரம் போலீசார் நேற்று மதியம் ரோந்தில் ஈடுபட்டனர். மதுக்கம்பாளையம் பிரிவு அருகே, சேவல்களை சண்டையிட வைத்து சூதாட்டத்தில் சிலர் ஈடுபட்டிருந்தனர். அவர்களை சுற்றி வளைத்த போலீசார், இரு சேவல்கள், ௧,௦௦௦ ரூபாயை பறிமுதல் செய்தனர். சூதாட்டத்தில் ஈடுபட்ட தாராபுரம், குளத்துப்புஞ்சை தெரு ரமேஷ், வள்ளுவர் தெரு முரளிதரன், தொப்பம்பட்டியை சேர்ந்த கணேசன் ஆகியோரை கைது செய்தனர்.
நாய்கள் கடித்து
புள்ளி மான் பலி
வெள்ளகோவிலை அடுத்த வட்டமலைகரை ஓடை பகுதியில் மான் உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் வசிக்கின்றன. அங்கிருந்து தவறி வந்த ஒரு ஆண் புள்ளிமான், வெள்ளகோவில் அருகே உள்ள தீர்த்தம்பாளையம் பகுதியில், விவசாய நிலத்தில் மாடுகளுடன் நேற்று மேய்ந்து கொண்டிருந்தது. இதை பார்த்து விட்ட தெருநாய்கள் விரட்டி மானை கடித்தன. அப்பகுதியில் கால்நடை மேய்த்தவர்கள், நாய்களை துரத்திவிட்டு கடிபட்ட மானை மீட்டு, வெள்ளகோவில் தீயணைப்பு நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்கள் மூலம் காங்கேயம் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் மான் இறந்து விட்டது.
'தேர்வுக்கு முன் பதற்றம்,
அவசரம் கூடாது'
'செய்முறைத் தேர்வுக்கு முன் பதற்றம், அவசரமாக பணி செய்ய கூடாது. தேர்வு பணியில் ஈடுபடுவோர் பணியில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும்' என, முதன்மை கல்வி அலுவலர் கீதா அறிவுரை வழங்கினார்.
திருப்பூர் மாவட்டத்தில், 25 ஆயிரத்து, 688 மாணவர்கள் பிளஸ் 2 தேர்வு எழுதுகின்றனர். மார்ச் 1ம் தேதி தேர்வு நடக்கவுள்ள நிலையில், அடுத்த வாரம் செய்முறை தேர்வு துவங்குகிறது. இதுகுறித்த ஆலோசனை கூட்டம், திருப்பூர், கே.செட்டிபாளையம், விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா பேசுகையில், ''செய்முறை தேர்வுக்கு முன் ஆய்வகம் தயாராக வைப்பது, ஆசிரியருக்கு பணி, புற, அக மதிப்பீட்டாளர்கள் பணி குறித்து முன்கூட்டியே தலைமை ஆசிரியர் தெரிவித்திருக்க வேண்டும். தேர்வுக்கு முன் பதட்டம், அவசரமாக பணி செய்ய கூடாது. பிற பள்ளிகளில் இருந்து வரும் மாணவ, மாணவியர் பாதுகாப்பாக, கவனமுடன் தேர்வுத்துறை சென்று திரும்புவது உறுதி செய்ய வேண்டும். தேர்வு பணியில் ஈடுபடுவோர் பணியில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும்,''
என்றார்.
அரசு மருத்துவமனையில் பெண்ணுக்கு
இடுப்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை
அந்தியூர், தெப்பக்குளம் வீதியை சேர்ந்தவர் சகுந்தலா, 55; பல ஆண்டாக இடுப்பு மற்றும் கால் வலியால் அவதிப்பட்டு வந்தார்.
இந்நிலையில் கடந்த மாதம், 23ம் தேதி அந்தியூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்றார். எக்ஸ்ரே சோதனையில் வலது பக்க இடுப்பு மூட்டு எலும்பு தேய்ந்தது தெரிய வந்தது. இதனால் அவருக்கு இடுப்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்தனர்.
ஈரோடு அரசு மருத்துவமனை எலும்பு முறிவு அறுவை சிகிச்சை நிபுணர்கள் ராஜ்குமார், மோகன்குமார் உள்ளிட்ட மருத்துவ குழுவினர், அந்தியூர் அரசு மருத்துவமனையில் அவருக்கு ஆப்பரேஷன் செய்தனர். 4 மணி நேர அறுவை சிகிச்சைக்கு பின், வெற்றிகரமாக இடுப்பு மூட்டு எலும்பு மாற்றப்பட்டது. அறுவை சிகிச்சை மேற்கொண்ட, 24 மணி நேரத்தில் வாக்கர் உதவியுடன் சகுந்தலா நடக்கவும் ஆரம்பித்தார்.
இதுகுறித்து தலைமை மருத்துவர் (பொ) கவிதா கூறியதாவது: சென்னை, கோவை உள்ளிட்ட பெரு நகரங்களில் மேற்கொள்ளப்பட்ட கூடிய அறுவை சிகிச்சை, கிராமப்புறத்தில் உள்ள நமது அந்தியூர் அரசு மருத்துவமனையில், முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தில் இலவசமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார்.

