/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பி.ஏ.பி., வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டுவதால் அதிர்ச்சி
/
பி.ஏ.பி., வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டுவதால் அதிர்ச்சி
பி.ஏ.பி., வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டுவதால் அதிர்ச்சி
பி.ஏ.பி., வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டுவதால் அதிர்ச்சி
ADDED : ஜன 21, 2024 12:34 PM
பொங்கலுார்: பி.ஏ.பி., வாய்க்கால், கரைகளை ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பி.ஏ.பி., வாய்க்கால் வாயிலாக, 3.77 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. பிரதான வாய்க்கால், 124 கி.மீ., மற்றும் கிளை வாய்க்கால்கள் நுாற்றுக்கணக்கான கி.மீ., நீளம் உள்ளது. பி.ஏ.பி., வாய்க்காலை ஒட்டி திருப்பூர், பொங்கலுார், காங்கயம், பல்லடம் உட்பட பகுதிகளில் அதிக அளவில் வீட்டுமனைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. வீட்டுமனைகளை விற்பனை செய்வோர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுகின்றனர். அதனை வாங்கிய பலரும் வாய்க்கால் கரையை ஆக்கிரமித்து வீடு கட்டுவது, கழிவறை கட்டுவது, கழிவு நீரை நேரடியாக வாய்க்காலில் கலப்பது, குப்பைகளை கொட்டி வாய்க்காலை அழிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், திருமூர்த்தி அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் கடைமடை வரை செல்வதில் பெரும் சோதனை ஏற்படுகிறது.
பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறியதாவது: பி.ஏ.பி., வாய்க்காலில் எங்கு பார்த்தாலும் காலி மது பாட்டில்கள், பிளாஸ்டிக் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டிய பொறுப்பு பொதுப்பணித்துறையினருக்கு உள்ளது. ஆனால், அவர்கள் அதனைப்பற்றி கண்டு கொள்வதில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பத்து முதல் இருபது நாட்களுக்கு தண்ணீர் விடப்படுகிறது. இதனால், இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறையே வாய்க்காலுக்கு செல்கிறோம். அதற்குள் வாய்க்காலை மொத்தமாக கபளீகரம் செய்து விடுகின்றனர். எனவே, தமிழக அரசின் பொதுப்பணித்துறையினர், போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். வாய்க்காலை சுற்றி கட்டுமானம் அமைக்காதவாறு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.

