/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
உப்பாறு அணை விவசாயிகள் கலெக்டர் ஆபீசில் போராட்டம்
/
உப்பாறு அணை விவசாயிகள் கலெக்டர் ஆபீசில் போராட்டம்
ADDED : ஜன 14, 2024 11:31 AM
உப்பாறு அணைக்கு, முழு கொள்ளளவு தண்ணீர் வழங்க வலியுறுத்தி, விவசாயிகள் நேற்று உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
உப்பாறு அணைக்கு, பி.ஏ.பி., திட்டத்தில் உபரி நீரை வழங்க வேண்டுமென, அப்பகுதி விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். கனமழை பெய்து, அணையில் நீர் இருந்த போது மட்டும் தண்ணீர் திறக்கப்படுகிறது.
அரசு உத்தரவிட்டுள்ளபடி, அணைக்கு முழுமையாக தண்ணீர் வழங்க வேண்டுமென, விவசாயிகள் போராடி வருகின்றனர். இந்நிலையில், நான்கு முறை பேச்சுவார்த்தைக்கு அழைத்துவிட்டு, கடைசி நேரத்தில் கூட்டத்தை ரத்து செய்வதாக, 16 விவசாயிகள் நேற்று, கலெக்டர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
திருப்பூர் மாவட்ட உப்பாறு அணை விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிர்வாக குழு உறுப்பினர் சிவக்குமார் கூறியதாவது: கடந்த நான்கு ஆண்டுகளாக, உப்பாறு அணைக்கு, முழு கொள்ளளவு தண்ணீர் வழங்க கோரி, வலியுறுத்தி வருகிறோம். கடந்தாண்டில் துவங்கி, பலமுறை, பி.ஏ.பி., அதிகாரிகளிடம் மனு கொடுத்து, வலியறுத்தி வருகிறோம். நவ., 15ம் தேதி முதல் பேச்சுவார்த்தைக்கு அழைப்பதாக கூறி, அதிகாரிகள் இழுத்தடிக்கின்றனர். நான்குமுறை பேச்சுவார்த்தைக்கு அழைத்துவிட்டு, முந்தையநாள் பேச்சுவார்த்தையை ரத்து செய்கின்றனர். உப்பாறு அணை பகுதி விவசாயிகளுக்கு, கால்நடைகளுக்கு கூட தண்ணீர் கிடைப்பதில்லை. உப்பாறு அணையில், 400க்கும் அதிகமான விவசாயிகள் போராட்டம் நடத்திய போது, தாராபுரம் தாசில்தார் பேச்சுவார்த்தை நடத்தினார். விரைவில், பேச்சுவார்த்தைக்கு அழைப்பதாக கூறினர்.
உப்பாறு அணைப்பகுதி விவசாயிகள் விவகாரத்தில், மாவட்ட நிர்வாகம் பாரபட்சமாக நடந்துகொள்கிறது. இன்று (நேற்று) கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்துகிறோம். போலீசார் கைது செய்தால், இந்தாண்டு சிறையில் பொங்கலை கொண்டாட உத்தேசித்து, இங்கு வந்துள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.
கலெக்டர் அறை அருகே அமர்ந்து, விவசாயிகள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். கலெக்டரின் நேர்முக உதவியாளர் உள்ளிட்ட அலுவலர்கள், சமாதானம் செய்தனர்; இருப்பினும், மாலை வரை விவசாயிகள் போராட்டம் தொடர்ந்தது.

