/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பணத்தை வாரி இறைத்து களமாடும் தி.மு.க.,; செலவு செய்ய முடியாமல் திணறும் அ.தி.மு.க.,
/
பணத்தை வாரி இறைத்து களமாடும் தி.மு.க.,; செலவு செய்ய முடியாமல் திணறும் அ.தி.மு.க.,
பணத்தை வாரி இறைத்து களமாடும் தி.மு.க.,; செலவு செய்ய முடியாமல் திணறும் அ.தி.மு.க.,
பணத்தை வாரி இறைத்து களமாடும் தி.மு.க.,; செலவு செய்ய முடியாமல் திணறும் அ.தி.மு.க.,
ADDED : ஜூன் 24, 2025 08:01 AM

சட்டசபை தேர்தல் பணிகளை ஆளுங்கட்சி பலத்துடன் தி.மு.க., இப்போதே தீவிரப் படுத்தி வரும் நிலையில் அவர்களுக்கு இணையாக செலவு செய்ய முடியாத நிலையில் அ.தி.மு.க., திணறி வருகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி (தனி), சங்கராபுரம், ரிஷிவந்தியம், உளுந்தூர்பேட்டை ஆகிய 4 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் கள்ளக்குறிச்சி அ.தி.மு.க., வசமும் மற்றும் 3 தொகுதிகள் தி.மு.க., வசமும் உள்ளது..
தி.மு.க.,வைப் பொருத்தவரை சங்கராபுரம் தொகுதி எம்.எல்.ஏ., உதயசூரியன் அக்கட்சியின் வடக்கு மாவட்ட செயலாளராகவும், ரிஷிவந்தியம் எம்.எல்.ஏ., வசந்தம் கார்த்திகேயன் தெற்கு மாவட்ட செயலாளராகவும் உள்ளனர். உளுந்துார்பேட்டை தொகுதியில் மணிக்கண்ணன் எம்.எல்.ஏ.,வாக உள்ளார். அதேபோல் மாவட்ட பொறுப்பு அமைச்சரான வேலு கட்சி வளர்ச்சிக்காகவும் தேர்தலில் வெற்றி பெறவும் செலவு செய்வதில் தாராளமாகவே நடந்து கொள்வார்.
இதன் காரணமாக இப்போதே வார்டு வாரியாக கணக்கெடுத்து பொறுப்பாளர்களை நியமனம் செய்து தேர்தல் பணிகளை தி.மு.க., முடுக்கி விட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக முக்கிய ஊர்களில் கட்சி அலுவலகம் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் தி.மு.க., நிர்வாகிகள் தொண்டர்கள் மிகுந்த உற்சாகத்துடன் தேர்தலை சந்திப்பதற்கு களப்பணியில் ஈடுபடத் துவங்கி விட்டனர்.
அ.தி.மு.க., வைப் பொறுத்தவரை கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகள் மற்றும் திருக்கோவிலுார் தொகுதிக்கும் சேர்த்து குமரகுரு மாவட்ட செயலாளராக உள்ளார். கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ., செந்தில்குமார் பெரிய அளவு பொருளாதார பின்புலம் இல்லாதவர். முன்னாள் அமைச்சர் மோகன் கடந்த 2016 தேர்தலில் பெற்ற தோல்விக்கு பிறகு பெரிய அளவில் செலவு செய்யாமல் கட்சிப் பணி செய்து வருகிறார். அதேபோல் முன்னாள் எம்.எல்.ஏ.,க்களான அழகுவேல் பாபு, பிரபு ஆகியோரும் ஆளுங்கட்சியாக இல்லாததால் அடக்கி வாசிக்கின்றனர்.
தேர்தலுக்கான மொத்த செலவையும் மாவட்ட செயலாளர் குமரகுரு மட்டுமே செய்ய வேண்டிய நிலை உள்ளது. இவர் கடந்த லோக்சபா தேர்தலில் கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு அதற்கான செலவுகளை தாராளமாக செய்தும் வெற்றி பெற முடியாமல் போனதால் சோர்ந்துள்ளார். ஆளுங்கட்சி தி.மு.க., பணபலத்தோடு சட்டசபை தேர்தல் பணிகளில் சுறுசுறுப்பு காட்டி வரும் நிலையில் இவர்களுக்கு இணையாக பணம் செலவு செய்ய முடியாமல் அ.தி.மு.க., நிர்வாகிகள் திணறி வருவது தெளிவாக தெரிகிறது.