/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
உளுந்து பயிருக்கு காப்பீடு தொகை கிடைக்குமா? மாவட்ட விவசாயிகள் எதிர்பார்ப்பு
/
உளுந்து பயிருக்கு காப்பீடு தொகை கிடைக்குமா? மாவட்ட விவசாயிகள் எதிர்பார்ப்பு
உளுந்து பயிருக்கு காப்பீடு தொகை கிடைக்குமா? மாவட்ட விவசாயிகள் எதிர்பார்ப்பு
உளுந்து பயிருக்கு காப்பீடு தொகை கிடைக்குமா? மாவட்ட விவசாயிகள் எதிர்பார்ப்பு
ADDED : ஜன 19, 2024 07:30 AM
திருக்கோவிலுார் : செழித்து வளர்ந்த உளுந்து பயிர் காய் பிடிக்கும் தருவாயில் மழையின்றி கருகியும், கடந்த மாதம் கடைசியில் பெய்த மழைால் அழுகியும் நஷ்டம் அடைந்த விவசாயிகளுக்கு காப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டம் தமிழக உளுந்து உற்பத்தியில் முக்கிய பங்காற்றுகிறது. குறிப்பாக திருக்கோவிலுார், ரிஷிவந்தியம், முகையூர் ஒன்றியங்களில் மானாவாரி நிலங்களில் விவசாயிகள் ஆண்டு தோறும் உளுந்து விதைப்பு செய்வது வழக்கம்.
அந்த வகையில் வடகிழக்கு பருவமழையின் முதல் சுற்று துவக்கத்தில் மானாவாரி நிலங்கள் உழவு செய்ய ஏற்ற தருணமாக இருந்ததால், பெரும்பாலான விவசாயிகள் உளுந்து விதைப்பு செய்தனர்.
திருக்கோவிலுார், ரிஷிவந்தியம், முகையூர் ஒன்றியங்களில் 16 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உளுந்து சாகுபடி செய்யப்பட்டது. வேளாண் துறை சார்பில் மானிய விலையில் விவசாயிகளுக்கு விதை உளுந்து வழங்கப்பட்டதால் தரமான உளுந்து விதைகளை விவசாயிகள் விதைப்பு செய்தனர். அவ்வப்போது லேசாக பெய்த பருவமழையால் பயிர்கள் செழித்து வளர்ந்தன.
பூ வைத்து, காய் காய்க்கும் தருவாயில் மழை இல்லாததால் காய் பிடிக்காமல் கருகியது. அத்துடன் காலம் கடந்து, கடந்த மாத இறுதியில் பெய்த மழை முற்றிய பயிர்களை மொத்தமாக அழுகச் செய்து விட்டது. வழக்கமாக ஒரு ஏக்கருக்கு 250 முதல் 300 கிலோ உளுந்து கிடைக்கும். ஆனால், தற்போது அறுவடை செய்தால் 50 கிலோ உளுந்து கூட கிடைக்காமல் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இயற்கை இடர்பாடுகளால் உளுந்து விளைச்சல் பாதிக்கப்பட்டால் இழப்பீட்டை சமாளிக்கும் வகையில் விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு செய்ய வேளாண்துறை அறிவுறுத்தியது. இதனை ஏற்று பெரும்பாலான விவசாயிகள் காப்பீடு செய்துள்ளனர்.
உளுந்து விதைப்பில் கடும் நஷ்டத்தை சந்தித்துள்ள விவசாயிகளுக்கு காப்பீட்டு நிறுவனங்கள் இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்க துவங்கியிருக்கின்றனர் விவசாயிகள்.
கிராமம் வாரியாக அறிவிக்கை செய்யப்பட்ட பயிர்களுக்கு, ஒவ்வொரு கிராமத்திலும் தலா நான்கு தலைகளில் பயிர் அறுவடை பரிசோதனை செய்யப்படும். வேளாண்மை, புள்ளியல் துறை, விவசாயிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனத்தின் பிரதிநிதிகள் முன்னிலையில் பரிசோதனை நடைபெறும். அறுவடையில் கிடைக்கும் மகசூல் கடந்த 5 ஆண்டுகளில் கிராமத்தில் கிடைத்த மகசூலை விட குறைவாக இருக்க வேண்டும். குறைவாக கிடைத்த மகசூல் மற்றும் அந்த அறிவிக்கை செய்யப்பட்ட பயிருக்கான சராசரி மகசூலுக்கு இடையே உள்ள வேறுபாடே இழப்பீடாக வழங்கப்படுகிறது.
இதன் அடிப்படையில் வேளாண் துறையினர் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு பாதிக்கப்பட்டிருக்கும் உளுந்து விவசாயிகளுக்கு காப்பீட்டை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைத்து தரப்பு விவசாயிகளின் ஒட்டுமொத்த கோரிக்கையாக உள்ளது.

