/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளக்குறிச்சியில் மகப்பேறு சிறப்பு வார்டு அமைக்க கோரிக்கை! முழு வசதியுடன் அறுவை சிகிச்சை அரங்குகள் தேவை
/
கள்ளக்குறிச்சியில் மகப்பேறு சிறப்பு வார்டு அமைக்க கோரிக்கை! முழு வசதியுடன் அறுவை சிகிச்சை அரங்குகள் தேவை
கள்ளக்குறிச்சியில் மகப்பேறு சிறப்பு வார்டு அமைக்க கோரிக்கை! முழு வசதியுடன் அறுவை சிகிச்சை அரங்குகள் தேவை
கள்ளக்குறிச்சியில் மகப்பேறு சிறப்பு வார்டு அமைக்க கோரிக்கை! முழு வசதியுடன் அறுவை சிகிச்சை அரங்குகள் தேவை
ADDED : ஜன 23, 2024 10:21 PM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லுாரி, மருத்துவமனையில் ஒவ்வொரு துறைக்கும் மருத்துவர்களை நியமிக்கவும்,அறுவை சிகிச்சை அரங்கம் அனைத்தும் முழு வசதியுடன் செயல்பட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்என்று சுகாதார பேரவை கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் மாவட்ட சுகாதார பேரவை கூட்டம் நேற்று நடந்தது.
கூட்டத்திற்கு கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.,க்கள் வசந்தம் கார்த்திகேயன், உதயசூரியன், மணிக்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனை, அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை, துணை சுகாதார நிலையம் உள்ளிட்ட மருத்துவமனைக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதி, சுகாதார சேவை மற்றும் மருத்துவர்கள், இதர பணியாளர்கள் தேவைகள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.
மாவட்டத்தில் அனைத்து கர்ப்பிணி களும் இருதய பரிசோதனை 'எக்கோ' மேற்கொள்வதற்கு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதனையொட்டி கர்ப்பிணிகளின் நலன் கருதி, கூட்டத்தில் பங்கேற்ற எம்.எல்.ஏ.,க்கள் தங்கள் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 'எக்கோ' கருவி வாங்க நிதி ஒதுக்கீடு செய்வதாக தெரிவித்துள்ளனர். அதன் மூலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும் எக்கோ கருவி விரைவில் அமைக்கப்படும்.
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் இருக்கும் ஒவ்வொரு துறைக்கும் மருத்துவர்கள் நியமிக்க வேண்டும்.
மேலும், அறுவை சிகிச்சை அரங்கம் அனைத்தும் முழு வசதியுடன் செயல்பட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற மருத்துவர்களின் கோரிக்கைகளுக்கு விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மாவட்டத்தில் மாதந்தோறும் 800 முதல் 1,000 வரை கர்ப்பிணிகளுக்கு பிரசவங்கள் நடக்கிறது. எனவே அதிகளவில் படுக்கைககள் கொண்ட சிறப்பு வார்டு அமைக்கவும், மாவட்டத்தில் பின்தங்கிய பகுதிகளில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கவும் கோரிக்கை வைத்தனர்.
மேலும், ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைக்கு தேவையான உபகரணங்கள், கூடுதல் கட்டடங்கள் கட்டுவதற்கு சுகாதார பேரவை மூலம் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளபடும்.
மேலும் கூட்டத்தில் பங்கேற்ற எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் மருத்துவர்கள் அளித்த கோரிக்கை தொடர்பாக மாநில அளவில் நடைபெறும் தமிழ்நாடு சுகாதார பேரவை கூட்டத்திற்கும், சம்மந்தப்பட்ட மருத்துவ துறைக்கும் அனுப்பி வைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கலெக்டர் எடுத்துரைத்தார்.
இதனைத் தொடர்ந்து வட்டார வாரியாக சுகாதார தேவைகள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.
கூட்டத்தில், மாவட்ட சேர்மன் புவனேஸ்வரி, அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை கண்காணிப்பாளர் நேரு, ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் ராமு, சுகாதார பணிகள் துணை இயக்குனர் ராஜா, மருத்துவம் மற்றும் குடும்ப நல துணை இயக்குனர் மணிமேகலை, காசநோய் துணை இயக்குனர் சுதாகர், தொழுநோய் துணை இயக்குனர் சுதாகர் மற்றும் அனைத்து வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள், சமுதாய சுகாதார செவிலியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.

