நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆய்வுக்கூட்டம்
நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆய்வுக்கூட்டம்
ADDED : செப் 08, 2026 07:22 PM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் பருவ மழைக்கால நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது.
கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, கலெக்டர் பத்மஜா தலைமை தாங்கினார். கூட்டத்தில், பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீரில் உரிய அளவு குளோரின் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும் தண்ணீர் சேமிப்பு தொட்டிகள், தேங்காய் ஓடுகள், முட்டை ஓடுகள், பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் டயர்கள் உள்ளிட்ட டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்கள் அனைத்தும் உடனடியாக அகற்றி, கூட்டுச் சுத்தம் செய்யும பணி மூலம் முறையாக அப்புறப்படுத்த வேண்டும்.
டெங்கு, ஸ்க்ரப் டைபஸ் மற்றும் லெப்டோஸ்பிரோசிஸ் எனும் எலிக்காய்ச்சல் பரவலைத் தடுக்க தேங்கிய நீர் உள்ள அனைத்து இடங்களையும் சுத்தம் செய்து கிருமி நீக்கம் செய்ய வேண்டும்.
மேலும் டெங்கு பாதித்த பகுதிகள் மற்றும் டெங்கு வைரஸ் பாதிப்புள்ள கொசுப்புழு ஒழிக்கும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அனைத்து உள்ளாட்சி அமைப்புகளும் புகைமூட்டம் பரப்பும் இயந்திரங்களை செயல்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.
மருத்துவமனைகளில் காய்ச்சல் நோயாளிகளுக்கு தனி வரிசை, கொசு வலைகளுடன் கூடிய தனி வார்டுகள், நீர்ச்சத்து வழங்கும் மையம் ஆகியவற்றை அமைக்க வேண்டும். சிறிய, பெரிய உணவகங்களில் பணியாளர்களின் தனிப்பட்ட சுகாதாரம் மற்றும் டைபாய்டு தடுப்பூசி செலுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என உணவு பாதுகாப்பு துறைக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
டாக்டரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்தகங்களில் ஊசி போடுவதையோ அல்லது நேரடியாக ஊசிகளை விற்பனை செய்வதையோ தவிர்க்க வேண்டும். காய்ச்சல் உள்ளவர்கள் மருந்தகங்களில், தகுதியற்ற மருத்துவர்களிடமோ ஊசி போட்டுக்கொள்ள கூடாது என அறிவுறுத்தினார்.
கூட்டத்தில் திருக்கோவிலுார் சப் கலெக்டர் கார்த்திக் ராஜா மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
