/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
உள்ளாட்சிகளுக்கு 15வது மத்திய நிதி...ரூ.46 கோடி!:1,475 பணிகள் செய்வதற்கு அனுமதி
/
உள்ளாட்சிகளுக்கு 15வது மத்திய நிதி...ரூ.46 கோடி!:1,475 பணிகள் செய்வதற்கு அனுமதி
உள்ளாட்சிகளுக்கு 15வது மத்திய நிதி...ரூ.46 கோடி!:1,475 பணிகள் செய்வதற்கு அனுமதி
உள்ளாட்சிகளுக்கு 15வது மத்திய நிதி...ரூ.46 கோடி!:1,475 பணிகள் செய்வதற்கு அனுமதி
ADDED : ஜன 23, 2024 09:54 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், மூன்று உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு, 46.46 கோடி ரூபாய், 15வது மத்திய நிதிக்குழு மானியத்திற்கு, நிதி விடுவிக்கப்பட்டு உள்ளது. இதில், 1,475 பணிகள் செய்வதற்கு, ஊரக வளர்ச்சித் துறை நிர்வாக அனுமதி அளித்து உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊராட்சி நிர்வாகம் உள்ளது. அதன் கீழ், காஞ்சிபுரம், வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதுார், குன்றத்துார், உத்திரமேரூர் ஆகிய ஐந்து ஒன்றிய உள்ளாட்சி நிர்வாகம் உள்ளது. அதன்கீழ், 247 ஊராட்சிகள் அடங்கிய, ஊரக உள்ளாட்சி நிர்வாகங்கள் உள்ளன.
பகிர்ந்தளிப்பு
இந்த உள்ளாட்சி நிர்வாகங்களில் இருக்கும் மக்கள் தொகைக்கு ஏற்ப, சாலை, குடிநீர், கட்டடம் ஆகிய உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு, ஆண்டிற்கு ஒரு முறை மத்திய நிதிக்குழு மானியம் வழங்குகிறது.
இந்த நிதியை, இரு தவணைகளாக பிரித்து, அந்தந்த உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு, ஊரக வளர்ச்சித் துறை நிர்வாகம் உரிய நேரத்தில் பகிர்ந்தளிக்கும்.
இதில், 30 சதவீதம் துாய்மை மற்றும் சுகாதாரம் ஆகிய பணிகள் செய்வதற்கும், குடிநீர் வளர்ச்சி பணிகளுக்கு, 30 சதவீதம். அரசு கட்டடம் மறுசீரமைப்பு செய்வதற்கு, 40 சதவீதம் என மொத்தம், 100 சதவீதம் நிதியை பயன்படுத்தி, பலவித வளர்ச்சி பணிகள் செய்து வருகின்றன.
வளர்ச்சி பணிகள்
காஞ்சிபுரம் மாவட்டத்தில், உள்ளாட்சி நிர்வாகங்கள் என அழைக்கப்படும் மாவட்ட நிர்வாகம், ஒன்றிய நிர்வாகம், ஊராட்சி நிர்வாகங்களுக்கு, 46.46 கோடி ரூபாய், 15வது மத்திய நிதிக்குழு மானியமாக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்த நிதியை, 247 ஊராட்சிகளுக்கு, 36.44 கோடி ரூபாயில், 1,338 பணிகள்.
வட்டார நிர்வாகங்களுக்கு, 7.84 கோடி ரூபாயில், 113 பணிகள். மாவட்ட ஊராட்சி நிர்வாகத்திற்கு, 2.18 கோடி ரூபாயில், 24 பணிகள் என, மொத்தம், 1,475 பணிகளுக்கு 46.46 கோடி ரூபாய் மூன்று உள்ளாட்சிகளுக்கு, காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை நிதி அளித்து, நிர்வாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதில், பள்ளி கட்டடங்கள் சீரமைப்பு, அங்கன்வாடி மைய கட்டடங்கள் சீரமைப்பு ஆகிய பலவித வளர்ச்சி பணிகள் மேற்க்கொள்ளப்பட உள்ளன.
பணம் விடுவிப்பு
இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
காஞ்சிபுரம் மாவட்டத்தில், மாவட்ட ஊராட்சி, ஒன்றிய ஊராட்சி, ஊரக வட்டாரம், ஊராட்சிகள் ஆகிய மூன்று அடுக்கு உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு, 46.46 கோடி ரூபாய், 15வது மத்திய நிதிக்குழு மானிய நிதி ஒதுக்கீடு கிடைத்துள்ளது.
இதில், 1,475 பணிகள்தேர்வு செய்யப்பட்டு, நிர்வாக அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதற்கு, வேலை நிலைகளுக்கு ஏற்ப, பணம் விடுவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

