/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அறுபடை வீடுகளை போற்றி திருப்போரூரில் 2 நாள் விழா
/
அறுபடை வீடுகளை போற்றி திருப்போரூரில் 2 நாள் விழா
ADDED : ஜன 18, 2024 09:35 PM
சென்னை:தை கிருத்திகை பெருவிழாவை முன்னிட்டு, அறுபடை வீடுகளை போற்றும் விழா திருப்போரூரில் இரண்டு நாள் விமர்சையாக நடத்தப்படுகிறது.
சென்னை, நுங்கம்பாக்கம், அறநிலையத்துறை தலைமையகத்தில் அமைச்சர் சேகர்பாபு தலைமையில் தை கிருத்திகை, தைப்பூசம், மகா சிவராத்திரி விழா, அறுபடை வீடு ஆன்மிகப் பயணம், ராமேஸ்வரம், -காசி ஆன்மிகப் பயணம் ஆகியவற்றிற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது.
கூட்டத்தில் சேகர்பாபு பேசியதாவது:
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளை போற்றும் வகையில், செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர், கந்தசுவாமி கோவில் திருமண மண்டபத்தில், 19ம் தேதி முதல் 20ம் தேதி இரவு வரை தை கிருத்திகை பெருவிழா கொண்டாடப்பட உள்ளது. அங்கு முருகப்பெருமானின் அறுபடை வீடுகள் அரங்குகளாக அமைக்கப்படும்.
20ம் தேதி முழுதும் அன்னதானம் வழங்கப்படும். ஆன்மிக பட்டிமன்றம், குற்றால குறவஞ்சி நாட்டிய நாடகம், பக்தி இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெறஉள்ளன.
இந்தாண்டு மகா சிவராத்திரி பெருவிழா கூடுதலாக மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர், திருவானைக்காவல், அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜம்புகேஸ்வரர் இரு கோவில்கள் உள்ளிட்ட ஏழு கோவில்கள் நடத்தப்படும். அறுபடை வீடு ஆன்மிக முதற்கட்ட பயணம் ஜன. 28ல் துவங்க உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
இக்கூட்டத்தில் அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலர் மணிவாசன், அறநிலையத்துறை கமிஷனர் முரளீதரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

