/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
24 அடியில் பெரிய அளவிலான கைத்தறி பட்டு பூங்காவில் புதிய முயற்சி
/
24 அடியில் பெரிய அளவிலான கைத்தறி பட்டு பூங்காவில் புதிய முயற்சி
24 அடியில் பெரிய அளவிலான கைத்தறி பட்டு பூங்காவில் புதிய முயற்சி
24 அடியில் பெரிய அளவிலான கைத்தறி பட்டு பூங்காவில் புதிய முயற்சி
ADDED : ஜன 24, 2024 01:10 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, கீழ்கதிர்பூரில் பட்டு பூங்கா இயங்கி வருகிறது. இங்கு, தனியார் பட்டு சேலை உற்பத்தியாளர்கள், கூடாரங்கள் அமைத்து, நுாற்றுக்கணக்கான கைத்தறியில், பட்டு சேலை உற்பத்தி செய்கின்றனர். நெசவாளர்கள், உதவியாளர்கள், டிசைனர்கள் என, 500க்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர்.
வழக்கமான ஆறு அடி அகலம் கொண்ட கைத்தறிக்கு பதிலாக, 24 அடி கொண்ட பெரிய அளவிலான கைத்தறியை, பட்டு பூங்காவில் அமைத்து புதிதாக முயற்சி செய்துள்ளனர்.
பட்டு பூங்காவின் வடிவமைப்பாளர் எஸ்.குமாரவேல் கூறியதாவது:
கோவில்களில், வணிக வளாகங்களில் காட்சிப்படுத்தப்படும் பெரிய அளவிலான வாலாங்கி சேலைகளை இந்த நவீன தறியில் நெய்ய முடியும். இந்த சேலை முழுக்க முழுக்க கைத்தறியிலேயே நெய்யப்படுகிறது.
எத்தனை அடி நீளம் வேண்டுமானாலும் இந்த தறியில் நெய்யலாம். இந்த பிரத்யேக தறி, 24 அடி கொண்டதாகும். வழக்கமான கைத்தறி, ஆறு அடி அகலம் இருக்கும்; ஒரு சேலை நெய்ய 10 நாட்களாகும்.
அதே சேலை, இந்த தறியில் ஒரே நாளில் நெய்ய முடியும். ஆனால், இந்த கைத்தறியில் நான்கு அல்லது ஐந்து பேர் சேர்ந்து தான் நெய்ய வேண்டும். எந்த ரகமாக இருந்தாலும், ஒரே நாளில் பட்டு சேலையை நெய்து முடிக்க முடியும்.
ஆர்டர் வரும்போது குறித்த நேரத்தில் இந்த தறியில் பட்டு சேலை நெய்து தர முடியும். இந்த கைத்தறியை அமைக்க மூன்று மாதங்களானது.
அச்சு கட்டுபவர்கள், நெசவாளர்கள், டிசைனர்கள் என அனைவரின் கூட்டு முயற்சியால் இந்த பெரிய தறியை அமைக்க முடிந்தது.
இயல்பாக ஒரு பட்டு சேலை, 50 இன்ச் அகலமும், 240 இன்ச் நீளம் கொண்டதாக இருக்கும். இந்த பிரத்யேக தறியில், 240 இன்ச் அகலம் கொண்ட சேலையாக நெய்கிறோம்.
அதாவது, 20 அடி அகலம்கொண்ட தறியாக அமைக்கப்பட்டுள்ளது. கோவில், நடிகர்களின் புகைப்படம் என சகல டிசைன்களையும் இந்த தறி வாயிலாக பட்டு சேலையில் கொண்டு வர முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.

