/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சி கச்சபேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம் வான்மழை பொழிந்ததால் பக்தர்கள் பக்தி பரவசம்
/
காஞ்சி கச்சபேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம் வான்மழை பொழிந்ததால் பக்தர்கள் பக்தி பரவசம்
காஞ்சி கச்சபேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம் வான்மழை பொழிந்ததால் பக்தர்கள் பக்தி பரவசம்
காஞ்சி கச்சபேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம் வான்மழை பொழிந்ததால் பக்தர்கள் பக்தி பரவசம்
ADDED : பிப் 01, 2024 11:22 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.
காஞ்சிபுரம் ராஜ வீதியில் அமைந்துள்ள கச்சபேஸ்வரர் கோவில் புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த காஞ்சி நகர செங்குந்த மகாஜன சங்க சமுதாயத்தினர் மற்றும் ஹிந்து சமய அறநிலையத் துறையினர் முடிவு செய்தனர்.
அதன்படி கும்பாபிஷேகத்தையொட்டி, திருப்பணி துவங்க, 2022, பிப்., 11ல் பாலாலயம் நடந்தது. இதில், 3 கோடி ரூபாய் செலவில் ராஜகோபுரம் மற்றும் கோவிலில் உள்ள பிற கோபுரங்கள், பஞ்ச சந்தி விநாயகர், துர்க்கை, நடராஜர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் சன்னிதி வாசற்படிகள் முழுதும் பித்தளை கவசம் பொருத்தப்பட்டுள்ளது.
பஞ்சமூர்த்தி வீதியுலா
கோவில் வளாகத்தில் பிரமாண்ட யாகசாலை மண்டபம் அமைக்கப்பட்டு, கோவில் சர்வசாதகம் சுப்பிரமணிய குருக்கள், இஷ்டசித்தி பிரபாகர குருக்கள் தலைமையில், 30 யாகசாலைகளில், 4 நவ குண்டங்கள், 63 யாக குண்டங்களில் 160 சிவாச்சாரியார்கள் பங்கேற்ற யாகசாலை பூஜை, கடந்த 28ல் துவங்கியது.
கும்பாபிஷேக தினமான நேற்று, காலை 9:00 மணிக்கு கலச புறப்பாடு நடந்தது.
அதை தொடர்ந்து, காலை 10:22 மணிக்கு, விமானம், ராஜகோபுரம், ரிஷிகோபுரம் உள்ளிட்ட பிற சன்னிதி கோபுரங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தி வைத்தனர். விழாவில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து மூலவர், பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது.
மதியம் 12:00 மணிக்கு மஹா அபிஷேகமும், மாலை 6:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும், இரவு 8:00 மணிக்கு பஞ்சமூர்த்தி வீதியுலா நடந்தது.
கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாட்டை காஞ்சி நகர செங்குந்த மகாஜன சங்க நிர்வாக குழு தலைவர் சிவகுரு, செயலர் ஆறுமுகம், பொருளாளர் குமரவேல், கச்சபேஸ்வரர் கோவில் திருப்பணிக்குழு தலைவர் பெருமாள், செயலர் சுப்பராயன், பொருளாளர் சிற்றம்பலம், ஹிந்து சமய அறநிலையத்துறையினர் இணைந்து செய்திருந்தனர்.
கும்பாபிஷேக விழாவில் அமைச்சர் அன்பரசன், காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி, போலீஸ் எஸ்.பி., சண்முகம், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், ஹிந்து சமய அறநிலையத் துறை இணை கமிஷனர் வான்மதி, உதவி கமிஷனர் லஷ்மிகாந்த பாரதிதாசன், செயல் அலுவலர்கள் நடராஜன், தியாகராஜன், செந்தில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கும்பாபிஷேகம் நடப்பதற்கு முன், நகர் முழுதும் மேகமூட்டமாக காணப்பட்டது. வேதவிற்பன்னர்கள் கலசங்களில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்துவதற்கு முன், வானில் இருந்து மழைத்துளிகள் விழுந்தன. இதனால், வானத்தில் இருந்து வருண பகவானே நேரில் வந்து கச்சபேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்ததாக பக்தர்கள் பக்தி பரவசத்துடன் நெகிழ்ச்சியடைந்தனர்.
நெரிசலில் நடிகை ரோஜா
சினிமா நடிகையும், ஆந்திர மாநில அமைச்சருமான ரோஜா , கும்பாபிஷேகத்தை காண, கணவர் செல்வமணியுடன் கச்சபேஸ்வரர் கோவிலுக்கு வந்திருந்தார். கோவில் ரிஷி கோபுரத்திற்கு நடந்த கும்பாபிஷேகத்தில் பங்கேற்றார்.
கோவில் கிழக்கு பகுதி நுழைவாயில் வாயிலாக வெளியே செல்ல முயன்றார். அப்போது, அவ்வழியாக கோவிலுக்குள் செல்ல பக்தர்கள் முண்டியடித்தனர். இதனால், நடிகை ரோஜா கூட்ட நெரிசலில் சிக்கினார். போலீசார் நெரிசலை சீரமைத்து, அமைச்சர் ரோஜாவை பாதுகாப்புடன் வழியனுப்பி வைத்தனர்.
திருடர்களிடம் இருந்து நகைகளை பாதுகாக்க, போலீசார் ஒலிப்பெருக்கி வாயிலாக நகைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ளும்படி அறிவுறுத்தினர். பெண் போலீசார், பெண்களுக்கு சேப்டி பின் வழங்கி, நகைகளை சேலையுடன் இணைக்க அறிவுறுத்தினர்.
கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு பல்வேறு இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது. காஞ்சிபுரம் போலீஸ் எஸ்.பி., சண்முகம் தலைமையில், டி.எஸ்.பி., ஜூலியஸ் சீசர் மேற்பார்வையில் நுாற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

