sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

கழிவுகள் கலப்பதால் செம்பரம்பாக்கம் ஏரி நீர்...மாசு!: எதிர்காலத்தில் குடிநீர் விஷமாகும் அபாயம்

/

கழிவுகள் கலப்பதால் செம்பரம்பாக்கம் ஏரி நீர்...மாசு!: எதிர்காலத்தில் குடிநீர் விஷமாகும் அபாயம்

கழிவுகள் கலப்பதால் செம்பரம்பாக்கம் ஏரி நீர்...மாசு!: எதிர்காலத்தில் குடிநீர் விஷமாகும் அபாயம்

கழிவுகள் கலப்பதால் செம்பரம்பாக்கம் ஏரி நீர்...மாசு!: எதிர்காலத்தில் குடிநீர் விஷமாகும் அபாயம்


ADDED : பிப் 01, 2024 11:06 PM

Google News

ADDED : பிப் 01, 2024 11:06 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்றத்துார்: செம்பரம்பாக்கம் ஏரியில் தொழிற்சாலைக்கழிவுகள், குடியிருப்பு கழிவுநீர் கலப்பதால் ஏரிநீர் மாசடைந்து வருகிறது. இதே நிலை நீடித்தால், எதிர்காலத்தில் குடிநீர் ஆதாரமான செம்பரம்பாக்கம் நீர் விஷமாகும் ஆபத்து உள்ளது.

சென்னை குடிநீர் ஆதாரமாக செம்பரம்பாக்கம் ஏரி உள்ளது. இந்த ஏரி காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட எல்லையில் 6,300 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. செம்பரம்பாக்கம் ஏரி 3.645 டி.எம்.சி., கொள்ளளவு கொண்டது. நீர்மட்ட உயரம் 24 அடி கரை நீளம் 8.30 கி.மீ.,; 10 மதகு கொண்டது.

ஏரியின் மேற்புறப் பகுதியில் ஸ்ரீபெரும்புதுார் அருகே இருங்காட்டுக்கோட்டை சிப்காட் தொழிற்பூங்கா உள்ளது. இதுதவிர ஏரியின் மேற்புற பகுதியில் காட்டரம்பாக்கம், இருங்காட்டுக்கோட்டை, கீவளூர், தண்டலம், மேவளூர்குப்பம், செம்பரம்பாக்கம் ஆகிய ஊராட்சிகள் உள்ளன.

இருங்காட்டுக்கோட்டை சிப்காட் தொழிற் பூங்கா மற்றும் மேற்கண்ட பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் கால்வாய் மூலம் செம்பரம்பாக்கம் ஏரியில் பல ஆண்டுகளாக கலந்து வருகிறது.

கழிவுகள் எரிப்பு


மேலும், தொழிற்சாலையின் திடக் கழிவுகள் காலி நிலத்தில் கொட்டி எரிக்கப்படுகிறது. இவையும் மழைக் காலத்தில் நீரில் அடித்து வரப்பட்டு கலப்பதால் செம்பரம்பாக்கம் ஏரி நீர் மாசடைந்து வருகிறது.

இதேபோக்கு நீடித்தால், எதிர்காலத்தின் ஏரியின் நீர் மிக மோசமான நிலைக்கு சென்றுவிடும். மக்களின் குடிநீர் நீர் ஆதாரமான செம்பரம்பாக்கம் ஏரிநீரில் கழிவுகள் கலப்பதை தடுக்க அரசு தனி கவனம் செலுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

பொதுப்பணி துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'செம்பரம்பாக்கம் ஏரியில் கழிவுகள் கலப்பதாக புகார்கள் வருகின்றன. கழிவுகள் கொட்டுபவர்கள் மீது காவல் துறையில் புகார் அளித்து நடவடிக்கை எடுக்கப்படும். அரசுக்கு அறிக்கை அனுப்பி கழிவு நீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என்றார்.

நேரில் ஆய்வு


காஞ்சிபுரம் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் பிரகாஷ் கூறியதாவது:

தொழிற்சாலை கழிவு நீர் முறையாக சுத்திகரிக்கப்படுகின்றன. அவை வெளியேற்றப்படுவதில்லை. தொழிற்சாலையில் இருந்து திடக்கழிவுகளை எடுத்து செல்வோரை அழைத்து கூட்டம் நடத்தி, பொது இடத்தில் கழிவுகளை கொட்டி எரிக்கக் கூடாது என அறிவுறுத்தியுள்ளோம்.

கழிவுகள் நீர்நிலைகள், பொது இடத்தில் கொட்டப்பட்டிருந்தால், நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.-

இவ்வாறு அவர் கூறினார்.

குளிப்போருக்கு உடல் அரிப்பு


செம்பரம்பாக்கம் ஏரிநீர் 25 ஆண்டுகளுக்கு முன் குடித்து வந்தோம். தெளிவாக இருந்த ஏரி தண்ணீர் தற்போது கலங்கலாக உள்ளது. ஏரியில் குளித்தால் உடல் அரிப்பு ஏற்படுகிறது. தண்ணீரின் தரம் 30 சதவீதத்திற்கு மேல் மாசடைந்து விட்டது. தற்போது அரசு விழித்துக் கொண்டு கழிவுநீர் கலப்பதை தடுத்து நிறுத்தவில்லை என்றால் தண்ணீர் தரம் படுமோசமான நிலைக்கு சென்றுவிடும்.

-ஆர்.சந்தோஷ், செம்பரம்பாக்கம்.

எங்கெங்கு பிரச்னைகள்!


l கீவளூர் ஊராட்சியில் சேகரமாகும் குப்பை செம்பரம்பாக்கம் ஏரி உள்ளே கொட்டி எரிக்கப்படுகிறது. மேலும், தொழிற்சாலை, குடியிருப்பு கழிவுநீர் கீவளூர் வழியாக செம்பரம்பாக்கம் ஏரிக்குள் செல்கிறது
l இருங்காட்டுக்கோட்டை சிப்காட்டில் உள்ள வடிகால்வாயில் சேகரமாகும் கழிவுநீர் மழைக்காலத்தில் செம்பரம்பாக்கம் ஏரிக்கு அடித்து செல்லப்படுகிறது
l மேவளூர்குப்பம் ஊராட்சியில் எல்லையில் உள்ள தொழிற்சாலைகள், சமையல் கூடத்தில் இருந்து வெளியேறும் கழிவுகள் கிருஷ்ணா கால்வாய் வழியே செம்பரம்பாக்கம் ஏரிக்கு செல்கிறது
l சென்னை-- - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்கள் கழிவுகளை செம்பரம்பாக்கம் ஏரியின் மேற்புற பகுதியில் தண்டலம் அருகே வீசி செல்கின்றனர். இதனால் ஏரியின் மேற்புற பகுதி முழுதும் பிளாஸ்டிக் கழிவுகளாக உள்ளன
l தண்டலம், செட்டிப்பேடு, செம்பரம்பாக்கம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து வெளியேறும் கழிவுகள் செம்பரம்பாக்கம் ஏரிக்கு செல்கிறது
l குன்றத்துார் அருகே நந்தம்பாக்கம் அருகே ஏரியின் உள்ளே ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டுள்ளனl செம்பரம்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட பாப்பான்சத்திரம், பழஞ்சூர், செம்பரம்பாக்கம் கிராம வழியே கழிவுநீர் ஏரிக்குள் செல்கிறது. குப்பை கழிவுகள் ஏரியின் உள்ளே கொட்டி எரிக்கப்படுகின்றன
l நந்தம்பாக்கம், கீவளூர், மேவளூர்குப்பம், செம்பரம்பாக்கம் ஊராட்சி பகுதியில் ஏரியின் உள்ளே பிளாஸ்டிக் குப்பை கொட்டி எரிக்கப்படுகின்றனl புதுப்பேடு மற்றும் காட்டரம்பாக்கம் பகுதியில் தொழிற்சாலை கழிவுகொட்டி எரிக்கப்படுகிறது
l ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் கிடப்பில் உள்ளதால், குடியிருப்பு பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுகள் செம்பரம்பாக்கம் ஏரியின் பிரதான நீர் வரத்து கால்வாயான சவுத்திரி கால்வாய் மூலம் செம்பரம்பாக்கம் ஏரிக்குள் செல்கிறது








      Dinamalar
      Follow us