/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
விபத்தில் வாலிபர் பலி உறவினர்கள் மறியல்
/
விபத்தில் வாலிபர் பலி உறவினர்கள் மறியல்
ADDED : ஜன 18, 2024 09:29 PM

உத்திரமேரூர்:உத்திரமேரூர் பேரூராட்சி, திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் துரைராஜ், 28. இவருக்கு மனைவி மற்றும் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.
துரைராஜ், மாங்கால் கூட்டுச்சாலையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார். வழக்கம் போல நேற்று, காலை 5:00 மணிக்கு, இருசக்கர வாகனத்தில், தொழிற்சாலைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, உத்திரமேரூர் - -வந்தவாசி சாலையில், பங்களாமேடு அருகே எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
உத்திரமேரூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், பிரேத பரிசோதனை முடிந்த துரைராஜின் உடல் அமரர் ஊர்தி வாகனத்தில் நேற்று மாலை கொண்டு வரப்பட்டது.
அப்போது, சடலத்தை வாங்க மறுத்த உறவினர்கள், துரைராஜ் இறப்புக்கு காரணமான விபத்து ஏற்படுத்திய வாகனம் மற்றும் விபத்தை ஏற்படுத்திய நபரை கைது செய்யாததை கண்டித்து, உத்திரமேரூர் -வந்தவாசி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உத்திரமேரூர் போலீசார் உறுதி அளித்ததை தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

